நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 7)
(கிறேசியன், நாவாந்துறை)
எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார். விசாரணை முடிந்ததும் இது வழக்கமாக நடைபெறும் சிகிச்சையாக இருந்ததால் அவரும் தமது கடமையை நிறைவேற்ற றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளருக்கும் எனக்கும் இடையில் வந்து அமர்ந்தார். குகன் அவர்களுக்கு மருந்து தடவ ஆரம்பித்தார். அவரும் வலி நிவாரணச் சொற்களான அம்மா, ஐயோ என்று முனகிக் கொண்டிருந்தார். புலி விலங்குகள் விலகிச் சென்று அவர்களுக்குள் ருசிகர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது தயாபரன் அவர்களது வரலாறுபற்றி அறிந்துவிடலாம் என்ற ஆர்வம் மேலோங்கியது. “அண்ணே” என்று தயாபரன் அவர்களை அழைத்தேன். அவரும் திரும்பிப் பார்த்து என்னவென்று தலையை ஆட்டிக் கேட்டார். உங்களை எதற்காக இவையள் பிடித்துவந்திருக்கினம் என்று கேட்டேன்.
தயாபரன் தொடர்ந்தார் – தம்பி, எனது சொந்த ஊர் அரசடிவீதி, கட்டுடை, மானிப்பாய். நான் யாழ்ப்பாணம் பெரிய ஆசுப்பத்திரியில் வரவேற்புப் பிரிவில் வேலை செய்து வந்தேன். இயக்க உறுப்பினர்கள் யார் வந்தாலும் நான் முன்னின்று அவர்களுக்கு உதவி செய்வேன். முன்னர் புலிகள், ரெலோ, புளொட் என்று யார் வந்தாலும் விழுந்து விழுந்து உதவி செய்வேன்.
பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பல பேரை அழைத்துவந்தனர் ஆசுபத்திரிக்கு அவர்களுக்கும் நான் உதவிகள் செய்தேன். ஐ.பி.கே.எப். (இந்திய இராணுவம்) வெளியேறியதும் புலிகள் வந்து என்னைப் பிடித்து வந்தனர். எதற்காக என்னைப் பிடித்து வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, “நீ எங்கட ஆக்கள ஈ.பி.க்கு காட்டி குடுத்து கொலை செய்திருக்கிறாய்” என்று பெட்டிசம் வந்திருக்கு. விசாரிச்சுப் போட்டு விடுறம் என்று கூறி இறுதியில் இந்த மரணக் குகைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
விசாரண முடிந்துவிட்டதா என்று கேட்டேன். எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காட்டிக் கொடுத்தாயா? கற்பழித்தாயா? கொள்ளையடித்தாயா? இவைதான் அவர்களது கேள்வி. என்னை பதினைந்து நாட்களுக்கும் மேலாக அடித்து சித்திரவதைச் செய்தனர். இங்கு வந்து செல்லும் புலிகள் அத்தனை பேரும் எனது உடலைப் பதம் பார்த்தவர்கள்தான். என்ன செய்வது தமிழனாக ஏனடா பிறந்தோம் என்று வருந்துவதைத் தவிர வேறு என்னத்தான் நினைப்பது என்று வருந்திச் சொன்னார்.
அதற்கிடையில் புலி விலங்குகளால் தாக்கப்பட்ட ஏனைய சகோதரர்கள் வலியினால் துடித்துக்கொண்டிருநதனர். அவர்கள் இவரை அழைத்தனர். அங்கு இருக்கும் அத்தனை பேருக்கும் இவர்தான் மருத்துவர். வின்ரோஜனில் சிறிது அளவு என்னிடத்தில் தந்து குகன் அவர்களுக்கு போடும்படி கூறிவிட்டு அவர் தனது கடமையைச் செய்ய அடுத்த சகோதரரிடத்துச் சென்றார்.
என்னிடமிருந்த வின்ரோஜனை குகன் அவர்களுக்கு தேய்த்தேன். விரல்களில் படாமல் உள்ளங்கையின் ஓரமாக கழிம்பை தேய்த்துவிட்டேன். அந்தக் கழிம்பு எனது கையில் படும்போது எனது வலிக்கும் மருந்தாக அமைந்தது. இரவு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு நித்திரையானோம்.
காலையில் கடன் கழிக்க வரிசையில் நின்றோம். அந்தவேளை அருகில் இருந்த கொடவுனிலிருந்தவர்களும் வரிசையாக காலை கடன் கழிக்க வந்திருந்தனர். இன்று குளிக்கும் தினம் என்று கூறிக்கொண்டார்கள்.
