வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……



நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 5)

(கிறேசியன், நாவாந்துறை)

எனது நண்பன் விஜித்தரன் கூறி முடித்ததும், ரெலோ சகோதரர்கள் மீது செம்மணியில் அடுக்கிவைக்கப்பட்ட மூடைகள் எதுவாக இருக்கும்? எனது அறிவுக்கு எட்டியவரை சிந்தித்துப் பார்த்தேன், விடை தெரியாமல் இருந்தது. இந்தக் கொடியவர்களது கூடாரத்துக்குள் வந்த பின்னர்தான் அறிந்தேன். அன்று எனது நண்பன் கூறிய அடுக்கி வைக்கப்பட்ட மூடைகள் அனைத்தும் சீனி மூடைகள் என்று. மனிதர்கள் உடல் மீது சீனியைக் கொட்டி எரியூட்டினால் உடலில் ஒரு பாகம் கூட மிஞ்சாது எரிந்து விடும். மனிதர்களை அழிக்க வேர்கள் ஆரம்ப காலங்களிலேயே வித்தைகளைக் கற்று வைத்திருந்தனர்.

எனக்கு அந்த வயதில் பெரிய அளவு பகுத்தறிந்து பார்க்க, நன்மை தீமைகளை விபரிக்க இயலாது இருந்தது. பின்னாளில் இவர்களது படுகொலைகளது செயல் முறையைப் பார்க்கும் போது இவர்கள் மனிதர்கள் அல்ல! அரக்கர்கள்! மனித நேயம் அற்ற படுபாவிகள். உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் யாழ்ப்பாணத்தை சைக்கிளில் சுற்றிப்பார்த்த இடங்கள் கோண்டாவில், திருநெல்வேலி, அராலி, கல்வியங்காடு, மானிப்பாய்“விமாகி”, கட்டப்பிராய், கச்சேரி அடி, அரியாலை இத்தனை இடங்களையும் ஏதோ ஓர் உந்துததால் சென்று பார்த்தேன். இதோ இங்கு வைத்துத்தான் சுட்டார்கள், இங்கு வைத்துத்தான் ரயரில் போட்டு எரித்தார்கள் என்று எனது வயதை ஒத்த பெடியங்கள் காண்பித்துச் சொன்னார்கள். பல இடங்களிலும் இரத்தக் கறை படிந்த சதைகள் தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

ஓ! இதுதான் விடுதலைப் போராட்டமோ? சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போராடப் போகிறோம் என்ற எனது வீட்டுக்கு அருகில் இருந்த அண்ணாக்கள் எல்லோரும் இயக்கங்களுக்குச் சென்றார்கள். நாடு கிடைத்துவிட்டது போலும், இப்போது பதவிக்காக ஆக்களை ஆக்கள் சுட்டுச் சண்டைபிடிக்கினம் போல என்று அந்த வயதில் நான் நினைத்துக் கொண்டேன்.

வான்மீன் தனது கேள்விகளைத் தொடர்ந்தார், கேள்விகளில் எந்தவித மாற்றமும் இல்லை. கொலை, கொள்ளை கற்பழிப்பு இதே கேள்விகள்தான். இறுதியில் ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார்? எனக்கு எதைப்பற்றித் தெரியும் இவர்களிடத்து சொல்வதற்கு? தெரியாது என்றேன். வான்மீன் என்ற புலிக்கு கோபம் வருவதற்கு முன்னர், அருகில் அடியாட்கள் போல் நின்ற இரு புலிகளுக்கும் கடுங் கோபம் வந்திருக்கும் போல, காலால் உதைத்தனர், முகத்திலும் முதுகிலும். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் அவர்களைத் தெரியவில்லை. ஆயினும் அவர்கள் கட்டிய துணியின் அடிப்பகுதியால் இவர்கள் இருவரது கால்களையும் அவர்களது முழங்காலுக்குக் கீழ் பார்க்கக் கூடியதாக இருந்தது.

எழும்படா என்று கத்தினார் வான்மீன். கால்களில் சங்கிலி போட்டு வெல்டிங் பண்ணியிருந்ததால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு கால்களையும் ஒன்றாக மடித்து முழங்காலை நிலத்தில் பதித்து கைகளை முன்புறமாக நிலத்தில் ஊன்றி எழுந்தேன். எழுந்து நிற்பதற்கு தாமதம் ஆவதைக் கண்ட அருகில் நின்றிருந்த “திசை” என்ற புலி மீண்டும் எனது பின்பகுதியில் உதைத்தார். நான் முகம் மேசைக் காலில் அடிபட நிலத்தில் விழுந்தேன். மீண்டும் முயற்சித்து எழுந்தேன்.

