இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்று விசாரணை நடத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்ற ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனின் யோசனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இலங்கைக்கு எதிரான வகையில் பிரிட்டனில் புலி ஆதரவாளர்கள் அண்மையில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் கலந்துகொண்டார்.
அந்தக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கையின் படைத்தளபதிகளை யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை செய்தல்,
இலங்கையின் உற்பத்திகளை ஐரோப்பிய நாடுகளில் கொள்வனவு செய்யாதிருத்தல்,
தனிநாடு, சுயாட்சியை ஏற்றுக் கொள்ளுதல்
போன்றவையே அந்த மூன்று தீர்மானங்களுமாகும்.
இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் புலிகளுக்கு சக்தியளிக்கின்றன. அந்நாடுகளில் இடம்பெறும் தேர்தல்களின்போது புலி ஆதரவாளர் அமைப்புகளின் நிதி, வாக்குகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான உதவிகள் போன்றவற்றைப் பெறுவதற்காக அந்நாடுகள் மேற்கொள்ளும் இத்தகைய தீர்மானத்திற்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம்.
மறுபுறம் எமது நாட்டுக்கு எதிராக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் நட வடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளனவா என்று ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படவேண் டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த யோசனைக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம். பான் கீ மூனின் இந்த யோசனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதை அந்நாடுகள் எம்மிடம் கூறியுள்ளன. பான் கீ மூனின் இந்தத் தீர்மானமானது அவரது அலுவலகத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகும்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் ஜெனிவாவின் மனித உரிமைக் கவுன்ஸிலில் ஆராயப்பட்டது. அதில் அந்தக் குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்து இலங்கைக்கு ஆதரவாக அங்கு வாக்குகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், இங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்று விசாரிக்க மீண்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்?
எமக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கு எதிராகவே சர்வதேச நாடுகள் வாக்குகளை அளிக்கும். பான் கீ மூனின் தற்போதைய யோசனையை பாதுகாப்புச் சபைக்குத் தெரிவித்தால் அதற்கும் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும். என்றார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’