நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 4)
(கிறேசியன், நாவாந்துறை)
அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்! நான்தான் யாழ்ப்பாணம் றொலெக்ஸ் ஹொட்டல் ஓணர் என்றார். எனக்கு றொலெக்ஸ் ஹொட்டலைத் தெரியும், காலைக்கடன்கள் முடித்து மீண்டும் எங்களுக்கு வரையப்பட்ட இடத்தில் அமர்ந்து அட்டைகள் இல்லாத நேரம் பார்த்து அவருடன் கதைத்தேன். காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து விசாரணை என்று தாக்குவதன் மூலம் ஓர் பயங்கர சூழல் ஏற்படுத்தப்படும். றொலெக்ஸ் ஓணரும் அன்று காலைதான் இப்படி ஓர் அவல ஓலத்தைக் கேட்டு மிரண்டு போய் கண்களை மூடி இறைவனை ஏதோ வேண்டிக்கொண்டிருந்தார்.
இந்த நான்கு நாட்களும் இரவு 1 மணி அளவில் எங்கள் கொட்டடிக்கு வரும் 10 க்கும் மேற்பட்ட அட்டைகள் ஆயுதங்களுடன் வருவார்கள் 10 முதல் 12 பேர்களது இலக்கங்களைப் படிப்பார்கள். அந்த இலக்கம் உடையவர்கள் எழுந்து நின்றதும் அவர்களை கெட்டவார்த்தைகளால் பேசி இழுத்துச் செல்வார்கள். அவர்களை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது. அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் யாரும் திரும்பி வந்தது கிடையாது. புலிகளது (அட்டைகளது) நாசி முகாம்களில் கொடுமையானது துணுக்காயில் இருக்கும் இந்தச் சிறைகள்தான்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கூட ஏனைய இயக்கச் சகோதரர்களையும் இங்குதான் வைத்திருந்தனர். இந்தச் சிறையிலிருந்து தினமும் 10 முதல் 15 பேர்வரை இந்த அட்டைகளால் கொல்லப்படுவார்கள் என்று உதயன் என்று கூட இருந்த சகோதரன் என்னிடத்துக் கூறினார். இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் இவ்விதம் கொல்லப்படுவார்கள் என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
வழக்கம் போல் அன்று யாருடனும் கதைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டு வேளை உணவுடன் அவர்களது கோடு வரையப்பட்ட பெட்டிக்குள் அவர்களது உத்தரவுபடி அசையாமல் இருந்தேன். றொலெக்ஸ் ஓணரும் அப்படியே அன்று முழுவதும் இருந்தார். அவரால் இது போன்று அமர முடியவில்லை. நாங்கள் உழைக்கும் வர்க்கம், எதனையும் தாங்கிக் கொள்வோம், இவர் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார். அவர் படும் வேதனையைப் பார்த்து என்னால் வருந்தத்தான் முடிந்தது. எம் இனத்தின் இரத்தத்தை உறுஞ்சும் இந்த அட்டைகளுக்கு மனிதனின் வலி எப்படித் தெரியவரும்.
மறுநாள் காலைக் கடன் முடித்து அடிமேல் அடிவைத்து மீண்டும் எனது இடத்தில் அமர்ந்தேன். 10 மணியளவில் தீபன் தலைமையில் அட்டைகள் கூட்டம் ஒன்று வந்தது. சிலரது இலக்கங்களை சத்தமாகப் படித்தனர். எனது இலக்கமான “மு 87” ம் அதில் இருந்தது. எழுந்து சென்றேன் மொத்தம் 9 பேர், வெளியே அழைத்தனர்.
அந்த இடம் நீளமான ஓலைக்குடில். ஆறடி அகலத்தில் ஆறடி உயரத்தில் முள்ளுக் கம்பிகளால் குடிலினுள் வேலி போன்று அமைத்திருந்தனர். வரிசையாக ஒன்பது கதிரைகளும், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்கும் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு டெஸ்க்குக்கும் இடையில் உள்ள தூரம் குறைந்தது 6 அல்லது 7 அடிகள் வரும். ஒவ்வொரு கதிரையிலும் ஒரு களுதையும். மன்னிக்கவும் அட்டையும், அவருக்குத் துணையாக இரண்டு அட்டைகளும் அருகில் நின்றிருந்தனர்.
