(சாகரன்)
ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கலுக்கு பின்னரான மற்றய தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சம்மந்தரும், சுரேஸ{ம் கூட தெரிசெய்யப்படுவது சந்தேகம் என்ற கள நிலமை ஆருடம் கூறுமளவிற்கு மாற்றி வருகின்றது. கதிரை பறிபோகும் என்ற செய்தி கொடுத்த ‘பேதி’ தமிழ் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் அன்றேல் தமிழ் பிரதிநித்துவம் பறிபோய்விடும் என பகிரங்கமாக ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர் சம்மந்தர் குழுவினர். அது மட்டும் அல்லாமல் இவர்களால் துரோகக் குழுக்கள் என்றழைக்கப்படும் ஏனைய தமிழ் கட்சி உறுப்பினர்களிடம் ‘வேண்டுதலும்’ இரகசியமாக விடுகின்றனர். கிழக்கில் தமது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்ய இரா. துரைரத்தினத்தை கொழுக்கி போட்டு இழுக்க எடுத்த சகுனி சிவசக்தி ஆனந்தனின் முயற்சிகளும் இந்த வகையானதே. வன்னியில் இம்முறை ஆனந்தன், அடைக்கலநாதன் போன்றோர் காணமல் போவது உறுதி என்ற இனிப்பான செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியை ஆதரித்த வடக்கு கிழக்கை மையமாக கொண்ட தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கில் மகிந்தாவிற்கு கிடைத்த எதிர் வோட்டுக்களில் மயங்கி தனித்து நிற்றல், எதிர்த்து நிற்றல், வேறு அணிகளுடன் அணி சேர்ந்து நிற்றல் என்ற ஆசனக் கனவுகளில் புதிய பாதை அமைத்து தேர்தலில் நிற்கின்றன. தமிழ் தேசியம் என்ற குறும் தேசியவாதத்ததையும் தூக்கி கரகாட்டம் ஆட முயல்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமை என்பதை தவிர்த்து குறும் தேசியவாத இனவெறியை தமிழ் மக்களுக்கு ஊட்டி மீண்டும் சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்ற அளவிற்கு பேசத் துணிந்துவிட்டனர். இப் புதுப்பாதையில் தமக்கு சேர்ந்து நிற்பதைவிட தனித்து நிற்பது அதிகமான பாராளுமன்ற கதிரைகளை வாரி வழங்கும் என்று கனவுகளைக் பலரிடம் காணக் கூடியதாக இருக்கின்றது. இதில் சிலர் தனி தன்மையுடன் நிற்கின்றோம், ஆனால் நாம் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவோம் என்று ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ என்ற கோதாவில் தேர்தலில் நிற்கின்றன. பாராளுமன்றத் தேர்தலின் பின்பு அமையும் அரசில் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதைக் கருதாக்க கொண்டு செயல்படுகின்ற இவர்களின் ஆசைகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுத்தால் வரவேற்கப்படவேண்டியதொன்றாகும்?
மறுபுறத்தில் நிராசை என்று தெரிந்தும் இதே மாதிரியான ஆசையில் ஐதேக உடனும் பலர் கூட்டு வைத்துள்ளனர். சரத் பொன்சேகாவுடன் கூட்டமைத்து செயற்பட்ட ஐதே கட்சி சரத் பொன்சேகாவையும் ஜேவிபியையும் கழட்டி விட்ட நிலையில் ஜேவிபி கொள்கைகள் அற்று தனித்து, தவித்து சிறையில் இருக்கும் சரத்தையும் தாங்கி? நிற்கின்றது. ஜேவிபி இத் தேர்தலுடன் காணாமல் போகும் நிலமைகளே பெரும்பாலும் ஏற்படும் என்பது அவர்களுக்கும் தெரியும்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரிக் கட்சிகள் தமக்கிடையே ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்து ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்து தமக்கிடையே தொகுதிப் பங்கீட்டை மேற்கொண்டு செயற்பட வேண்டிய கடப்பாட்டில் இருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த யாழ், வன்னி மாநகர தேர்தலில் ஐக்கியப்பட்டு நின்றதை விட மேலும் பிளவுபட்டு நிற்பதையே காணமுடிகின்றது. பத்மநாபா ஈபிஆர்எல்எவ், புளொட் அமைப்பினர் ஐக்கியப்பட்டு வடக்கு கிழக்கு முழுவதும் தேர்தலில் நிற்கின்றனர். இதில் சிறப்பாக பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் ஐக்கிய முன்னணியிற்காக அர்பணிப்புடனும் விட்டுக் கொடுப்புடனும் செயற்பட்டும் பரந்து பட்ட ஐக்கிய முன்னணியை அமைக்க செயற்பட்டு வந்தனர். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணி அமைப்பது செயல் முறையில் முடியாமல் போய்விட்டது. ஆனாலும் எழுதப்படாத ஒரு ஐக்கிய முன்னணி வேலைகளை இவ் பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் ஈடுபடுவதை இவர்களின் பிரச்சாரம், பத்திரிகை அறிக்கைகள், பேட்டிகளில் அறிய முடிகின்றது. இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகும்.
