வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

இந்தோனிசிய மெரேக் துறைமுகத்தில் அகதிகளின் பேச்சாளராக இருந்து வந்த அலெக்ஸ் என்பவர் தலைமறைவு !!


இந்தோனேசியாவின் மெரேக் துறைமுகத்தில் தரித்துள்ள படகில் தங்கியுள்ள 250 இலங்கை அகதிகளும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அந்த படகில் உள்ள அகதிகளின் நிலமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் அவுஸ்திரேலியாவின் 'ஆட்கடத்தல் விவகாரங்கள்" தொடர்பிலான சிறப்பு தூதுவர் பீற்றர் வூல்கோட் இந்தோனேசியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

எனினும், படகில் உள்ள இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் அந்தஸ்து வழங்கல் தொடர்பில் எவ்விதமான உறுதிப்படுத்தலையும் அவர் வழங்கவில்லை.
எனினும் சர்வசாதாரணமாக அவர்களை படகுகளில் இருந்து இறங்குமாறு மாத்திரம் கூறி சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் அவர் அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போது, இந்த விவகாரத்தை இந்தோனேசியாவே பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

எனினும், இந்தோனேசிய அரசாங்கம் அவர்களுக்கான அகதி அந்தஸ்த்து வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவைக்கு சிபாரிசு செய்யாத நிலை காணப்படுகிறது.

அத்துடன் அவர்களை நாடு கடத்த அல்லது, நிரந்தரமாக அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கும் எண்ணத்தை அது கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து, அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் நிலையும் படகில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பாதகமானதாகவே காணப்படுகிறது. இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர்களின் விவகாரத்தில், அவுஸ்திரேலியா தலையிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அழுத்தம் கொடுக்க முடியுமே தவிர, யாரையும் பொறுப்பேற்க முடியாது என அவர் இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்கள் இதுவரையில் இலங்கை அகதிகள் தொடர்பிலான எவ்வித சாதகமான நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையில், இந்தோனேசிய அகதிகளை அவுஸ்திரேலியா பொறுப்பேற்க வேண்டும் என அவுஸ்திரேவியாவிலும், இந்தோனேசியாவிலும் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் சர்வதேச ரீதியாக பல அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில், அவர்களை அவுஸ்திரேலியாவை பொறுப்பேற்குமாறு கெவின் ரூட்டுக்கு மேலும் அழுத்தங்கள் எழலாம் என அவுஸ்திரேலியாவின் செய்தித்தாள் ஒன்று எச்சரித்துள்ளது.

படகில் உள்ள மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக அவர்களில் பலருக்கு அம்மை நோய் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே வயிற்றோட்டம் காரணமாக ஒருவர் பலியானதுடன், சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் அவர் குறித்த தகவல் வெளிவரவில்லை.

இதற்கிடையில் இந்த படகில் உள்ள கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி மகப்பேற்றுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அவருக்கான மருந்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான எவ்வித உறுதிப்பாட்டையும் இந்தோனேசிய அதிகாரிகள் இதுவரையில் வழங்கவில்லை. எனவே அவரது மன நிலை மற்றும் குழுந்தையின் மனநிலை என்பன குறித்த கவலையும் எழுந்துள்ளது.

இந்தோனிசியாவின் மக்கள் ஒழுங்கமைப்பு ஒன்றினதும், அவுஸ்திரேலிய அகதிகள் பேரவையினதும் அறிக்கைகளின்படி, படகில் உள்ள தமிழர்கள் அடிப்படை வசதி இன்றி காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கான உணவு, மருந்து மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வழங்கல்களை அவுஸ்திரேலியாவின் சர்வதேச குடிப்பெயர்வுகளுக்கான ஸ்தாபனம் வழங்கி வருகிறது. எனினும் இது எத்தனை நாட்களுக்கு சாத்தியமானதாக இருக்கும் என உறுதி இன்றி காணப்படுகிறது.

இதேவேளை இந்த சபையின் அறிக்கை ஒன்றில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவர்களை மீள குடியேற்றத்தில் முக்கிய பங்காளியாக செயல்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கான எதிர்கால நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அவர்களின் குடியேற்றத் திகதி, நிபந்தனைகள் என்பன குறித்து உறுதியாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இதேவேளை அண்மையில் படகில் இருந்து வெளியேறிய 8 இலங்கை தமிழ் அகதிகளும், இதுவரையில் இந்தோனேசிய முகாமில் தடுத்தே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையில், அவர்கள் படகில் இருந்து நிச்சயமாக தரையிறங்க அஞ்சுவர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இவ்வாறான ஆட்கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், புலனாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆட்கடத்தல்களை தவிர்க்கும் பொருட்டு, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் அவுஸ்திரேலியா தமது புலனாய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இதுவரையில் அந்த படகில் இருந்து, அகதிகளின் பேச்சாளராக இருந்து வந்த அலெக்ஸ் என்பவர் தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதுவரையில் இது தொடர்பாக உறுதி செய்துக் கொள்ளமுடியவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’