ஒன்றரை லிற்றர் கொள்ளளவு கொண்ட ரின் ஒன்றைக் கொடுத்தனர். காலைக் கடன் முடிந்து தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்து வரிசையாக நிற்கும்படி கூறினர். 10 ரின் தண்ணீர் மட்டுமே எடுக்க வேண்டும். சவற்காரம் கிடையாது துடைக்க துவாய் கிடையாது, வெறும் தண்ணீரை தலையில் ஊற்றி கைகளினால் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏற்கனவே உடல் அழுக்கேறி இருந்தது. தண்ணீர் ஊற்றியதால் ஈரமானதே தவிர அழுக்கு எதுவும் போகவில்லை. உடுத்தியிருந்த சரத்துடன் குளித்தேன். அனைவரும் அப்படித்தான் குளித்தார்கள். யாருக்கும் சவற்காரம் கிடையாது. குளித்து முடிந்ததும் சரத்தைக் கழற்றி பிழிந்து உதறிவிட்டு மீண்டும் உடுத்திக் கொண்டேன்.
இந்த வேளை அருகிலிருந்த கொட்டகைக்கு மேற்குப் புறத்தில் பல இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு அதன் மேல் நீலநிற பொலித்தீன் கொண்டு பந்தல் போல் அமைக்கப் பட்டிருந்தது. இடையிடையே பெரிய கிடங்குகளும் தென்பட்டன. ஏறக்குறைய 50அடி நீளம் 50அடி அகலம் 15 அடி ஆழம் வரையிலும் சில கிடங்குகள் இருந்தன. அவற்றிலிருந்து ஏணிகள் மூலம் விலங்குகள் இட்டு கழிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர்.
இது என்ன கொடுமை, நாங்கள்தான் கொடுமையில் உளல்கிறோம் என்றால் இவர்கள் படும் கொடுமை எங்களையும் விட அதிகமாக இருக்கும் போல் தோன்றிற்று. அந்தச் சகோதரர்கள் யாராக இருக்கும் என்று அறிய எனது மனம் அலைபாய்ந்தது. யாரிடத்துக் கேட்கலாம் என்று யோசிக்கும் வேளை, நடவுங்கள் கொடோனுக்கு என்றனர். மெதுவாக நடந்து இருப்பிடம் அடைந்தேன் குகன் அண்ணனும் அப்பையா அண்ணனும் குளித்துவிட்டு அதே ஈரச் சரத்துடன் வந்து அமர்ந்தனர்.
11மணியளவில் அரை றாத்தல் பாண் தரப்பட்டது பருப்புடன். இந்தச் சமையலைச் செய்வதும் எமது சகோதரர்கள் தான். இரண்டு வகையான சமையல் செய்யப்படும். கைதிகளுக்கு என்று தரக்குறைந்த சமையல், புலிகளுக்கென்று தனி மாமிச உணவு, இவற்றை சமைப்பது கைதிகள்தான். அவர்களுக்கான கால்விலங்கு ஏனையோரை விட அரையடி அதிகமாக விட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. புலி விலங்குகளுக்கு சமைக்கும் போது புலியின் நபர்கள் கதிரைகள் மீது இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்களென்று விபரம் கூறினார் அப்பையா அண்ணன்.
நான் இப்போது அங்கு இருக்கும் சகோதரர்களைப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தேன். சிலர் என்னைப் பார்த்து புன்னகைத்தனர். இந்தப் புன்னகைகள் மனதளவில் கிடையாது. உதட்டளவில் பதிலுக்கு ஆமோதிப்பது போன்று இருந்தது அவர்கள் புன்னகை. ஏனெனில் இவர்கள் அனைவரது இதயங்களும் அவர்களது கைகளில் இல்லை. புலி என்ற விலங்குகளின் கைகளில் அவர்களது உயிரும் உடலும் இருந்தன!
எனக்கு நேர் முன்வரிசையில் அமர்ந்திருந்தவரது பெயர் பிரசாந்த். இவர் றெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மாவட்டத்தின் ரெலோ இயக்க அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர். இவரது காலில் தொடர்ந்து புண் இருந்து கொண்டே இருந்தது. கால்களில் கட்டைகளால் அடிக்கும் போது இரத்தக் கண்டல் ஏற்பட்டு புண்ணாகியிருந்தது. அதன் மேல் கால்விலங்கும் போடப்பட்டு வெல்டிங் செய்திருந்தபடியால், அந்த விலங்கு தொடர்ந்து அந்தப் புண்களில் உரசிக் கொண்டே இருந்தது. இதனால் இருப்பதும் எழுந்து நடப்பதும் அவருக்கு ஓர் தண்டனையாகவே இருந்தது.
