வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……



நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 3)

வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது. எங்களை இறங்கும்படி பணித்தனர் அட்டைகள். இறங்கினோம். கட்டப்பட்ட கண்கள் கழற்றப்பட்டன. எங்கும் வெளிச்சமாக இருந்தது. இந்த இடம் துணுக்காய் என்றனர், அட்டைகள் நடத்திவரும் வதைமுகாம் இதுதான் என்றனர் என்னுடன் விலங்கிடப்பட்டிருந்தவர்கள். இறங்கிய எங்களை ஓர் பழைய அரிசி மில் ஒன்றினுள் அழைத்துச் சென்றனர். அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தரையில் படுத்திருந்தனர். அவர்களது கால்களில் சங்கிலிகள் மாட்டப்பட்டிருந்தன. இருவர் ஒரு சங்கிலியில் மாட்டப்பட்டிருந்தனர். எங்களது கால் சங்கிலியை கழற்றினர். இருவர் இருவராக நிற்கச் சொல்லி ஒரு சங்கிலியில் இருவரை இணைத்தனர். பின்னர் இவர்களுடன் படுத்துக்கொள்ளும்படி கூறினர். நாளை வருகிறோம் என்று கூறிச் சென்றனர்.


காலை 5.50 மணிக்கு எழுந்து காலைக் கடனுக்கு செல்லும்படி பணித்தனர். நாம் இரண்டு பேர் ஒரு சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தோம். அப்படியே சென்று கடனைக் கழித்துவிட்டு வரும்படி கூறினர். அங்கே இருந்த அத்தனை பேரும் இவ்விதம் பிணையப்பட்டு இருந்தனர். பலர் மெலிந்து நோய்வாய்ப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

என்னுடன் விஜயன் என்ற இளைஞர் பிணைக்கப்பட்டிருந்தார். இவர் டெலொ இயக்கத்தைச் சேர்ந்தவர். நாம் இருவரும் காலைக் கடனைக் கழிக்கச் சென்றோம். 15அடி ஆழம் கொண்டதும் முப்பது அடி நீளம் கொண்டதாகவும் அமைந்த குழியின் மேல் மரங்கள் போடப்பட்டு அதன் குறுக்கே பலகைகளைப் போட்டிருந்தனர். பலகைகளின் இடையே அரையடி அளவு இடைவெளியிருக்கும், அதன் ஊடாக நாம் மலம் கழிக்க வேண்டும். வாழ்வின் முதல் தடவை கைதியாக நாசி ஜேர்மனியரின் வதை முகாம் காட்சிகளைக் நேராகக் கண்டேன் அங்கே! 

இருவர் இருவராக பிணைக்கப்பட்ட மாடுகள் போன்று வரிசையாக நடந்து சென்று மலம் கழிக்கும் மையத்தை அடைந்தோம். அருகில் இன்னொருவர் நெருக்கமாக இருக்கும் போது எப்படி காலைக் கடனை முடிப்பது. விஜயன் தனது கடனை முடித்தார். நான் சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்களது அரிசி மில் போன்ற வேறொரு அரிசி மில்லில் இதே போன்று பல பேர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு காலைக் கடன் கழிக்க வரிசையாகச் சென்று கொண்டிருந்தனர்.

காலையில் தண்ணீர், தேனீர், உணவு எதுவும் கிடையாது. கொட்டடிக்குள் மீண்டும் வந்ததும் யாருடனும் கதைக்கக் கூடாது, நிலத்தில் கீழே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும்படி உத்தரவிட்டனர் அட்டைகள். காலை 8.30 மணியளவில் “சலிம்” என்ற செம்பாட்டு சலீம் அல்லது சேர்லி அம்மான் என்ற குள்ளமான அட்டை (புலி) வந்தார். தலை மயிர் செம்பாட்டு நிறத்தில் இருந்தது.

நேற்று இரவு இங்க வந்த எல்லாரையும் வெளியில வரச் சொல்லு என்று சத்தமாகச் சொன்னார். சில அட்டைகள் உள்ளே வந்து இரவு வந்த எல்லாரும் வாங்கடா வெளியில் என்றனர். நாம் அனைவரும் (150 பேர்) வெளியில் வந்தோம். செம்படை தலை அட்டை அங்கே நின்று கொண்டு எங்களை நோக்கி அறிவுரை வழங்கினார்.

நீங்கள் இங்கு வந்திருப்பது விசாரணைக்காக, விசாரணை முடிந்ததும் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். விசாரணை முடியும் வரை நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும். விசாரணை செய்யும் எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நீங்கள் இருந்த இடத்துக்கு திரும்பிச் சென்று இருக்கவும் என்று கூறி அவரது அறிவுரையை முடித்தார்.

