வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 மார்ச், 2010

தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மூன்றிலொன்றாகக் குறையும்!

சம்பந்தன் - சுரேஸ் தோல்வியின் விளிம்பில்!!

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

2010 ஏப்ரல் 08ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், ஏற்கெனவே இருந்த 22 உறுப்பினர்களிலிருந்து 7 அல்லது 8 ஆகக் குறையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுயாதீனமான சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் பெரும்பாலும் வடக்கு – கிழக்கிலுள்ள தொகுதிகளில் வாழும் வயதும் அனுபவமும் வாய்ந்த வாக்காளர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளன.

கடந்த பொதுத்தேர்தல் (2004 ஆண்டு) நடந்த காலத்தில், வடக்கு கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் உச்சக் கட்டத்தில் இருந்தது. அதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் அப்பிரதேசங்களில் சுதந்திரமாகப் போட்டியிடக்கூடிய நிலைமை இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி தமிழ்ப் பொதுமக்களுக்கும் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. தமிழ் மக்களது வாக்குகள் புலிகளினால் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டு, புலிகளினால் தமது பினாமிகளாக தேர்தலில் நிறுத்தப்பட்ட கூட்டமைப்பினருக்கு போடப்பட்டு, கள்ள வாக்குகளினால் கூட்டமைப்பின் 22 பிரதிநிதிகளைப் பாராளுமன்றம் அனுப்ப, வழி சமைக்கப்பட்டது.

புலிகளின் உத்தரவை மீறி கொடிகாமம் சென்று, வன்னி வாக்காளர்களுக்கான கொத்தணி வாக்குச் சாவடியில் வாக்களித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் கைகளை வெட்டி, புலிகள் அவருக்குத் தண்டனை கூட வழங்கினர். யாழ்ப்பாணத்திலும் பலரின் விரல்களைப் புலிகள் வெட்டி எறிந்தனர். புலிகளின் இந்த அராஜகச் செயல்களையும், புலிகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் சேர்ந்து தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்ததையும், தேர்தலைக் கண்காணிக்க வந்த ஐரோப்பிய யூனியனின் குழுவும், பப்ரல் போன்ற உள்ளுர் கண்காணிப்புக் குழுக்களும் அந்த நேரத்தில் வன்மையாகக் கண்டித்தும் இருந்தன.

கடந்த பாராளுமன்றத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக ஒரு சிறு துரும்பைத்தன்னும் தூக்கிப் போடவில்லை. அவர்கள் புலிகளின் ஆணைப்படி செயல்பட்டு, இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண அரசாங்கமும், சர்வதேச சமூகமும் எடுத்த சகல நடவடிக்கைகளையும் குழப்பி வந்தனர். தமிழ்ப் பொதுமக்கள் புலிகளினால் யுத்தமுனையில் வகைதொகையில்லாமல் பலியிடப்பட்டுக் கொண்டிருக்க, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளை எட்டியும் பார்க்காமல், தமது குடும்பங்களை வெளிநாடுகளில் பாதுகாப்பாகத் தங்க வைத்துவிட்டு, தாமும் வெளிநாடுகளில் சுற்றுலாக்களில் ஈடுபட்டனர்.

வன்னி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது, மக்களை புலிகள் தமது பாதுகாப்புக் கேடயங்களாகப் பிடித்து வைத்திருந்த போது கூட தமிழ் கூட்டமைப்பு அம்மக்களின் விடுதலைக்காக ஒரு சிறு வேண்டுகோளைக்கூட புலிகளிடம் விடுக்கவில்லை. பதிலுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தங்கியிருந்த கூட்டமைப்பு எம்.பிக்கள், புலிகளின் தலைவர்களை அழிவிலிருந்து பாதுகாக்க படாதபாடுபட்டனர். ஆனால் அவர்களது சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்து, 2009 மே 18ம் திகதி புலிகள் இயக்கம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் இறுதியாகவும், அறுதியாகவும் அழித்து ஒழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் புலிப்பாசிசத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கப்பட்டனர்.

புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் செய்வதறியாது திகைத்த கூட்டமைப்பினர், உண்மையில் போக்கிடம் அற்றவர்களாகவே இருந்தனர். வெளிநாடுகளில் தங்கியிருந்த பல கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடு திரும்பவே அஞ்சினர். புலிகள் மனித குலத்துக்கு எதிராக செய்த அத்தனை நடவடிக்கைகளையும் ஆதரித்த காரணத்துக்காக, கூட்டமைப்பு எம்.பிக்கள் அனைவரும் அரசாங்கத்தால் கைதுசெய்யப்படுவர், செய்யப்பட வேண்டும் என்றே தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் எப்பொழுதும் தங்கள் நலன்களுக்காக எவ்வித காட்டிக்கொடுப்பிலும் ஈடுபடத் தயங்காத, புலிகளும் கூட்டமைப்பினரும் அரசாங்கத்தின் பெருந்தன்மையையும், ஜனநாயக உணர்வையும் பயன்படுத்தி, அரசின் சில தரப்புகளுடன் பேரம் பேசிச் சமரசம் செய்துகொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன், மீண்டும் தமது அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடவும் வழி தேடிக் கொண்டனர்.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பினா தமது கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று, தம்மைத்; திருத்திக் கொண்டனர் என்றால், அதுதான் இல்லை. இடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த, இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பினர் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. கடந்த காலத்தில் புலிகளின் அழிவு யுத்தத்துக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கிய புலம்பெயர் புலித்தமிழர்களைப் பார்த்து, அதி;ல் ஒரு சிறு தொகையைத் தன்னும் முகாம்களில் அல்லல்படும் மக்களுக்கு வழங்கும்படி எவ்வித வேண்டுகோளையும் கூட கூட்டமைப்பினர் விடுக்கவில்லை. மாறாக, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, இலங்கை அரசாங்கம் பல சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வந்த மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை குறை சொல்வதிலேயே காலம் கடத்தினர்.

புலிகளின் கொலைகாரச் செயல்களைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வந்ததின் காரணமாக, புலிகளின் அழிவின் பின்னா, என்ன முகத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் செல்வது என்று திண்டாடிக் கொண்டிருந்த கூட்டமைப்பு தலைவர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. அதிலும்கூட, இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தன்னுடன் ஒத்துழைத்துச் செயல்படும்படி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நீட்டிய நட்புக்கரத்தை உதறிக்கள்ளிய கூட்டமைப்பினர், தீவிர சிங்கள இனவாதியும், தமிழ் மக்களை அழித்தொழிப்பதில் முனைப்புக் காட்டி நின்றவருமான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிக்கப் போய் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டதுடன், தமிழ் மக்களுக்கு ;உதைத்த காலை நக்குபவர்கள்’ என்ற அவமானத்தையும் தேடிக் கொண்டனர்.

கூட்டமைப்புக்குள் கடந்த காலத்தில் சம்பந்தன்-மாவை சேனாதிராஜா-சுரேஸ் பிரேமச்சந்தரன் குழுவினர் எடுத்த தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளால், இன்று கூட்டமைப்பு நான்கு அணிகளாகச் சிதறுண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். சம்பந்தன் தலைமையால் ஓரம் கட்டப்பட்டோரில் ஒரு பகுதியினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலும், இன்னொரு அணி சிவாஜிலிங்கம் தலைமையிலும், வேறு சிலர் பொதுசன ஐக்கிய முன்னணியிலும் போட்டியிடுகின்றனர். சம்பந்தன் தலைமையில் எஞ்சியுள்ளோர், புதுமுகங்கள் என்ற போர்வையில் கடந்த காலங்களில் வடபகுதி மக்கள் மீது பல்வேறு சூறையாடல்களையும், மோசடிகளையும் நடாத்திய சப்றா பினான்ஸ் சரவணபவன், முன்னாள் யாழ். மாநகரசபை ஆணையாளர் சீ.வி.கே.சிவஞானம் போன்றோரைச் சேர்த்துக் கொண்டு, யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டத்திலும் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் போட்டியிடுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னதான் தமது பழைய புளித்துப்போன தமிழ் தேசியவாதக் கோசங்களை எழுப்பிக் கொண்டு மீண்டும் தேர்தலில் தமிழ் மக்கள் முன் வந்து நின்றாலும், இம்முறை மக்கள் அவர்களது சுத்துமாத்துகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதே தேர்தல் கள நிலவரமாக இருக்கின்றது. இந்த உண்மையை வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு தேர்தல் தொகுதியையும் சுற்றி வந்தால் ஒருவர் அறிந்து கொள்ளலாம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இன்று தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை தீர்ந்து, ஐக்கியமான இலங்கை நாட்டுக்குள் ஏனைய இன மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வதையே தமது விருப்பமாகக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை நிலவரமாகும். அதை அடைவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பழைய பிரிவினைவாத பிற்போக்கு தலைமையால் முடியாது என்பதே அவர்களது திடமான முடிவாகும்.

