பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது. பொலிஸ் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை. கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும், நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் வெளிப்படையாகத் தெரிகின்றன. இதற்கு கனடாவின் புலனாய்வுத்துறைச் செயற்பாடுகள் முக்கிய காரணமாக அமைகின்றன.
ஆர்.சி.எம்.பி என்றால் கனடா வாழ் ஈழத்தமிழர் மத்தியில் ஒரு வகை அச்ச உணர்வு காணப்படுகிறது. தமிழர்களைக் குறிவைத்து கனடாவின் இந்த பொலிஸ் அமைப்பு எடுக்கும் நடவடிக்கைகள் பல தரப்பட்டனவாக அமைகின்றன. கனடா ஒரு குடியேற்ற வாசிகளின் நாடு உலகின் பல கோடிகளில் இருந்து கனடாவை நோக்கி வந்த மக்கள் குடியேறியுள்ளனர். இதனால் கனடாவைப் பல்லின நாடென்றும் பன்மொழி நாடென்றும் அழைப்பார்கள். வெள்ளை இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாகக் கனடா இடம் பெற்றாலும் அங்கு வெள்ளையர் அல்லாத வேறு பலரும் வாழ்கிறார்கள் இவர்களில் ஈழத்தமிழர்களும் ஒருவராவர்.
ஆனால் கேள்வி என்ன வென்றால் ஏன் தான் தமிழர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். கல்வியறிவு, சுயமுயற்றி, தாயகப் பற்று, இன மானம் காப்பதில் முனைப்பு, விடுதலை வேட்கை போன்ற பல சீரிய பண்புகள் தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவற்றை மொத்தமாக அல்லது தாயகப் பற்று, விடுதலைப் பற்று என்பனவற்றையாவது ஒழித்துவிட வேண்டும் என்ற வேணவா கனடாவின் பொலிஸாரின் செயற்திட்டத்தில் காணப்படுகிறது. ஆர்.சி.எம்.பியின் செயற்திட்டங்கள் அனைத்தும் தமிழர்களின் தாயகப் பற்றையும், தாயக விடுதலை வேட்கையும் பறிக்கும் நோக்குடன் இயங்குகின்றன. தமிழர்களின் இன ஒற்றுமையைக் குலைத்து விட்டால் அவர்களுடைய பலம் குறைந்து விடும், அவர்களுடைய குரல் தணிந்து விடும் என்று ஆர்.சி.எம்.பி எதிர்பார்க்கிறது.
ஆர்.சி.எம்.பி அமைப்பிற்குப் பக்கபலமாக இலங்கையின் கனடாத் தூதரகம் செயற்படுகின்றது. இராசதந்திர நெருக்கம் என்ற போர்வையில் இலங்கைத் தூதரகம் தனது வரம்பை மீறிய செயற்பாடுகளை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஏவி விடுகிறது. தமிழர்களுடைய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் ஆர்.சி.எம்.பியின் நடவடிக்கைகளுக்குச் இலங்கைத் தூதரகம் துணை போகிறது. தமிழர்கள் ஆபத்தானவர்கள்; அவர்களுடைய வருகையால் கனடாவின் இறையாண்மைக்கு இன்னல் ஏற்படும் என்று அண்மையில் கனடாவிற்கான இலங்கைத் தூதுவர் கூறியதை இவ்விடத்தில் நினைவுகூரவேண்டும்.
பிறிதோர் ஜனநாயக நாட்டிலும் நடவாத நடவடிக்கை ஒன்றை ஆர்.சி.எம்.பி தமிழர்கள் தொடர்பாக நடத்துகிறது. மறைந்த சோவியத் ஒன்றியம், கிழக்கு ஜேர்மனி போன்றவற்றில் நடந்த குடிமக்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கையை ஆர்.சி.எம்.பி மேற்கொள்கிறது. தமிழர்களுடைய வாழ்விடங்களுக்குத் தகவல் சேகரிப்பதற்காக ஆர்.சி.எம்.பி அதிகாரிகள் அழைக்கப்படாத வருகையாளர்களாகச் செல்கின்றனர். ஒரு வீட்டில் பெற்ற தகவலை இன்னுமொரு வீட்டில் பெற்றதாக சொல்லிச் சிண்டு முடிவதோடு முரண்பாடுகளையும் மூட்டி விடுவார்கள். தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து அதையே போட்டுக்காட்டி மிரட்டுவார்கள். ஒரு பத்து நிமிடம் உங்களோடு நட்புரிமையோடு பேசிவிட்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு 3 மணிநேரம் கடந்தாலும் வெளியேற மாட்டார்கள். இறுதியில் ஏதேனும் தகவல் கிடைத்தால் எங்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறுவதோடு தங்கயுளுடைய விசிற்றிங் காட்டையும் கொடுத்துச் செல்வார்கள். அனேகமான கனடாத் தமிழர்கள் வீட்டில் ஆர்.சி.எம்.பி விட்டுச் செல்லும் இந்த ரக அட்டைகள் காணப்படுகின்றன. இது தேவைதானா? வெள்ளை இனத்தவர்களுக்கு இப்படி நடக்கிறதா?
