அயதுல்லா கமேனி |
இரான் அணு ஆயுதம் தயாரிக்காது: அதியுயர் தலைவர் அயதுல்லா கமேனி
இரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல என்றும், அது அப்படியான ஆயுதத்தை தயாரிக்காது என்றும் இரானின் அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனி கூறியுள்ளார்.
இரானின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது நாசகாரி கப்பலின் வெள்ளோட்ட வைபவத்தில் உரையாற்றிய அவர், சில மேற்குலக அதிகாரிகள் காலாவதியான, அர்த்தமற்ற கருத்தை திரும்பத்திரும்பக் கூறிவருவதாக கூறினார்.
இரானின் தற்போதைய மற்றும் கடந்தகால நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை தயாரிப்பதுடன் தொடர்பு பட்டவை என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் முதல் தடவையாக கூறிய மறு தினம் அவரது இந்த அறிக்கை வந்துள்ளது.
நிஜர் இராணுவ அதிரடி ஆட்சி மாற்றம்: சர்வதேச சமூகம் கண்டனம்
இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது |
நிஜரில் சூழ்நிலை கட்டுக்குள் வந்துவிட்டது என்று இராணுவ சபையின் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
வியாழக்கிழமை நடந்த இராணுவ அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா. மன்றம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புகளும் நிஜரில் முன்பு காலணீய ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸும் கண்டித்திருந்தன.
அதிபர் டாஞ்சா பதவியகற்றப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிடுவதற்காக மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய சர்வதேசக் கூட்டமைப்பான ஈகோவாஸ் நிஜருக்கு பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பியமைக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
எகிப்து திரும்பும் எல் பராதேய்க்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் வரவேற்பு
எல் பராதேய் |
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய எல் பராதேய் தற்போது எகிப்து திரும்புகிறார்.
ஆனால், எந்தவொரு அரசியல் ஊர்வலமும் நடக்கக் கூடாது என்று ஆட்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கெய்ரோ விமான நிலையத்தில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் அங்கு செல்லும் பாதையில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, எல் பராதேயின் முக்கிய ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேகாலயா சிறார் பாடப் புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் படம்
அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேகாலய மாநில கல்வி அமைச்சர் அம்பரீன் லிங்டோ அறிவித்துள்ளார்.
இவ்வாறு பாடப் புத்தகம் அச்சிடப்பட்டது, சர்வமதத்தவர்களும் ஒன்றாக இணைந்து வாழும் இந்தியப் பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கத்தோலிக்கத் தேவாலாய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்தக் குறிப்பிட்ட பதிப்பாளர், கத்தோலிக்கப் பள்ளிகளில் எந்தவிதப் புத்தகங்களையும் விற்பனை செய்வதற்கு இந்திய கத்தோலிக்க தேவாலயம் தடை விதித்துள்ளது.
இராமலிங்கம் சந்திரசேகரன் |
ஐக்கிய தேசியக் கட்சி - ஜே.வி.பி. இடையே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை கூட்டாக சந்தித்த கட்சிகளிடையே தற்போது வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் தேர்தலை தனித்து போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொது சின்னத்தின் கீழ் தேர்தலை எதிர்கொள்ள மறுப்பதன் காரணமாக - தான் கூட்டணியில் இருந்து விலகிச் செல்வதாக ஜே.வி.பி. கூறியுள்ளது.
வேறு சில எதிர்க்கட்சி அமைப்புகளுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒரு கூட்டமைப்பை ஜே.வி.பி. அமைத்துள்ளதாகவும், இந்தக் கூட்டமைப்பின் சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகர் பிபிசியிடம தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு காரணம் குறித்து தமிழோசையிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சுவாமிநாதன், தமது கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட ஜே.வி.பி. உடன்படவில்லை என்பதே இந்தப் பிளவுக்குக் காரணம் என்று கூறினார்.
யானைச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் வேறு கட்சிகளுடன் தாம் அணி சேர விரும்பியே இருந்ததாக சுவாமிநாதன் தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சுவாமிநாதன் ஆகியோர் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்
இலங்கை தேர்தல் ஆணையாளர் |
வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில் பார்க்கையில், நாடளாவிய ரீதியில் 27 சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தள்ளது.
பிரதான அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இறுதித் தினத்திலோ அதற்கு சற்று முன்னரோ வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 196 பேரும் தேசியப் பட்டியல் அடிப்படையில 29 பேருமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை தெரியாது: ஐ.நா.
முகாம்வாசிகளுடன் ஜான் ஹோம்ஸ் (பழைய படம்) |
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு நாற்பதாயிரத்துக்கும் இடைப்பட்டது என்று இலங்கையில் ஐ.நா.வின் சார்பாகப் பேசவல்ல முன்னாள் அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை என்று ஜான் ஹோம்ஸ் கூறினார்.
"ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது உண்மை என்றாலும், கொல்லப்பட்டோரின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை" என்றார் ஜான் ஹோம்ஸ்.
போரில் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் சுயாதீன விசாரணை வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துவதாக அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், முன்பை காட்டிலும் முகாமில் இருப்போருக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
குருத்தணு அடிப்படையில் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும்: ஆராய்ச்சியாளர் நம்பிக்கை
குருத்தணு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் பேராசிரியர் அலன் ட்ரவுன்சன் கூறுகிறார்.
மனிதக் கருவின் குறுத்தெலும்பைப் பயன்படுத்தி இன்சுலின் சுரக்கும் உயிரணுக்களை உருவாக்கி, அந்த செயற்கை உயிரணுக்களை ஜவ்வுப் பை ஒன்றுக்குள் வைத்து நோயாளியின் உடலுக்குள் பொருத்துகிற ஆராய்ச்சியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுவருகிறது என்று பேராசிரியர் அலன் ட்ரவுன்சன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குருத்தணு மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் சுரக்கும் உயிரணுக்கள் எலிகளின் உடலில் பொருத்தப்பட்டபோது அவை பலன் தந்துள்ளதாக பரிசோதனைகள் காட்டுகின்றன. மனிதர்களுக்கு இவ்வகையில் சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவதாக அலன் ட்ரவுன்சன் கூறுகிறார்.
ஆனால் குருத்தணுவின் மருத்துவ பலன்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பாக பார்க்கின்சன்ஸ் போன்ற சில நோய்களை குருத்தணு அடிப்படையில் குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கைகள் வற்றிப்போய்விட்டன என்றும் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’