என்னை நான்காவது மேசைக்கு அழைத்தனர். விசாரித்த அட்டையின் பெயர் வான்மீன். அருகில் நின்றிருந்த இரண்டுபேரின் பெயர்கள் முறையே மஞ்சு (திருகோணமலை) கௌதமன் (திருகோணமலை). இந்த கௌதமன் பின்நாளில் யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் ஒரு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இரண்டு யாழ்ப்பாணப் பெண்களை கற்பழித்தார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் கற்பழிப்பு பொதுமக்களுக்குத் தெரியவந்ததும் வேறு வழியின்றி தங்களை இனத்தின் காவலர்களாகக் காண்பிப்பதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே போன்ற சம்பவம் ஒன்றினால்தான் உருத்திரபுரம் வதைமுகாம் பொறுப்பாளராக இருந்த அத்தார் என்பவரும் தற்கொலை செய்தார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
என்னை விசாரணைக்கு அழைத்த வான்மீன் என்ற அட்டை அவருக்கான கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். “இடே வாடா இங்கே” என்று அழைத்த அந்தப் பெருமகன் தன் முன்னிலையில் நிலத்தில் இருக்கும் படி உத்தரவிட்டார். இவர்கள் ஆட்சியாளர்ள், நாங்கள் அடிமைகள். ஏஜமானிய தோரணையில் இந்த அட்டை செயல்பட்டார்.
அமர்ந்தேன் தரையில். பெயர், முகவரி, குடும்ப அங்கத்தவர்கள் விவரங்களை எழுதிக் கொண்டார். விசாரணையை ஆரம்பித்தார், ஆரம்பம் முதலே அவரது வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட நல்ல வார்த்தையாக வெளிவரவில்லை. பெண் உறுப்பை வேறு வார்த்தையில் நினைவுபடுத்தி “மவனே” என்பது முதற்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளில் அவ்வளவும் அசைவ வார்த்தைகளாக இருந்தன. இவர் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இருந்த பொறுப்புவாய்ந்த அட்டைகள் அனைவருமே இதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினர்.
வான்மீன் - நீ எத்தனை பேருக்குக் கூட்டிக்கொடுத்தாய்? கோத்தை, கொக்கா எல்லாரையும் ஐ.P.மு.கு க்கு கூட்டிக் கொடுத்தனிதானே? எத்தனை பேரைக் கற்பழித்தனீ? எத்தனை பேரைக் கொலை செய்தாய்? இப்படி இவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுமே பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும், கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாகவும் இருந்தன.
பிற இயக்கங்களைப் பற்றி இந்த அட்டைகள் இவ்விதமே விசமப் பிரசாரம் செய்து ஏனையோரை துரோகி என்று நம்பும்படி செய்தனர். ஒருவரை குற்றஞ்சாட்டி விசாரிப்பது என்றால் பாதிக்கப்பட்டவர் முறையிட வேண்டும், கொள்ளை அடித்திருந்தால் அதில் குற்றம் சுமத்தப்பட்டிருக்க வேண்டும், அதில் சாட்சியங்கள் இருக்க வேண்டும், கற்பழித்திருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர் முறையிட்டிருக்க வேண்டும், சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்க வேண்டும், களவு செய்திருந்தால் அதில் முறையீடு இருந்திருக்க வேண்டும், களவு போன பொருட்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.
இவற்றில் எதுவுமே இல்லாமல் பிற இயக்க அங்கத்தினரைப் பிடித்து வந்து கொடுமைப்படுத்துவதற்கு இவர்கள் சொன்ன குற்றச் சாட்டு சமூக விரோதிகள் என்பதாகும். நாம் எங்கள் நாட்டை மீட்கப் போராடப்புறப்பட்டவர்கள். ஒவ்வொரு இயக்கத்திலும் இளைஞர்கள் இணைந்தது நாட்டின் மீது பற்றுக்கொண்டே அல்லாமல், சுகபோகங்களை அனுபவிக்க இயக்கத்துக்கு வரவில்லை. புலிகளது கைகள் ஓங்கியதால் இவர்கள் ஏனைய இயக்க அங்கத்தினரைப் பிடித்துவந்து படுகொலை செய்கின்றனர்.
இவர்கள் 1986 ஆம் ஆண்டு ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். அப்போது எனக்கு பதினாறு வயது படித்துக்கொண்டிருந்தேன். விடுதலைப் போராட்டத்தில் இப்படிக் கொடியவர்களா ஈடுபடுகின்றனர்! ரெலோ இயக்கத்தினரை சுட்டுக்கொன்றனர், வெட்டிக்கொன்றனர், ரயறை எரித்து அதனுள் அந்தச் சகோதரர்களைப் போட்டு எரித்துக் கொன்றனர், கொதிக்கும் தாருக்குள் அவர்களை உயிருடன் போட்டு அவித்துக் கொன்றனர், இவை அனைத்தையும் யாரும் கதை சொல்லி நான் கேட்கவில்லை. என் கண்களால் இவற்றைப் பார்த்தேன். எனது அன்றைய வயதின் ஆர்வக் கோளாறானது இது. இந்தச் செயல்களை நான் நாவாந்துறையிலிருந்து எனது சைக்கிளில் சுன்னாகம் முதற்கொண்டு பாசை ஊர் வரைக்கும் ஒரே நாளில் தண்ணீர் உணவு எதுவுமின்றி சுற்றித்திரிந்து பார்த்தேன்.
