-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
புலியின் கண்களில் சேறு வீசி தந்தையை காப்பாற்றிய மகன்
ஜார்காலி : சமயோசிதமாகச் செயல்பட்டு, புலியின் பிடியில் இருந்த தன் தந்தையைக் காப்பாற்றியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாமு என்பவர். மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகள் புலிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதன் முகத்துவாரத்தில் கும்பலாக படகுகளில் வந்து மீன் பிடிப்பது அப்பகுதி கிராமத்தவர்களின் வழக்கம்.
அதன்படி, ஒருநாள் ஜார்காலியிலுள்ள மூன்றாம் நம்பர் கிராமத்திலிருந்து நண்பகலில் ஜிதேன் மஜும்தார்(60) என்பவர் தன் மகன் தாமு (28)வுடன் புறப்பட்டு அருகிலுள்ள கெந்தோகாலி காட்டுக்கு படகில் சென்றார். அங்கு ஓர் இடத்தில் இருவரும் படகைக் கட்டி வைத்துவிட்டு, அன்று இரவு அங்கேயே தங்கினர். பின்பு நடந்ததை தாமு கூறுகிறார்: "மறுநாள் அதிகாலை 5 மணியிருக்கும். அடர்ந்த பனி; நான்கடி தூரத்தில் இருப்பது கூடத் தெரியவில்லை. திடீரென எனக்கு முன்பு உட்கார்ந்திருந்த தந்தை இருந்த இடத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது. சற்று கூர்ந்து பார்த்தேன்; அப்படியே திகைத்துப் போய்விட்டேன். என் தந்தையின் கழுத்தில் ஒரு காலையும், கைப்பகுதியில் ஒரு காலையும் வைத்தபடி ஒரு புலி உறுமிக் கொண்டிருந்தது. கையிலோ ஓர் ஆயுதமும் இல்லை; என் கையில் லத்தி மட்டும் இருந்தது. இருந்தாலும் தைரியம் தான் இல்லை. ஒருவழியாகச் சில வினாடிகளில் அசட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, என் கை நிறைய கீழே கிடந்த சகதியை அள்ளினேன். புலியின் முகத்தை நோக்கி வேகமாக வீசினேன்.'
அவ்வளவுதான், சகதி புலியின் கண்களில் விழுந்தது; புலி தன் பிடியிலிருந்து ஜிதேனை விட்டு விட்டு, வழி தெரியாமல் திகைத்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாமு, தந்தையை இழுத்து அருகிலிருந்த படகில் ஏற்றி, திரும்பிப் பார்க்காமல் வேக வேகமாக துடுப்புப் போட்டு வெளியே கொண்டு வந்து விட்டார். பின், படகில் இருந்த சில மூலிகைகளைக் கொண்டு தந்தையின் கழுத்தில் ஏற்பட்ட காயங்களில் மருந்து கட்டினார். ஊருக்குத் திரும்பியவுடன், அரசு மருத்துவமனையில் ஜிதேனைச் சேர்த்தார். "நாங்கள் எப்போதும் கும்பலாகத் தான் மீன் பிடிக்கச் செல்வோம். ஒருநாள், எங்கள் குழுவில் இருந்த ஒருவரைப் புலி தாக்கி காட்டுக்குள் இழுத்துச் சென்றதையடுத்து, ஜிதேன் எங்களுடன் வருவதை நிறுத்திவிட்டார்' என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’