இருந்தாலும் அவர் மனவுறுதியுள்ளவராக இருந்தார். இவர்களால் (புலிகளால்) என்னை சித்திரவதைச் செய்துக் கொல்லத்தான் முடியும், நாங்கள் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இறந்த பின் நாம் எங்கே போகிறோமோ அங்கேதான் இந்தப் புலிகளும் பின்னாளில் வரவேண்டும். அங்கே நான் அப்போ சீனியராக இருப்பேன் என்று எனக்கு விளக்கமளித்தார் பிரசாந் அவர்கள். எனக்கும் இவரது கூற்றுச் சரியாகத்தான் பட்டது. ஏன் பயந்து பயந்து வாழ வேண்டும், இவர் (பிரசாந்த்) சாகும் போது நானும் சேர்ந்து செத்தால் போகிற இடத்தில் சீனியராக இருக்கலாம், இந்த விலங்குகள் அங்கு ஒரு நாள் வரத்தானே வேண்டும் என்று நானும் சிந்திக்கலானேன்!
எனக்கு அருகில் இருக்கும் றொலெக்ஸ் உரிமையாளர் அவ்வளவாக கதைக்க மாட்டார். கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொல்வார். அந்தப் பதிலும் இரண்டொரு வார்த்தைகளில் முடிந்துவிடும். மறுபுறத்தில் இருக்கும் அப்பையா அண்ணன் கதைக்கக் கூடியவர், புலி விலங்குகளுக்குப் பயந்து தலையைக் கீழே நோக்கிக் கொண்டுதான் கதைப்பார். அதனால் அவர் சொல்வது பாதி அளவுதான் விளங்கும்.
எனக்கோ அந்தக் கிடங்குகளில் இருக்கும் சகோதரர்களை யார் என்று அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது. எனக்குத் தெரிந்த யாராவது இருப்பார்களோ என்ற அச்சமும் இருந்தது. தனித் தனிக் குழிகளும் இருந்தன, பெருங் குழிகளும் இருந்தன. நாளைக்கு எப்படியாவது இதன் இரகசியத்தை அறிந்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.
நான் இருக்கும் மண்டபத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றால், அதிலிருந்து முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் அந்தக் குழிகள் ஆரம்பித்தன. எப்படியாவது மேற்கு நோக்கி நகர வேண்டும். மறுநாள் நாள் நான் எதிர்பார்த்த மேற்கு நோக்கிய பயணம் தானாகவே நடந்தது. ஆம், புலி விலங்குகள் இங்கு இருப்பவர்களை தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதற்கு விடுவதில்லையாம். ஒரே இடத்தில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட்டு ஏதாவது திட்டங்கள் போட்டுச் செயற்படுத்த வாய்ப்பு உண்டு என்று யோசனை செய்து ஒரு முனையில் இருப்பவரை மறுமுனைக்கும் வடக்கில் இருப்பவர் கிழக்குக்கும் என்று தலைகீழ் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர் அந்தப் புலி விலங்குகள்.
நான் எதிர்பார்த்திருந்த மேற்கு மூலைக்குச் சென்று ஒரு சதுரக் கோட்டின் நடுவில் நின்றுகொண்டேன். ஒவ்வொருவரும் அவ்விதம் நின்று கொண்டதும் சத்தம் போடாமல் இருக்கும் படி கூறினர். கடந்த இரவு கூட எம்மவரில் ஏழு பேரது இலக்கங்களையும் பெயர்களைக் கூறி அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்துச் செல்பவர்கள் மீண்டும் இந்தக் கொட்டகைக்குத் திரும்பி வருவது கிடையாது. இங்கு காவலுக்கு நிற்கும் புலி விலங்குகளும் மனிதப் பண்புகளைக் கொண்ட வார்த்தைகளைக் கதைப்பது கிடையாது. யாரை என்றாலும் வாடா, போடா என்று தூஷண வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவர். இவர்களில் ஒருவர் மட்டுமே தூசண வார்த்தைகள் பேசவில்லை. அவர் சலீம் என்ற சேர்லி அம்மான் ஆவார். இவர்தான் இந்தச் சிறைக்கு பொறுப்பானவர். இவர் பின்னாளில் புலிவிலங்குகளை விட்டு விலகி தனது சொந்தக் குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.
நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன்.
(தொடரும்…)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’