எனவே இம்முறைத் தேர்தலில் ‘வடக்கு கிழக்கில் உள்ள எல்லாத் தொகுதிகளிலும் எம்மை வெல்ல வையுங்கள், நாம் பாராளுமன்றம் சென்று கிழியோ கிழியென்று கிழிக்கிறோம்’ என்றோ, ‘தமிழினத்தின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்ட எமக்கு வாக்களியுங்கள்’ என்றோ, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பார்த்து உரக்கக் கூவியோ அல்லது கெஞ்சி மன்றாடியோ எதுவும் நடக்கப் போவதில்லை. ஆக மிஞ்சி மிஞ்சிப் போனால் வடக்கு கிழக்கு முழுவதும் 7 அல்லது 8 ஆசனங்களே கூட்டமைப்புக்கு கிடைக்கக் கூடிய சூழலே நிலவுகின்றது. யாழ்.மாவட்டம் - 2, வன்னி – 2, திரிகோணமலை – 1, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் - 2 என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு ஆசனங்கள் கிடைக்கக் கூடிய நிலைதான் காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக வழமை போல திரிகோணமலையில் போட்டியிடும் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன், இம்முறை அங்கு மண் கவ்வக்கூடிய நிலையே காணப்படுவதாக விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தோல்வியைத் தழுவும் நிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது. அதற்குக் காரணம் இவர்கள் இருவருமே கடந்த காலங்களில் புலிகளின் உத்தரவுப்படி நடப்பதில் மும்முரமாக இருந்தவர்கள் என்பது ஒருபுறமும், மறுபுறம் புலிகள் அழிந்ததின் பின்னர் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு இம்முறைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காது, கூட்டமைப்புக்குள் புலி ஆதரவாளர்களை ஓரங்கட்டியவர்களும் இவர்களே என்பதும், அனைவருக்கும் தெரிந்த விடயமாக இருப்பதுதான். (இதில் சம்பந்தன் தான் தேர்தலில் தோல்வியுற்றாலும், தேசியப்பட்டியல் மூலம் எம்.பியாகி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்; தோல்வியடைந்தாலும், யார் கூடுதலான வாக்குகள் எடுத்துத் தோல்வியடைகிறாரோ, அவருக்கே தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்தின் தனது ஆதரவாளர்களிடம் கூறி வருவதாகத் தெரிய வருகிறது.)

எது எப்படியிருப்பினும், சுதந்திரம் பெற்ற நாள் முதல், முதலில் தமிழ் காங்கிரஸையும், பின்னர் தமிழரசுக் கட்சியையும், அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியயும், இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அந்தக் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, காலத்துக்குக் காலம் ஏகப் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பி வந்த தமிழ் மக்கள், இம்முறை அந்தப் பாரம்பரியத்தை மாற்றி, சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் செய்வது போல, பல்வேறு கட்சிகளையும் சார்ந்தவர்கனை இம்முறை பாராளுமன்றம் அனுப்பக்கூடிய ஒரு சூழலே காணப்படுகின்றது. அவ்வாறு தமிழ் மக்கள் ஆரோக்கியமான முறையில் செயல்படுவார்களானால், அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைவதுடன், தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக அரசியல் முறைமை வளர்ச்சியடைவதற்கான ஆரம்பப் புள்ளியாகவும் இருக்கும். இல்லையேல் ‘பழைய குருடி கதவைத் திறவடி’ கதைதான் மீண்டும்!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’