நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 11)
(கிறேசியன், நாவாந்துறை)
சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது. அங்கே இருந்த ஏனைய இயக்க அங்கத்தினருக்கும் புலி விலங்குகளுக்கும் தன்னை ஓர் பொல்லாத விலங்கு என்று காண்பிப்பதற்காக என்னை அப்படிப் பலமாக அடித்துத் துவைத்தார். என்னை அவருக்கு யார் என்றே தெரியாது. அன்றுதான் இந்தப் பகுதிக்கு வந்தவர். தன்னை ஓர் சூரப்புலியாகக் காண்பிக்க பிறரை வருத்தினார். எனது கையால் ஒரு அடிக்குத் தாங்கமாட்டார் அந்தப் பலிலிளிக்கும் விலங்கு. கைது செய்யப்பட்டிருக்கும் இயக்க அங்கத்தினரைப் பார்வையிட வந்தவராம் அன்று. தனது வீரத்தையும் காண்பிக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவுதான் இது.
யுத்த நிறுத்த காலத்தில் இவர் நான்கு பஸ்களை உறவினர்கள் பெயரில் வாங்கி தொழில் நடத்திவந்தார். இவரது குழந்தை விளையாடுவதற்கு ஒன்றரை இலட்சம் ரூபாயில் லாப்ரொப் கம்யூட்டர் வேண்டி கொடுத்திருந்தார். சாதாரண புலிப் போராளி அங்கத்தினர் இதனைக் கண்டு வேதனை அடைந்தனர். புலிகளின் பெருந்தலைகள் எல்லோரும், சொகுசான வீடுகள், வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் என்று வன்னியிலும் ஐரோப்பியர் போன்று வாழ ஆரம்பித்தனர். இந்த வாழ்க்கையை முன்நின்று நடத்திக் காட்டியவர் தமிழ்ச்செல்வன்தான். இவரது அந்த இரக்கமற்ற கொடுந் தாக்குதலை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அவர் இறந்த போது பலர் கவிதைகள் பாடினர். இப்படியான கொடியவர்களும் நல்லவர் போல் உலகத்தை ஏமாற்றியுள்ளனர் என்று கண்டேன்.
இந்த அடிக்கும் அதே மருத்துவர் தயாபரன் வின்ரோஜன் தடவி எனக்கு ஆறுதல் கூறினார். தமிழ் செல்வன் இதற்கு முன்னரும் ஒரு தடவை இங்கு வந்து ஒரு பெடியனைப் போட்டு தாறுமாறாக அடித்துவிட்டுச் சென்றார். அவருக்கும் இந்தப் பகுதிக்கும் எந்தவிதச் சம்மந்தமும் இல்லை. இங்கு கைதிகளை மிகவும் சுதந்திரமாக விட்டுள்ளனர். தன்னிடம்; ஒப்படைத்தால் காலில் விலங்குபோட்டு இப்படி இருக்க வைத்திருக்க மாட்டேன், வெளவால் போல அனைவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டிருப்பேன் என்று கூறிச் சென்றார் என்று என்னிடம் கூறினார்.
இப்படியாக ஒருவாரம் கழிந்தது. ஒருநாள் இரவு ஒரு சக கைதிக்கு வயிறு வலி ஏற்பட்டது. காலை மாலை இருவேளை தவிர ஏனைய நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க அவர்கள் அனுமதிப்பது கிடையாது. அந்தச் சகோதரன் வலியில் தான் கழிவறை செல்லவேண்டும், இங்கு சொப்பின் பைகிடையாது எனவே என்னை வெளியிலே கூட்டிச் செல்லுங்கள் என்று சத்தமிட்டார். காவல் விலங்கு அதற்குச் சம்மதிக்காமல் சத்தம் போட்டாமல் இரு! சத்தம் போட்டால் அடிவாங்குவாய் என்று கூறிச் சென்றார். இரவு அனைவரும் தூங்கிவிட்டோம். அந்தச் சகோதரன் அம்மண்டபத்தின் உள் ஓரத்தில் மலம் கழித்துவிட்டார்.
