சூடானின் அதிபர் ஓமர் அல் பஷீர் |
சூடான் அதிபர் இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை
டார்ஃபுரில் நடந்த மோதல் தொடர்பில், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சூடானிய அதிபர், ஒமர் அல் பஷீர் எதிர்கொள்ள வேண்டுமா என்பது குறித்து மீண்டும் ஒரு முறை பரிசீலிக்குமாறு, பன்னாட்டு கிரிமினல் நீதிமன்றத்தை, மேல் முறையீட்டு நீதிபதிகள் கோரியுள்ளனர்.
குற்றம் சாட்டும் வழக்குரைஞர்கள், அத்தகைய குற்றச்சாட்டுகளை கொண்டுவரலாம் என்று காட்டுவதற்கான போதிய ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்று முன்பு அளித்த ஒரு தீர்ப்பை இந்த நீதிபதிகள் மாற்றிவிட்டனர்.
டார்ஃபுரில் இருந்து இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் குழுவான, ஜே.இ.எம், இந்த தீர்ப்பை வரவேற்றது. ஆனால் சூடானிய அரசோ இது ஒரு அரசியல் ரீதியான தீர்ப்பு என்றும், இது ஏப்ரலில் நடக்க உள்ள தேர்தல்களுக்கு இடைஞ்சல் தரும் நோக்கிலானது என்றும் கூறியிருக்கிறது.
இராக்கில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது
இராக்கில் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடிக்கிறது |
முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் தடைசெய்யப்பட்ட பாத் கட்சியுடன் தொடர்புகொண்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட ஐநூறு வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட இராக்கின் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தவர்களில் சுன்னி பிரிவின் முன்னணி அரசியல்வாதிகள் பலரும் அடங்கியிருந்தனர்.
ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் இராக்கிய அரசாங்கத்தில் சுன்னி பிரிவினருக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுகிறது என சுன்னி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த தடையை நீக்கப்பட வேண்டும் என்று இராக்கிய அதிபர் ஜலால் தலபானி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இன நல்லிணக்க நடவடிக்கைக்கு இந்த தடை உதவப்போவதில்லை என்பதை சில அமெரிக்க அதிகாரிகளும் தெளிவுபடுத்தியிருந்ததாக பாக்தாத்திலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இராக்கில் தொடரும் குண்டுத் தாக்குதலில் பலர் பலி
கர்பலாவில் இருக்கும் ஷியாக்களின் புனித பள்ளிவாசல் |
பாக்தாத்துக்கு தென்மேற்காக எண்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் நோக்கிச் செல்லும் ஒரு சாலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
ஷியாக்களின் மிக முக்கிய மத சடங்குகளில் ஒன்றான அர்பஈனில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிவருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை பாக்தாத்தில் நடந்த வேறொரு குண்டுவெடிப்பிலும்கூட ஷியாக்கள் பெரும்பான்மையாக நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.
தாலிபான்களின் தாக்குதலில் பாகிஸ்தானில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்
தாக்குதலுகுள்ளான இடம் |
இதுதான் பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்த முதல் சம்பவம் என்று நம்பப்படுகிறது.
ஆப்கானுடனான எல்லைப் பகுதியில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றின் அருகே அமெரிக்க இராணுவத்தினர் மூன்று பேரை பலிகொண்ட இந்த குண்டுவெடிப்பை, மோசமான பயங்கரவாதத் தாக்குதல் என்று அமெரிக்க தூதரகம் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லைப் படையினருக்கு பயிற்சி வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கச் சிப்பாய்கள், ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் பள்ளிச் சிறுமிகள் பலரும் அடங்குவர் என உள்ளூர் மருத்துவமனை ஒன்று கூறுகிறது.
அனுமதி பெறாமல் கோட்டை போல வீடு கட்டினாலும் இடிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்தில் நீதிமன்றம் உத்தரவு
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்த வீடு இடிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது |
ராபர்ட் ஃபிட்லர் என்ற இந்த விவசாயி இரண்டு வருடம் உழைத்து, டூடர் கோட்டை பாணியில், கோட்டைச் சுவர் கண்காணிப்பு கோபுரம், பீரங்கிகள் எல்லாம் வைத்து ஒரு வீட்டைக் கட்டியிருந்தார். ஆனால் வைக்கோல் போர்களைக் கொண்டு மூடி அதனை மறைத்து வைத்திருந்தார்.