துப்பாக்கிகளுடன் வாகனங்களில் பறந்து திரிந்தனர், சுட்டு வீழ்த்தப்படும் தமிழ் சகோதரர்களை தெருக்களுக்கு இழுத்து வந்து நெருப்பில் போட்டனர். இந்த அட்டைகளை அன்று பார்க்கும் போது மனித இனத்தில் இப்படியான விலங்குகளா? என்று வியந்தேன் எனது நண்பன் ஒருவன் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர், நான் சைக்கிளில் இந்தக் கொடுமைகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து நண்பன் விஜித்தைப் பார்க்க அங்கு சென்றேன்.
அவன் என்னை அழைத்துக் கொண்டு முத்திரைச் சந்தை வழியாக செம்மணி நோக்கி சென்றான். நான் ஒரு சைக்கிளிலும் அவன் ஒரு சைக்கிளிலுமாக சென்றோம். செம்மணி சுடலையின் எதிரில் சைக்கிளை நிறுத்தி அங்க பார் என்று காட்டினான். அங்கே ஒன்றும் தெரியவில்லை. நிலத்தைப்பார் என்றான், நிலத்தைப் பார்த்தேன், நிலத்தில் அறுபதிலிருந்து எழுபது அடி நீளத்துக்கு இரண்டடி அகலத்துக்கு சாம்பலாக இருந்தது. என்ன இப்படி சாம்பலாக இருக்குதே என்றேன். பார்த்தாச்சுதானே வா சொல்கிறேன் என்றான். திரும்பியும் நாங்கள் கல்வியங்காட்டுக்கு வந்தோம். இப்போது என்றாலும் சொல்லடா என்று ஆவலுடன் அவனிடத்துக் கேட்டேன் நண்பன் ஆரம்பித்தான்:-
நேற்று மாலையில் செம்மணியை நோக்கி வாகனங்களில் புலிகள் அங்குமிங்குமாக ஓடினர். ஒரு லொறியில் விறகுகளும் ஏற்றி அதன் மேல் ரையர்களும் ஏற்றிக் கொண்டு சென்றனர். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு செம்மணி நோக்கிச் சென்றேன். சுடலைக்கு முன்னால் நான்கு ஐந்து வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லொறியிலிருந்து விறகுகளையும். ரையர்களையும் இறக்கினர்.
நான் சைக்கிளை பூவரசமரத்தடியில் நிறுத்திவிட்டு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டேன். இருட்டுவதற்கு ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மூன்று வான்கள் வந்தன. அவற்றிலிருந்து பல அண்ணன்மார்களை கண்களையும், கைகளையும் கட்டியபடி இறக்கினார்கள். அவர்கள் அனைவரும் ரெலோ இயக்க அண்ணன்மார்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அதே வான்கள் மீண்டும் திரும்பிச் சென்று 20 நிமிடங்களில் இன்னும் அதுபோல் அண்ணன்மார்களை அழைத்து வந்தனர்.
லொறியில் எடுத்துவந்த கட்டைகளை வரிசையா ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினார்கள். கண்கள் கட்டப்பட்டிருந்த அண்ணன்மார்களை இழுத்து வந்து வரிசையாகப் படுக்க வைத்தார்கள். இப்படி நாப்பது முதல் ஐம்பது பேர்வரையிலான அண்ணன்மார்களைப் படுக்க வைத்தார்கள். சில பேருக்கு துப்பாக்கியால் முதுகில் குத்தி தள்ளிச் சென்று படுக்க வைத்தார்கள். பின்னர் அவர்கள் மேல் சில மூடைகளையும் அடுக்கினார்கள். அவை என்ன மூடைகள் என்று தெரியவில்லை. அதன் பின்னர் அந்த மூடைகளின் மேல் ரயர்களை அடுக்கினார்கள். அதனைத் தொடர்ந்து பல கான்களில் எதையோ ஊற்றினார்கள். அது மண்ணெண்னையாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோலாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் ஊற்றும் போது அந்த அண்ணன்மார்களது கால்கள் துடித்தன. வெளியே தெரிந்த கால்களில் கட்டைகளைக் கொண்டு தாக்கினார்கள் புலிகள்.
திடீரென நெருப்புச் சுவாலை அவர்கள் மீது படர்ந்தது. அவர்கள் அலறும் சத்தம் மரத்தில் இருந்த என்னை உதறிக் கீழே தள்ளுவது போன்று இருந்தது. சுற்றி நின்ற புலி அண்ணாக்கள் எல்லாரும் தள்ளி ஓடினார்கள். சிறிது நேரத்தில் அவர்களது அலறும் சத்தம் நின்றுவிட்டது. மேலும் அரைமணி நேரமளவில் புலி அண்ணாக்கள் அங்கு நின்றனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏறி கல்வியங்காடு நோக்கிச் சென்றனர். எனக்கும் பயமாக இருந்தது. மரத்திலிருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்துவிட்டேன் என்று கூறி முடித்தான்.
தொடரும்…













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’