காலையில் புலி விலங்குகள் வந்தனர். யார் மலங்கழித்தது என்று கேட்டனர். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை, உங்கள் அனைவருக்கும் இதற்காகத் தண்டனை உண்டு என்று கூறிவிட்டுச் சென்றனர். மாலை உணவு வழங்கப்பட்டப் பின்னர் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கூறினர் விலங்குகள். அனைவரும் எழுந்து நின்றோம். தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்திக்கொண்டு நிற்கும்படி கூறினர்.
மாலை நான்கு முப்பது மணியளவில் இந்த உத்தரவைப் போட்டனர். ஒரு மணி இரண்டு மணி நேரமல்ல 16மணி நேரம் யாரும் கையைக் கீழே கொண்டுவரக்கூடாது. அருகில் இருக்கும் சுவரில், அல்லது தூணில் சாயக்கூடாது, பத்துக்கும் மேற்பட்ட புலி விலங்குகளை இதற்காகவே காவலுக்குப் போட்டனர். வலி தாங்காமல் கைகளைக் கீழே கொண்டு வந்தவர்களுக்கு அடிவிழுந்தது. 3-4 மணி நேரங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து நிற்கமுடியவில்லை. எதிர் முனையில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் என்னைப் பார்த்து அழுதுகொண்டு நின்றார். இரவு 10மணியைக் கடந்ததும் ஏறக்குறைய 10பேருக்கு மேல் நிலத்தில் இருந்து விட்டனர். இதைப் பார்த்துவிட்ட புலிவிலங்குகள் ஓடிவந்தனர். நிலத்தில் இருந்தவர்களைத் தாக்கினர், எங்களைக் கொன்று விடுங்கள் என்று கத்தினார்கள் நிலத்தில் இருந்தவர்கள்.
இந்தக் கதறல்கள் எவற்றினையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து அடித்து அவர்களை எழுந்து நிற்க வைத்தார்கள். எனது தோள்கள் இரண்டும் வலியெடுத்து விறைத்துவிட்டது. கைகளை நேரே தூக்காமல் தலையின் மேல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துக்கொண்டேன். இதைபோன்று அனைவரும் வைத்திருந்தனர். உறக்கம் உடலைத் தள்ளாட வைத்தது. புலிவிலங்குகள் ஆள்மாறி ஆள்மாறி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் தள்ளாடி மற்றவர் மீது விழுந்தனர். இப்படியாக இரவு முடிந்தது.
காலையில் வழக்கம் போல் கடன் கழிக்க வரிசையாகச் சென்று முடித்துவிட்டு வந்தோம். இப்போது கூட விலங்குகள் திருப்தியடையவில்லை. மீண்டும் கைகளைத் தூக்கிக்கொண்டு நிற்கும்படி கூறினர். அவர்கள் உத்தரவுபடி கைகளை தலைக்கு மேலாக உயர்த்திக்கொண்டு நின்றோம். காலை 8.30 மணியளவில்தான் நிலத்தில் அமரும்படி கூறினர். அப்படி நிலத்தில் அமர்ந்தவர்கள் இருந்தபடியே உறங்கலாயினர். இதைக் கவனித்த விலங்குகள் மீண்டும் தடிகள் எடுத்து வந்து உறங்கியவர்களை அடிக்கத் தொடங்கினர்.
பகல் நேரத்தில் நித்திரை கொள்ளக்கூடாது கைதிகள் என்பது அவர்களது சட்டமாம். கொடுமைப்படுத்த வேண்டும் என்பது கொள்கையானால் அனைத்துமே சட்டம்தான்! மிருகவதை என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது என்னவென்று தெரியாது. இந்தப் புலி விலங்குகளிடம் தான் அதன் உண்மைநிலையைக் கண்டேன். இப்படியான ஓர் தண்டனையைக் கண்டு பிடித்து நடைமுறைப்படுத்திய புலி விலங்கின் பெயர் ரவி என்பதாகும். இவர் செம்படை சலிமுக்கு அடுத்தப்டியான பதவியில் சில காலம் இருந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார் என அறிந்தேன்.
மீண்டும் பல நாட்கள் இதே போன்று பலதரப்பட்ட தாக்குதல்கள், சித்திரவதைகளுக்கிடையில் வழக்கம் போல் கே.டி. வந்து பலரது மூக்குகளை உடைத்துக் கொண்டிருந்தார். கே.டி. உள்ளே வரும்போது அங்கிருக்கும் சகோதரர்கள் தங்கள் தலைகளைக் கீழே சரித்துக்கொள்வார்கள். கே.டி. திரும்பி வெளியே செல்லும் வரை தலையை நிமிர்த்திப் பார்க்கவேமாட்டார்கள்.