இனி வரும் காலங்களிலும் தங்களின் ஐக்கிய முன்னணி முயற்சிகளை தொடரப் போவதாக அவர்களின் அறிக்கைகளில் மட்டும் அல்ல செயற்பாடுகளிலும் காணப்படுவது ஒரு நம்பிக்கை தரும் செயற்பாடு ஆகும். மாகாண மட்டத்து பிராந்திய நலன் என்பதற்கு அப்பால் நாட்டின் நலன் என்ற இவர்களின் பரந்து பட்ட பார்வையும், செயற்பாடுகளும் கடந்த காலங்களைப் போல் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவர்கள்தான் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை நட்சந்திரங்களில் முதன்மையானவர்கள். தென்னிலங்கையில் உள்ள ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகளுடன் ஒரு பரந்துபட்ட தொடர்பை வலுப்படுத்தும் பரந்து பட்ட செயற்பாடுகள் இவர்களிடம் இன்னமும் இருக்கின்றது. இதுவே தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி நகர்த்த ஏதுவாக அமையும்.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் கொள்கை, கோட்பாடு, பொதுவான வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் செயற்படாமல் தொகுதிகளை பங்கீடு செய்வதை முதன்மைப்படுத்தி பலரும் செயற்பட முற்படுவதில் பலரின் கவனம் அதிகம் இருந்ததினால்தான் இவர்களால் பரந்து பட்ட ஐக்கிய முன்னணியை சாத்தியப்படுத்த முடியாமல் போய்விட்டது. சிறுபான்மை தமிழர் மகாசபையினர், தமிழ் தேசியம் பேசும் கட்சிகளுடன் பேசுவதில் காட்டிய ஈடுபாடு முற்போக்கு ஐனநாயகக் கட்சிகளுடன் பேசும் போது காட்டவில்லை என்பது துர்அதிஷ்டவசமானது. இதேபோல் இன்னொரு பகுதி தமிழ் கட்சியினர் அரசுடன் இணைந்து போட்டியிடுவதில் இருக்கும் சௌகரியங்களை விரும்பும் நிலயில் இருந்ததும் இன்னொரு காரணம் ஆகும்.
மலையக கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் இலங்கையின் பெரும்பான்மைக்கட்சிகளாக இணைந்து போட்டியிடுகின்றன. இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐதேக என்பன எக் காலத்திலும் முழு இலங்கையும் பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக இருந்ததில்லை. இடதுசாரி கட்சிகள் மட்டும் பலவீனமான நிலையிலும் முழு இலங்கைக்கான கட்சிகளாக ஒரு காலத்திலேனும் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. இதேபோல் சிறுபான்மையினரின் கட்சிகள் பிராந்திய கட்சிகளாகவே இருந்து வருகின்றன. தற்போது இவை மேலும் பிரதேசக் கட்சிகளாக குறுகி வருகின்றன. பிராந்தியக் கட்சிகள் தேசிய நலன்களைப் பற்றப் பேசுவதில்லை. இது அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்தகாலத்திலும் நிகழ்ந்தது வருந்தத் தக்கது. மொரட்டவ பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எடுத்த நிகழ்வைத் தவிர வேறு எந்த நிகழ்வுகளிலும் அமிர்தலிங்கம் எதிர் கட்சித் தலைவராக செயற்படவில்லை. மாறாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கட்சியாகத்தான் செயற்பட முற்பட்டனர். உலகில் ஏற்பட்டுவரும் புதிய சூழலுக்கு ஏற்ப பிராந்தியக்கட்சிகள் தேசிய நலன்களிலும் அக்கறைகொண்டு செயற்பட்டு தேசியக்கட்சிகளாக பரிணாமம் அடைய வேண்டிய சூழலில் குறும் தேசியவாதம் மட்டும் பேசி பிரதேசக்கட்சிகளாக குறுகி வருகின்றன. இது எதிர்காலத்தில் இவர்களை இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாகத்தான் அமையப் போகின்றது.
இந்நிலையில் இந்த குழம்பிய குட்டையில் தமிழ் தேசியம் என்ற வசிய மருந்தைப் பாவித்து சம்மந்தர் குழுவினர் சில ஆசனங்களை கூடுதலாக பிடிக்க திட்டம் போட்டும் விட்டார்கள். ஆனால் இவர்களால் நான்கு தொடக்கம் ஏழு வரையிலான தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும். இவர்களுக்கு நாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று இரு தேசம் ஒரு நாடு என்று பறப்படடிருக்கும் புலம் பெயர் புலிகளால் ஆசீர்வதிகப்பட்ட தமிழ் காங்கிரஸ் களத்தில் உள்ளது. புலிகளின் தீவிர ஆதரவாளர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்கள் ஒன்று தொடக்கம் மூன்று வரையிலான ஆசனங்களை வெல்லும் வாய்ப்பு இருகின்றது. சிவாஜிலிங்கத்தின் கதி அதோ கதிதான். இவர் தலையில் துண்டைப் போடுவதைத் தவிர வேறு விமோசனம் இல்லை. வேலுப்பிள்ளையரின் மரணச்சடங்கு, பார்வதி அம்மாளின் வெளிநாட்டுப் பயண ஒழுங்கு என்ற எம்ஜிஆர் பாணி வேலைகள் இந்த ‘சிவாஜி’ க்கு கை கொடுக்கவில்லை.
(தொடரும்.....)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’