ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று பாராளுமன்றத் தேர்தல் காய்சல் இலங்கையில் வீசத் தொடங்கி விட்டது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றி தோல்விகளின் அடிப்படையிலும் அதற்கு அப்பாற்பட்டும் தேர்தல் கூட்டுகள் அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. கூடுதலான பாராளுமன்றக் கதிரைகளை எப்படிப் பெறுவது என்பதே தேர்தலில் பிரச்சாரதில் மேலோங்கி இருக்கின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வருதல் இதன் தொடர்சியாக 13 வது திருத்தச்சட்டத்தை மேலும் அர்தமுள்ளதாக அமுல்படுத்தல். 17 வது தேர்தல் திருத்தச் சட்டத்தை மாற்றி ஜனாதிபதி முறமையை இல்லாது ஒழித்து அதிகாரம் கூடிய பிரமர் பதவியுடன் கூடிய பாராளுமன்ற மறமையை ஏற்படுத்தல், விருப்பு வாக்கு முறையை இல்லாது ஒழித்தல், விகிதாசாரப் பிரநிதித்துவத்திற்கு பதிலாக தொகுதி, விகிதாரப் பிரதிநிதித்துவம் கலந்த ஒரு முறையை ஏற்படுத்தல், இரண்டாவது சபை முறமையை ஏற்படுத்தல் என்பன முக்கியமாக பிரச்சாரப்படுத்தப்படுகின்றன. மற்றபடி தேர்தலில் தமது கொள்கை, கோட்பாடுகள், வேலைத்திட்டம், என்பவற்றையெல்லாம் கடாசிவிட்டு கட்சிகள் தமது தேர்தல் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளன.
தங்களோடு சேர்ந்து போட்டியிட வேண்டும் அன்றேல் தனித்தனியாக சிறுபான்மை இனங்களின் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பதையே பெரும்பான்மை இனத்தவரை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்றும் போல் விரும்பின. அவர்களின் விருப்பை நிறைவேற்றவதைப் போல் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் தனித்து, தனித்து போட்டியிடுகின்றன. இலங்கையின் இடதுசாரிகள், வடக்கு, கிழக்கில் உள்ள ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி அமைப்புக்களை அவற்றிற்குள் ஐக்கியப்படுத்தி பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டு அமைப்பதில் தோற்றப் போய் தாம் மட்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சங்கமம் ஆகி நிற்கின்றன. வடக்கில் மட்டும் பலம் பொருந்தியவர்கள் தனித்த போட்டியிட்டால் தமக்கு ஒரு ஆசனமாகினும் கிடைக்கலாம் என்பதைக் கணக்கு போட்டு தனித்து நிற்க தீர்மானம் போட்டு போட்டியிடுகின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் எதிர்பார்த்தபடியே கிடைத்த வெற்றிக்கும் அப்பால் கிடைத்த அமோக வெற்றி பொதுஜன ஐக்கிய முன்னணியை மிகுந்த நம்பிக்கையுடன் பாராளுமன்றத் தேர்தலை நோக்கி பாய்சலுடன் அணுக வைத்துள்ளது. தாம் கிழிக்கும் கோட்டிற்குள் யாவரும் நிற்கவேண்டும் என்ற சற்று அதீத எதிர்பார்ப்புடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இத் தேர்தலை எதிர் கொள்கின்றது. ஏற்கனவே பொது ஜன ஐக்கிய முன்னணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், மலையக கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் தமது பாதையை மேலும் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன்; இறுக்கமாக பிணைத்துக் கொண்டு அவர்களின் சொற் கேட்டுச் செயற்பட தயாராக உள்ளனர். இவ்வாறு செயற்பட வேண்டிய நிலமையில் உள்ள கட்சிகளின் நிர்பந்த நியாயத் தன்மை புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன ஐக்கிய முன்னணியிற்கு கிடைத் நாடு தழுவிய அமோக ஆதரவும், தமிழ் மக்கள் மத்தியில் அரசுடன் இணைந்திருந்தவர்களால் திரட்டிக் காட்டப்பட முடியாத ‘அமிர்த’ ஆதரவும், இலங்கை ஆட்சியை இனிமேல் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்குகள் இருக்க மாட்டாது என்ற பாடத்தையும் உறுதி செய்துள்ளது. இதனால் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளை அது வெற்றிலை வைத்து அழைக்கத் தயாராக இருக்கவில்லை. ‘வந்தால் வரட்டும் வராவிட்டால் பரவாய் இல்லை’ என்ற மன நிலையிலிருந்து தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழர் தரப்பு கட்சிகளை பார்கின்றது. இதன் வெளிப்பாடே ஏற்கனவே அரசில் இணைந்து செயற்படுபவர்களையே வெற்றிலையிலும், அவர்தம் சொந்த சின்னத்திலும் போட்டியிட அனுமதித்ததாகும். மலையகத்து கட்சியான மலையக மக்கள் முன்னணியையும் இதே அணுகுமுறையில் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதித்தது.