ஒருநாள் நான் விசயம் தெரியாமல் கே.டி.யைப் பார்த்துவிட்டேன். சைகையால் வா என்று அழைத்தார். வேறு வழியில்லை, எழுந்து சென்றேன். அப்பையா அண்ணன் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது! எனது மூக்கை எப்படிப் பாதுகாப்பது என்று தெரியவில்லை! மூக்கைப் பாதுகாக்கப்புறப்பட்டால் உடல் பாகங்கள் பழுதடையும், ஒரு தடவை வலிதானே! வருவது வரட்டும் என்று அந்த விலங்கின் முன் நின்றேன்.
தூசன வார்த்தைகள் பேசி தனக்குத் தானே கோபத்தை வரவழைத்து தனது உள்ளங்கையால் என் மூக்கின் மீது பலமாகக் குத்தினார். மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது, போய் இரடா என்றார், தரை முழுவதும் இரத்தம் வடிய நான் மீண்டும் எனது இருப்பிடத்தில் இருந்தேன். இரத்தத்தைத் துடைக்க எந்தவித துணியும் கிடையாது. எனது சறத்தைக் கழற்றி இரத்தத்தைத் துடைத்தேன். மறுநாள் காலை கடன் கழித்த பின்னர்கூட அந்தச் சறத்தைக் கழுவ முடியவில்லை. ஐந்து நாட்கள் கழித்துத்தான் குளிப்பதற்கு அனுமதித்தனர். அன்றுதான் இரத்தக்கறை படிந்த சறத்தைக் கழுவினேன்.
வாரத்தில் இரண்டு மூன்று தடவை வந்து மூக்குடைக்கும் கே.டி. இப்போது தினமும் வர ஆரம்பித்தார். காலைக் கடன் கழித்துவிட்டு வரும் சகோதரர்களுக்கு வாசலில் நின்று கெட்டவார்த்தைகள் பேசி பெருத்த தடி ஒன்றினால் அடிப்பார். தொடர்ந்து ஒரு வாரமாக இந்தப் பணியை கே.டி. என்ற விலங்கு செய்து வந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர் தர்மலிங்கம் என்பவர், வயது 45க்கு மேல் இருக்கும். வழக்கம் போல் காலைக்கடன் முடித்து வரும்போது கே.டி. வரிசையில் வருபவர்களுக்கு ஓர் தடிப்பான தடியினால் அடித்துக்கொண்டு நின்றார். தர்மலிங்கம் அவர்கள் வந்ததும் அவரை அடிக்கும் போது அவர் தனது இடது கைகளினால் தடுத்து விட்டார். கே.டி.க்கு கோபம் வந்துவிட்டது. தர்மலிங்கம் அவர்களைத் தள்ளிவிட்டார். கால்சங்கிலி தடுக்க அவர் கீழே விழந்தார். சற்று தள்ளி ஓர் மண்வெட்டி இருந்தது. அந்த மண்வெட்டியை எடுத்து பிடியை நிலத்தில் குத்திக் கழற்றினார். அந்தப் பிடியினால் தர்மலிங்கம் அவர்களைத் தாக்குவதற்கு ஆரம்பித்தார். முழங்கைக்குக் கீழ் உடைந்தது. அவர் மீது பட்ட ஒவ்வொரு அடியும் அருகில் நின்ற அனைவரையும் திகைக்க வைத்தது. புலி விலங்குகளும் இதனை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தனர்.
மறுநாள் இச்சிறையின் பொறுப்பாளர் சலீம் வந்தார். கே.டி.யை அழைத்து இனிமேல் இந்தப்பக்கம் வரக்கூடாது என்றும் யாரைக் கேட்டு அவரை அடித்தனீ என்றும், நீ இங்கு வரும்போதெல்லாம் இவர்களை அடிக்கிறாய் என்று ஏக வசனத்தில் திட்டி அனுப்பிவைத்தார். ஆனாலும் கே.டி. இந்த உத்தரவை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார்.
(தொடரும்…)
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’