அண்மையில் ஆயுதக் கொள்வனவு தொடர்பாகச் சில தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அறிவீர்கள். இவர்களை வைத்துக் கொண்டு பிற அப்பாவிகளை மாட்டிவிடும் நடவடிக்கைகளில் ஆர்.சி.எம்.பி முனைப்பாக ஈடுபடுகிறது. இதனால் தமிழர்கள் மத்தியில் பரவலான பயப்பீதி காணப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு என்று கனடா பற்றிச் சொல்லப்படுவதற்கு மாறான செயல்கள் கனடா தமிழர் வாழ்வில் நடக்கின்றன. கனடா தமிழர் மத்தியில் கொதிப்பும் அதிருப்தியும் காணப்படுகிறது. இதை நம்புவதற்குக் கடினமாக இருப்பதாக கூறினாலும் இது முற்றிலும் உண்மை.
தாயகத்தில் நிம்மதியாக வாழ முடியாமல் கனடாவில் தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு கனடா அரசின் முக்கிய அலகான ஆர்.சி.எம்.பி தொல்லை கொடுப்பதையும் நிம்மதியைக் கெடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அகதிகளைத் துன்புறுத்தும் நாடுகள் பட்டியலில் கனடாவுமா? வெளி உலகிற்கு இன்முகம் காட்டி நல்ல பெயர் வாங்கும் இந்த நாடு இப்படிச் செய்வதை உலக சமுதாயம் மன்னிக்கத் தயாரா? கனடாவில் குடியுரிமை கோருபவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குடிவரவுத் திணைக்களமா அல்லது ஆர்.சி.எம்.பியின் உளவுத்துறையா என்ற முக்கிய வினாவும் இத்தொடர்பில் எழுகின்றது. தமிழ் மக்களின் அனுபவ அடிப்படையில் பார்த்தால் ஆர்.சி.எம்.பி தான் தீர்மானிக்கும் சக்தியாக இடம் பெறுகிறது. அதிகம் பேருடைய குடியுரிமை வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவதற்கும் ஆர்.சி.எம்.பி தான் காரணம் என்பது வெளிப்படை.
இலங்கைத் தூதரகத்தின் கைப்பொம்மையாக ஆர்.சி.எம்.பி செயற்படுகிறது என்ற பலத்த சந்தேகம் தமிழர்கள் மத்தியில் கடந்த சில வருடங்களாக இருக்கிறது. ஆர்.சி.எம்.பி அதிகாரிகள் தமிழர் வீடுகளுக்கு வரும்போது அது நடத்தும் விசாரணைகளின் போதும் எழுப்பப்படும் சில பிரத்தியேக வினாக்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. நாசனல் போஸ்ற் என்ற தீவிர பழமைவாதப் பத்திரிகையுடன் இலங்கைத் தூதரகம் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவருகின்றது. இந்தப் பத்திரிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளும், தலையங்கமும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான விசமக் கருத்துக்களை விதைக்கின்றன. இலங்கையில் பிரசுரமாகும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ஆங்கிலப் பத்திரிக்கைகளுக்கு நிகரானதாக நாசனல் போஸ்ற் இடம் பெறுகிறது.
ஈழத்தமிழர்களின் இன உணர்வை வெளிப்படுத்தும் தேசிய தினங்களின் போது ஒன்று கூடல்களையும், உணர்வு பூர்வமான நிகழ்வுகளையும் தடுப்பதில் ஆர்.சி.எம்.பி முனைப்பாக ஈடுபடுகிறது. இதற்கு இலங்கைத் தூதரகத்தின் ஒத்துழைப்பும் இருக்கிறது. சென்ற வருட மாவீரர் நாள் நிகழ்வுக்கு (2009) வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு சீமான் அவர்களை ஆர்.சி.எம்.பி நாடு கடத்தியது. திரு சீமானின் வருகையை ஒழுங்கு செய்த கனடா தமிழர்களையும் ஆர்.சி.எம்.பி உளவுத்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. ஒன்று கூடல் உரிமை, பேச்சு உரிமை, கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை என்பன கனடாத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டடுள்ளன. இது தொடர்பில் ஜனநாயக நாடுகள் பட்டியலில் கனடா எப்படி இடம் பிடித்தது என்று கேட்பது நியாயமாகும்.
தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் வருடா வருடம் மாவீரர் நாள் நவம்பர் 27ம் நாள் தோறும் நடப்பது வழமை. தமிழர்களுக்கு இது மிகவும் புனிதமான நாள். மத நிகழ்விக்கு வழங்கும் பக்திப் பணியை விடுதலைப் போரில் ஆகுதியான தமது இனத்தின் மறவர்களுக்குத் தமிழர்கள் வழங்குகிறார்கள். இந்த நாளைச் சுதந்திரமான முறையில் கொண்டாடுவதைத் தடுக்கும் விதமாக உளவுத்துறையினர் பல அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிக்கின்றனர். இந்த நாளில் மாவீரர் நினைவுக்கு அஞ்சலி செய்யும் விதமாகப் பூக்கள் தூவுவதைக் கூடத் தடுத்து நிறுத்துகிறார்கள் உளவுத்துறையினர். இப்படியான நிகழ்வுகளை உலகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகின்றனர்.
உளவுத்துறையினரைச் சந்திக்க மறுப்போர் படும் இன்னல்கள் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மறுத்தவர்களின் பணி நிலை பறி போய் விட்டது. அவர்கள் பணியாற்றும் அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளும் உளவுத்துறையினர் குறிப்பிட்ட தமிழர்களை வெளியேற்றும்படி பணிக்கின்றனர். இதன் காரணமாக வேலை வாய்ப்புக்களை இழந்த தமிழர் பலர் இருக்கிறார்கள். இவர்கள் படும் துயரத்தையும், தாங்கமுடியாத பொருளாதாரச் சுமைகளையும், குடும்பப் பொறுப்பைச் சுமக்கமுடியாமல் தவிப்பதையும் இங்கு மிகவும் ஆணித்தரமாகக் குறிப்பிட வேண்டும்.
கனடாத் தமிழர்கள் மனிதநேயப் பணிகள் செய்யும் போது எதிர்கொள்ளும் தடங்கல்கள பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். மனித நேயப் பணிகளை முடக்கும் விதத்தில் இந்தப் பணியில் ஈடுபடுபவர்களை ஆர்.சி.எம்.பி உளவுத்துறையினர் படம் பிடிப்பதோடு, தெருவில் நடமாடும் போது பின் தொடர்ந்து செல்கிறார்கள். சாதாரணக் குற்றவாளிகள் போல் மனித நேயப்பணியாளர்கள் நடத்தப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட நேர்ந்த தமிழர்களை மிரட்டி மனித நேயப் பணியாளர்கள் பற்றிய தகவல்களை உளவுத்துறையினர் சேகரிக்கிறார்கள். இப்படியான தகவல்களின் அடிப்படையில் பல மனித நேயப் பணியாளர்கள் உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வெளி நாடுகளுக்குப் பயணம் செய்து கனடா திரும்பும் தமிழர்கள் உளவுத்துறையால் விமான நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுவதையும் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. கனடா தமிழர்கள் நாட்டிற்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று உளவுத்துறையினர் எதிர்பார்க்கிறார்களா? கனடாத் தமிழர்களுக்குப் வெளிநாட்டுப் பயணம் செய்யும் உரிமை இல்லையா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டிய தேவை மனித உரிமை ஆர்வலர்களுக்குக் கட்டாயமாக இருக்கிறது.
இதில் கூறப்பட்டவற்றைப் பார்க்கும் போது கனடா வாழ் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் உரிமைகள் இழந்து துயரப்பட்டது போல் தஞ்சம் புகுந்த நாட்டிலும் துன்பப்படுகிறார்கள் என்று தெரிகிறது. தனி மனித சுதந்திரத்தை மதித்து நடக்கும்படி கனடா அரசு தனது உளவுத்துறைக்கு வலியுறுத்த வேண்டும் என்று தமிழர்கள் எதிர் பார்க்கிறார்கள்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’