இவர் தனது அறிவுரையை முடித்துவிட்டு விசாரணைப் பகுதிக்குச் சென்றார். விசாரணைப் பகுதி எங்கள் இருப்பிடத்திலிருந்து சுமார் 20 அடிகள் தள்ளி இருந்தது. இந்த அட்டை அங்கே சென்றதும் இளைஞர்கள் அலறும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அம்மா, ஐய்யோ என்ற இரண்டு வார்த்தைகளும் தொடர்ந்து அபயக் குரலுடன் ஒலித்துக் கொண்டே இருந்தது.

இந்த ஓநாய்கள் எங்கள் இளைஞர்களை வதைக்கிறார்கள், யாராக இருந்தாலும் மனித நேயம் என்பது இயற்கையாக இருக்க வேண்டியது மனிதனுக்கு. இந்த அட்டைகளுக்கு இதயம் என்ற ஒன்றே இருந்ததாகத் தெரியவில்லை. தமிழனை இவ்வளவு அரக்கனாகவா இறைவன் படைத்தான். இளைஞரது அலறும் சத்தம் ஒரு மனிதனால் கேட்கமுடியாததாக இருந்தது. நான் தாக்கப்படும் போது ஏற்பட்ட வலியை விட இந்த இளைஞர்கள் தாக்கப்படும் போது அவர்கள் எழுப்பும் அவலக் குரல் மிருகங்களையும் இரங்கவைக்கும். முதலில் “ஆண்டவரே இவர்களை மன்னித்துவிடும்” என்று கோரிக்கை வைத்த நான் இப்போது, “ஆண்டவரே இவர்களை மன்னிக்காதீர்” என்ற கோரிக்கையை வைத்தேன்.

காலை 9மணியளவில் “தீபன்” என்ற ஒரு அட்டை உள்ள வந்தது. விசாரணைக்கான நபர்களைத் தேர்ந்து கைதிகளாகிய எங்களை இந்த நபர்தான் அவர்களிடத்து அனுப்பிவைப்பார். உள்ளே வந்த  இந்த அட்டை புதிதாக வந்த எங்களுக்கு கைதி இலக்கம் வழங்கப் போவதாகக் கூறி ஓர் கதிரையில் அமர்ந்தார். நாங்கள் வரிசையாக நடந்து அவர் முன் ஆஜர் ஆனோம். அவர் ஒவ்வொருவருக்கும் இலக்கங்களை வழங்கினார். எனக்கு வழங்கப்பட்ட இலக்கம் மு. 87 இந்த அட்டைகளின் சிறை நிர்வாகத்தில் யு முதல் ணு வரை ஒவ்வொரு எழுத்துக்கும் 100 பேர் வீதம் இருக்கும்.

இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அந்த மில்லுக்குள் சென்று நிலத்தில் அமர்ந்தேன். மறுபடியும் உள்ளே வந்த தீபன் அட்டை கைதிகள் இருக்கும் நிலத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளத்தில் பெட்டி போன்ற வடிவத்தில் நீல நிறத்தில் கோடுகள் வரையும் படி உத்தரவிட்டார்.

சில மணி நேரங்களில் வண்ணப் பெயிண்ட் வந்தது. நான்கு கைதிகளை அழைத்து கோடுகளை வரையச் சொன்னார். சதுரங்க அட்டை போல இருந்தது அந்தக் கோடுகள். இந்த 2ஓ2 அளவில் உள்ள கோடுகளுக்கு நடுவில் கைதிகள் அமர்ந்திருக்க வேண்டும். ஒருவருடன் ஒருவர் கதைக்கக் கூடாது. கால்களை நீட்டக் கூடாது. நிமிர்ந்து சப்பாணி போட்டபடி அமர்ந்திருக்க வேண்டும். இப்படி ஓர் உத்தரவு போட்டார் தீபன் அட்டை!

நாம் இருவர் இருவராக பிணைக்கப்பட்டிருந்தோம். அதனை நீக்கிவிட்டு தனித் தனியாக சங்கிலி கொண்டு இரண்டு கால்களையும் இரு முனைகளாலும் சுற்றி எலக்ரிக் வெல்டிங் செய்தனர். இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள சங்கிலியின் நீளம் ஒன்றேகால் அடி இருந்தது. எலக்ரிக் வெல்டிங் செய்யும் போது எனது காலில் வெப்பம் தாக்கியது. நெருப்பு பொறி முகத்தில் சிதறி விழுந்தது. நாங்கள் நடமாட முடியாத மிருகங்கள் ஆக்கப்பட்டோம். எங்கள் சேட்டுகளைக் கழற்றச் சொன்னார்கள். இனிமேல் கைதிகள் மேலாடை அணியக் கூடாது என்று தீபன் அட்டை சத்தமிட்டுக் கூறினார்.