ஒரு கைவிலங்கை எனது இரு கைகளிலும் பூட்டினர். இரண்டு கைகளின் ஊடாக பெரிய மரக்கட்டை ஒன்றை நுழைத்தனர். அதன் ஒரு பகுதியை அந்தக் கொட்டகையின் வளையில் வைத்தனர். மறு முனையை கயிற்றினால் அருகில் நடப்பட்டிருந்த மரத்தின் மீது கயிற்றைப் போட்டு கீழே இழுக்க நான் கைவிலங்கில் தொங்கினேன். எனது கால் பெருவிரல் மட்டும் மண்ணில் தொட்டுக்கொண்டு இருந்தது. இரு கைகளும் வலியால் மரத்துப் போயின. என்னை அறியாமலேயே கண்களால் கண்ணீர் வடிந்தது. 

அந்த வலியில் துடிக்கும் போது “மஞ்சு” என்ற புலியும், ‘திசை” என்ற புலியும் தடிகளால் அடித்தார்கள். பின்னர் வான்மீன் ஓர் தடித்த கட்டை ஒன்றினால் அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் அடித்த அடியினால் ஏற்பட்ட வலியை விட கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்கினால் ஏற்பட்ட வேதனைதான் அதிகமாக இருந்தது. இதே போன்று என்னுடன் அழைத்து வரப்பட்ட ஏனையோருக்கும் இதே கொடுஞ்செயலைத்தான் செய்தனர் இந்தப் புலிகள்.

நேரம் செல்லச் செல்ல அலறல் சத்தம் அதிகரித்தது. இந்த விசாரணை புலிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் சித்திரவதை செய்வதில் வல்லூநர்களாக இருந்தனர். இவர்கள் இப்போது களைப்படைந்து விட்டனர். எங்களை அப்படியே கைவிலங்களில் தொங்க விட்டுவிட்டு அவர்கள் தேனீர் அருந்தச் சென்று விட்டனர். கட்டப்பட்டிருந்த கண்ணுக்கான துணி இன்னும் மேலே சென்றது.

யாரும் அருகில் இல்லை. அந்த வலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத் தொங்கவிடப்பட்டிருந்த கொட்டகைக்கு வெளியே பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சில குழிகளினுள் ஏணிகள் இறக்கப்பட்டிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கு மேற்பட்ட குழிகள் தென்பட்டன.

புலிகள் அந்தக் குழியில் இருப்பவர்களுக்கு எதையோ வாளிகளில் போட்டு கயிறு மூலம் உள்ளே இறக்குகிறார்கள். பின் வாளியை எடுத்துக்கொண்டு அடுத்த குழிகளுக்குச் செல்கிறார்கள். எனது வலியை விட இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குழிகளுக்குள் யாரோ எம்மவர்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை. குழிகள் வெட்டி மனிதர்களை உள்ளே இறக்கி வதை செய்கின்றனரா?

இப்போதுதான் கிட்லரின் ஆட்சியில் நடந்தவை என்று சினிமாக்களில் வரும் காட்சிகளை நான் கண்டேன். மூன்றடி நீளம் அல்லது 2.5 (இரண்டரை) அடி அகலம் கொண்டதும், ஏழு அடி நீளம் 12 அடி ஆழம் கொண்டதுமான ஓர் குழியிலிருந்த நன்கு மெலிந்த ஓர் இளைஞன் எம்மைப் போன்றே வெறும் மேலுடனும் நீல நிற அழுக்கேறிய கால்சட்டையுடனும் ஏணிவழியாக வெளியே வந்தார். அவரை மூன்று புலிகள் சூழ்ந்து கொண்டு அழைத்துவந்தனர், என்னை வைத்திருக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த சிறிய கொட்டகை ஒன்றுக்கு. அவர் தனது அடையாளத்தை இழந்திருந்தார். சரியாக அடையாளம் தெரியவில்லை.

இந்த நிலையில் தேனீர் அருந்தச் சென்ற புலிகள் மீண்டும் வந்தனர். மறுபடியும் விசாரணை. அதே கேள்விகள் தான்! அவர்களுக்கு எதைப் பற்றி விசாரிப்பது என்று தெரியாது, ஏனைய தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும், எதைச் சொல்லி அழிப்பது? கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவைகளை இவர்கள் சுலபமாகச் சொல்லலாம். நீங்கள் கேட்பதும், சொல்வதும் தவறு என்று எதிர்த்தச் சொல்ல, எதிர்த்துக் கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிக் கேட்டால் அவரும் கொல்லப்படுவார். இந்த விசாரணை அதிகாரிகள் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அங்கிருந்த நாட்களில் தெரிந்து கொண்டேன். 17, 18 வயதுடையவர்களும் விசாரணை அதிகாரியாக இருந்ததைப் பார்த்தேன். இவர்களால் மனிதனின் உரிமைகள் மிதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

விசாரணையில் நான் மீண்டும் மீண்டும் தெரியாது, இல்லை என்ற வார்த்தைகளையே பதிலாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கும் ஆத்திரம் கபாலத்தை பிளந்தது. நாங்கள் கேட்கிறோம், “சொல்கிறான் இல்லை” என்று கூறி முதுகுப் பக்கங்களில் தாக்கினர். ஏனைய இளைஞர்கள் தாக்கப்படும் போது எழுப்பும் அவலக் குரலான “அம்மா”, “ஐயோ” என்ற அவலக்குரலை நானும் எழுப்பினேன். 