கோட்டைபோல வீடு கட்ட வேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் பதில் தரத் தவறியதை அடுத்தே தான் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததாக அந்த விவசாயி கூறுகிறார்.
ஆனால் மூடி மறைத்து ஏமாற்றி இவர் பலன் அடைவதை அனுமதிக்க முடியாது என்றும், ஆகவே இவர் கட்டிய கோட்டை வீடு இடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
எளிமையான பயிற்சிகள் மூலம் மனநலத்தைப் பேண முடியும்
குறுக்கெழுத்து போன்ற பயிற்ச்சிகள் உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன |
டிமென்ஷியா எனப்படும் மூளைக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு எளிய உடற்பயிற்சிகளால் இருபது சதவீதம் குறைகிறது என புதிய ஆராய்ச்சிகள் குறிப்புணர்த்துகின்றன.
உடற் பருமன், இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எந்த வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினாலும் அதனால் பலருக்கு டிமென்ஷியா மனநோய் வரும் வாய்ப்பு குறைகிறது என சர்வதேச நிபுணர் குழு ஒன்று பிபிசிக்கு வழங்கிய ஒரு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறுக்கெழுத்து, மனக்கணக்கு போன்ற மூளைக்கு வேலை தரும் பயிற்சிகளைப் பழகுவதால் டிமென்ஷியா மூளைக் கோளாறு வருவதற்கான ஆபத்து குறையும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் அப்படி குறையும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கொழும்பில் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம் |
தேர்தலில் முறைகேடுகள் எனக் கூறி இலங்கையில் எதிர்கட்சியினர் பேரணி
இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்ற எதிரணி கட்சிகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியையும், கண்டனக் கூட்டத்தையும் நடத்தியிருக்கின்றன.
எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடம் மனு
இந்த முறைகேடுகளின் அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரிக்க வேண்டும் என அவர் தமது முறைப்பாட்டில் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
எனினும் ஜனாதிபதி தேர்தல் நியாயமான முறையிலேயே நடந்து முடிந்துள்ளது என தேர்தல் ஆணையாளர் தாயனந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் பிரச்சார காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அவர், வாக்குத் திணிப்புகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது
மஹிந்த கொலை செய்ய சதி என்று அரசு கூறுகிறது |
நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய எதிர்கட்சிகள் தீட்டிய சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று அரசு கூறுகிறது.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அதிகாரிகள் அல்லது படைவீரர்கள். அரசியலில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு 10க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டபட்டன என்பதை மறுக்கும் எதிர்கட்சியினர், கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறுகிறார்கள்.
அரசின் ஊதுகுழலாக செயற்பட்டுவரும் டெய்லி நியூஸ் எனும் தினசரி, ஜனாதிபதி மற்றும் இதர சிலரை கொலை செய்ய முயன்றார்கள் என அது கூறும் செயற்பாட்டில், இவர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
ஊடகத்துறையினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்
சிக்கலில் இருக்கும் ஒரு பத்திரிகையும் அதன் ஆசிரியரும் |
இலங்கையில் ஊடகத்துறையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறும் உள்ளூர் ஊடக அமைப்புகள், அப்படியானவற்றை குறைக்கும் வகையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இதனிடையே வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வந்த ஒரு இணையதளத்தின் ஆசிரியரான பிரகீத் எக்நலிகொட காணாமல் போய் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
செய்தியாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக மனித உரிமை அமைப்புகளும் கூறுகின்றன.
இலங்கையின் அரச ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் உட்பட 56 பேர் மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் இலங்கையில் ஊடகத் துறையினருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்றும் அவர்கள் சுந்தரமாக செயற்பட முடியும் எனவும் அரசின் ஊடகத்துறை துணை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அமேவர்த்தனா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை இன்றைய செய்தியரங்கில் கேட்கலாம்
அதிகாரப் பகிர்வு உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்-திமுக
தமிழக முதல்வர் கருணாநிதி |
இது தொடர்பில் இந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் போது ஒரு தீர்மானம் இயற்றப்படும் என திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுபேற்றுள்ள சிவ சங்கர் மேனன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த போதும் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியை விடுவிப்பது குறித்து மத்திய அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் இடம் பெற்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’