சேட்டைக் கழற்றச் சொன்னதும் நான் மிகவும் பயந்தேவிட்டேன். சில வேளை எங்கள் பகுதியில் மாடுகளுக்கு அடையாளங்களாக பெயர் அல்லது இலக்கத்தினை நெருப்புக் கம்பிகளால் சூடுவைத்து அடையாளம் இடுவார்கள். அப்படித்தான் இந்த கயவர்கள் செய்யப் போகிறார்களோ என்று மிரண்டு போயிருந்தேன்! நல்லவேளையாக அப்படி சூடு போடவில்லை. அப்படி ஓர் அடையாளம் இடும் முறை ஈழத்தில் இருப்பது தீபன் என்ற அந்த அட்டைக்கு ஞாபகம் வராமல் விட்டதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் மனதுக்குள்.

முதல்நாள் காலை முதல் இரவு வரை நான் அவர்கள் வரைந்த கோடுகளுக்குள் நடுவில் இருந்தேன். கால்கள் இரண்டும் விறைத்துவிட்டன. இவர்கள் பூட்டிய சங்கிலி விலங்கு கால்களை நெரித்து இழுத்து அண்டிக்கொண்டே இருந்தது. இரண்டு கால்களிலும் சங்கிலி பதிந்து கொப்புளங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிட்டது. மறுநாள் விடிந்ததும் காலைக் கடன் கழிக்க நடந்து செல்லக் கூடாது ஓடிச் செல்ல வேண்டும் என்று அங்கு நின்றிருந்த ஒரு அட்டை உத்தரவிட்டது. சங்கிலியால் பிணைத்திருக்கும் எம்மால் எப்படி ஓட முடியும். இரண்டு கால்களையும் அருகருகில் வைத்து துள்ளித் துள்ளிதான் சென்றேன் கழிவிடத்துக்கு சிலர் மெதுவாக வந்தனர், அவர்களுக்கு முதுகில் கட்டையால் அடித்தது அந்த அட்டை.

அன்று 11மணியளவில் அரை இறாத்தல் பாணும் ஒரு தட்டில் பருப்புக் கறியும் கொடுத்தனர். ஒரு தட்டில் இருக்கும் கறியை பாணில் தொட்டு இருவர் உண்ண வேண்டும். ஒரு பிளாஸ்ரிக் கப்பில் தண்ணீர் கொடுத்தனர். மாலை 5 மணியளவில் சோறும் பருப்பும் சோயா பீன்சும் கலந்த கறி ஒன்று கொடுத்தனர். பத்துப் பேருக்கு ஒரு பிளேட். ஒருவர் மாறி ஒருவர் உண்ண வேண்டும். பிளேட் கழுவப்படாமல் மாறி மாறிச் சாப்பிட வேண்டும். கைகழுவதற்கு அனுமதியில்லை. விரல்களை நாங்கள் நாக்கினால் நக்கி சுத்தம் செய்தோம்.

காலை மாலை இரு வேளை தவிர இடையில் எக்காரணத்தைக் கொண்டும் இயற்கை உபாதைகளைக் கழிக்க அனுமதிக்க மாட்டார்கள். மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இடையில் மலம் சிறுநீர் வந்தால் சொப்பின் பையில் அதனை நிரப்பி வைத்திருந்து மாலையோ அல்லது காலையிலோ வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

நான்கு நாட்கள் இப்படிக் கடந்தன. இரவு ஒரு மணியிருக்கும் ஒரு வாகனம் வந்தது. அதிலிருந்து இந்த அட்டைகள் வேட்டையாடி வந்த தமிழ் சகோதரர்கள் இறங்கினர். அப்படி வந்தவர்களில் ஒருவர் எனக்கருகில் அமர்த்தப்பட்டார். நானும் உறங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் அவரை உற்றுப்பார்த்தேன். வெள்ளை நிறம், தடித்த உருவம், குறைந்த உயரம், வெறும் மேலுடன் உறங்கிக் கொண்டிருந்தார். சில இடங்களில் லேசாகக் கண்டங்கள் தெரிந்தன. நான் முதலில் இருந்த சிவபுரம் அட்டைகளைக் கடந்து தான் இவர் வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். மல்லி என்ற அந்த அட்டை இவரது இரத்தத்தை உறுஞ்சியிருப்பார் என்பது உறுதியானது.

அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்!

(தொடரும்…)
  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’