இந்தக் கொடிய வலியினைத் தாங்கிக் கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட வார்த்தைகள்தான் “அம்மா”, “ஐயோ” என்றிருந்த இரு வார்த்தைகளும். துணுக்காய் புலிகளின் சிறையில் தினமும் இந்த வலிதாங்கும் அவலச் சொற்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. சாவுக்கு முன்னால் இந்த வலி அனைவருக்கும் ஏற்படும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

எனது கைகளில் போடப்பட்ட விலங்கு இரு கைகளையும் பிடுங்குவது போன்று வலித்தது. அடியில் வேதனை ஒரு பக்கம் விலங்கில் தொங்கும் வலி வேறொருபக்கம். எனது கால் பெருவிரல் மட்டுமே நிலத்தில் தொட்டுக்கொண்டு இருந்தது. அவர்களில் ஒரு புலி எனது இடுப்பை தனது இரண்டு கைகளாலும் பிடித்து சுழற்றினார். எனது உடல் முறுக்கப்பட்டது. கைகள் முறுகி உடைந்துவிடும் போல் தோன்றியது. வலியினால் நான் ஓலமிடுவதை அவர்கள் ரசித்தனர். முடிந்தவரை என்னை முறுக்கிப் பிழிந்து முடியாது போனதும் விட்டுவிட்னர்.

இப்படி நான் தொங்கவிடப்பட்டு சுமார் மூன்று மணி நேரமாகிவிட்டது. காலை உணவும் இல்லை. உடல் பலவீனமடைந்ததால் நான் மயக்கமடையும் நிலையை அடைந்தேன். எனது கைகள் இரண்டும் எனது உடலை விட்டு பிரிந்து சென்று விட்டன போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்போது வான்மீன் சொன்னார், “டே இவன் மயங்கிற்றா நாங்கள் கஸ்ரப்பட்டுத்தான் இறக்க வேண்டி வரும், இப்பவே இறக்குங்க” என்றார். அவரது உத்தரவைத் தொடர்ந்து மறுமுனை கயிற்றைத் தளர்த்தி எனது கைவிலங்கினூடாக இடப்பட்டிருந்த அந்த மரத்தடியை கீழே இறக்கினர். எனது கைகள் செயலிழந்து இருந்தன. கையை கீழே கொண்டு வர முடியவில்லை. அப்படியே சரிந்து விழுந்தேன். 

பிற்பகல் நான்குமணிவரை மயக்கநிலையிலேயே இருந்தேன். கண்விழித்ததும், இரண்டு புலிகள் அருகில் நின்று “எழும்படா” என்றனர். கைகளை இயக்க முடியவில்லை, முழங்கை வரை விறைத்துச் செயலிழந்து இருந்தன. எழுந்து நின்றேன். வாடா என அழைத்தனர், கால் சங்கிலியுடன் நடந்தேன். அவர்கள் அடித்த இடங்கள் அனைத்தும் கண்டலடைந்து வீங்கிப் போய் இருந்தது.

என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த இன்னொரு திறந்த குடிலுக்கு வந்தனர். அங்கும் ஆறு முதல் ஏழு பேர்வரை இருந்தனர். கை கால்களில் சங்கிலியும் விலங்குகளும் இடப்பட்டிருந்தன. சற்றுத்தள்ளி, முன்னர் நான் பார்த்த கிடங்கில் இருந்து அழைத்துவரப்பட்டவர் இருந்தார். அருகில் பார்க்கும் போது இந்த விலங்குகளின் கொடுமை அவரது உடலில் தெரிந்தது. ஆங்காங்கே புண்கள் வந்து பாதி காய்ந்த நிலையில் இருந்தன. முகத்திலும் காய்ந்த வடுக்கள் இருந்தன. இவ்வளவு விழுப் புண்களுடன் இவர் எப்படி உயிர் வாழ்கிறார் என்று வியந்தேன்.

என்னை ஏனைய இளைஞர்களுடன் இருக்கும்படி கூட்டிவந்த புலிகள் கூறினர். நானும் அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் அங்கத்தினர்கள் இருந்தனர். கூட்டி வந்த புலிகள் தள்ளிச் சென்றனர். சுற்றுப்புறத்தைப் பார்த்துவிட்டு அருகில் இருந்தவர்களிடம் மெதுவாகக் கதைத்தேன், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்?

(தொடரும்….)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’