அரசில் அங்கம் வகித்தவர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கால கட்டத்தில் நிலவிய சரத் பொன்சேகாவின் ‘மாயமான் ஆதரவு அலை’ தங்களை அடித்து விடுமோ என்று தப்புக் கணக்கு போட்டு ஜனாதிபதித் தேர்தலில் ஓடும் புளியம் பழம் போலவே பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவிற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகள் இவர்கள் கணிப்பை முற்று முழுதாக மாற்றி எழுத தாமே மகிந்தாவிடம் காவடி தூக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய பரிதாப நிலைதான் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்த ‘ஓடும் புளியம் பழம்’ கதை மகிந்த சகோதரர்களுக்கும் தெரியாமல் இருக்கவில்லை என்று யாரும் எதிர்பார்க்க முடியாது தானே. அதுதான் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழ் கட்சிகளை தம்முடன் இணைந்து போடடியிடுமாறு இம்முறை ‘வெற்றிலை’ வைத்து அழைக்கவில்லை. உங்கள் சொந்த வாத்தியத்தில் இசைக்கலாம் என்று ‘தேமே’ என்று இருந்துவிட்டனர்.
மறுபுறத்தில் சரத் பொன்சேகா தலமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டமைப்பிற்கு ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த பலத்த அடி (தமிழ் பகுதிகள் தவிர்த்து) பலரையும் சிந்திக்க வைத்தது. இது ஐ.தே கட்சியை ஜேவிபியையும், சரத் பொன்சேகாவையும் கழட்டிவிட்டு முஸ்லீம் காங்கிரசையும் தமிழ் கட்சிகளையும் மேலும் அரவணைக்கத் வைத்து விட்டது. முஸ்லீம் காங்கிரசும், மேலக மக்கள் முன்னணியும் பச்சைக்கொடியை காட்டி ஐ.தே கட்சியுடன் சங்கமம் ஆகின. தமிழரசு கட்சி – சம்மந்தர்குழு பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஐதே கட்சியுடன் பகிரங்கமாக பிணையும் நோக்குடன் தனிவழி சென்று ‘தமிழ் தேசியம்’ பேசி மீண்டும் தமிழ் மக்களிடம் ஆணை கேட்கின்றது. ஆனால் தேர்தலில் ஐதேக எதிராக பிரசாரம் செய்வதில்லை என்ற எழுதப்படாத வர்க்க ஒப்பந்தத்தின் படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. அப்படியே செயற்படுகின்றது. இது ஒன்றும் புதிய விடயம் அல்ல கடந்த 60 வருட பிற்போக்கு தமிழ் ஏகபோக சிந்தனைத் தலைமைகளின் செயற்பாட்டின் தொடர்சிதான். இச் செயற்பாடே தொடர்ந்தும் தமது எதிர்ப்பு அரசியலைச் செய்து தங்கள் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டு இருக்க சௌகரியமானது என்று வழமைபோல் முடிவு எடுக்கத் தூண்டியது.
புலிகளை கொல்வதில் தலைமை வகித்த இராணுவத் தளபதியை ஆதரியுங்கள் என்று தாம் போட்ட ஆணைக்கு இன்னமும் ஏமாற தமிழ் மக்களில் ஒரு பெரும் பகுதியினர் இருக்கின்றார்கள். அதனால் தான் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு கூடுதல் வாக்குகளை மகிந்தாவை விட போட்டார்கள். தொடர்ந்தும் இந்த தமிழ் மக்களை ஏமாற்றி பாராளுமன்றக் கதிரைகளை அதிகம் பெற்று பாராளுமன்றத்திலும், வெளியிலும் 60 வருடகாலம் தொடரும் ஏகபோகத்தை தமிழ் மக்கள் மத்தியில் நிலைநாட்ட முடியும் என்ற அதீத பேராசையில் சம்மந்தர் குழு பிரபாகரன் நியமனங்களைத் தவிர்த்து தனித்து பாராளுமன்றத் தேர்தலில் குதிக்கின்றது. இந்திய அரசிடம் நல்ல பிள்ளை பெயர் வாங்க பிரபாகரன் நியமனங்களைத் தவிர்த்தல் உதவிகரமாக இருக்கும் என்று சம்மந்தருக்கும், சுரேஸ{க்கும் நன்றாகவே தெரியும். இதன் மூலம் சம்மந்தரின் கேரளாவில் சொத்து சேர்தலும், அடைக்கலநாதனின் திருச்சி வியாபாரமும், சென்னையில் சுரேஸ், மாவையின் முதலீடுகளும் தங்கு தடையின்றி செயற்படுத்த உதவியாக இருக்கும் என்று கணக்குப் போட்டு தமிழ் மக்களுக்கு கணக்கு விடுகின்றனர்..
(தொடரும்..) (இவ் ஆய்வுக் கட்டுரை 4பாகங்களாக தொடர்ந்து வெளிவர இருக்கின்றது)
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’