வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

அரசியல் தீர்வு பற்றி இவர்கள் பேசுவது தமிழ் மக்களின் துரதிஷ்டம்


கடந்த சில நாட்களாக சரத் பொன்சேகாவின் கைது தான் சூடான விவகாரம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் சோர்ந்து போயிருந்த எதிரணிக்காரர்கள் அவல் கிடைத்தது போல நன்றாக மெல்கிறார்கள்.

பொன்சேகாவின் கைதுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. உச்ச நீதிமன்றத்தை எதற்காகத் தேர்ந்தெடுத்தார்களோ தெரியாது. இது பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவாக இருக்கலாம். நீதிமன்றத்துடனும் நீதியரசர்களுடனும் முரண்படும் பாரம்பரியம் அந்தக் கட்சிக்குத் தாராளமாக உண்டு.

ஜே. ஆர். ஜயவர்த்தன புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்த வேளையில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்லோரையும் இராஜினாமா செய்ய வைத்துத் தான் விரும்பியவர்களை நியமித்தார். அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்குக் கல்லெறிந்த கதையும் உண்டு.

இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டதென்பதை விளங்கிக் கொள்வதற்கு அதிக நேரம் எடுக்காது. எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டமென்றால் அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம்.

இவர்கள் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்துடனேயே வந்திருக்கின்றார்கள். அதனாலேயே பொலிசாருக்கு ஆத்திர மூட்டும் விதத்தில் நடந்திருக்கின்றார்கள்.

அதன் மூலம் பொலிசாரைக் கடுமையான நடவடிக்கை எடுக்க வைப்பதே அவர்களின் நோக்கம். அதைத் தேர்தல் மேடைகளில் பிரசாரம் ஆக்கலாமே.

பொன்சேகாவின் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் பிழையான ஒரு கோஷத்தை முன்வைக்கின்றன.

பொன்சேகா சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டார் என்பதே அந்தக் கோஷம். எந்தச் சட்டத்துக்கும் உட்படாத வகையில் கைது செய்யப்படுவதே சட்டவிரோதமான கைது.

பொன்சேகா சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே கைது செய்யப்பட்டார். இராணுவ சட்டத்தின் 57வது சரத்தின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தச் சரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “இராணுவச் சட்டத்துக்கு உட்பட்ட ஒருவர் ஏதாவது குற்றச் செயலைப் புரிந்து அதன்பின் இராணுவச் சட்டத்துக்கு உட்படாதவர் என்ற நிலையை அடையும் பட்சத்திலும் அவரைக் கைதுசெய்து இராணுவப் பாதுகாப்பில் வைத்திருப் பதற்கும் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரித்துத் தண்டனை வழங்குவதற்கும் முடியும்.

குறித்த குற்றச் செயல் இராணுவக் கிளர்ச்சி, இராணுவத்தைக் கைவிட்டுச் செல்லல், முறைகேடான ஆட்சேர்ப்பு ஆகியவை அல்லாததாயின் அக்குற்றச்செயல் இடம்பெற்று ஆறுமாத காலம் கடந்த பின் அவரைக் கைது செய்து விசாரிக்க முடியாது.”

பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை இராணுவ நீதிமன்றம் விசாரித்து அதன் தீர்ப்பை வழங்கும். பொன்சேகாவின் கைது விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் ஒன்றாகச் செயற்படுகின்ற போதிலும் பாராளுமன்றத் தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை.

பாராளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் கூட்டாகப் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சம்மதிக்க வைக்கும் தீவிர முயற்சியில் ஜே. வி. பி ஈடுபட்டிருக்கின்ற போதிலும் அது சாத்தியமாகுவதற்கான அறிகுறிகள் இல்லை.

ஜே. வி. பியைப் பொறுத்தவரையில் பிரதான கட்சியொன்றுடன் கூட்டுச் சேராவிட்டால் பாராளுமன்ற அங்கத்து வத்தை முழுமையாக இழக்கும் நிலை. சென்ற தடவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பாராளுமன்றத்தில் கணிசமான ஆசனங்களைப் பெற்றார்கள்.

இந்தத் தடவை அதே பாணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை.

எந்தச் சின்னம் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது ஜீவமரணப் போராட்டம் ஆகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தை ஏற்றுக்கொண்டதால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு எதிரான உணர்வலை கட்சியின் சகல மட்டங்களிலும் வளர்ந்திருக்கின்றது.

மீண்டும் அன்னம் சின்னத்தை ஏற்றால் கட்சி கரைந்துவிடும் என்பது ரணிலுக்குத் தெரியும். அதனால் யானைச் சின்னத்திலேயே போட்டி என்பதில் ரணில் உறுதியாக நிற்கின்றார்.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்காக வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் ஜே. வி. பி இறங்கியிருக்கின்றது. ஜே. வி. பிக்கு எப்படியாவது வேறு கட்சிகளின் உதவி தேவை. இல்லையென்றால் பாராளுமன்றத்தை நினைத்தும் பார்க்க முடியாது.

இந்தக் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் மனோ கணேசனும் பங்குபற்றியிருக்கின்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர் யோகராஜன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தபின் மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உறவில் ஒரு கீறல் ஏற்பட்டிருக்கின்றது.

யோகராஜனும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகக் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மனோ கணேசன் கருதுகின்றார் போலும்.

ஜே. வி. பி அமைக்கவுள்ள புதிய கூட்டணி அன்னம் சின்னத்தில் போட்டியிட முடியாது. அந்தச் சின்னத்துக்குரிய கட்சியான புதிய ஜனநாயக முன்னணியை ஸ்தாபித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க.

சின்னத்தை ஜே. வி. பி கூட்டணிக்கு வழங்க அவர் தயாராக இல்லை. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முயல் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஆராய்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் அணியில் நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனங்காட்ட விரும்பவில்லை.

தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூட்டமைப்பின் சில முக்கிஸ்தர்கள் கூறுகின்றார்கள். அதே நேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்கிறார்.

ஹக்கீம் தமிழ் மக்களின் வாக்குகளுக்குள் ஒழிந்துகொண்டு பேசுகின்றார் என்று அமைச்சர் அதாஉல்லா அண்மையில் கூறியிருந்தார்.

கிழக்கில் ஜனாதிபதிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மையானவை தமிழ் மக்களின் வாக்குகள் என்பதும் அந்த வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸின் கணக்கில் போட்டு ஹக்கீம் உரிமை கோருகின்றார் என்பதும் அமைச்சர் அதாஉல்லாவின் குற்றச்சாட்டு.

கூட்டாகச் செயற்பட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அணி சேர்வதாக ரவூப் ஹக்கீம் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது. ஏனென்றால் இரண்டு கட்சிகளிடமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இதுவரையில் இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த காலத்திலேயே புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ரவூப் ஹக்கீம் அப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். பேச்சுவார்த்தையின் போதென்றாலென்ன வேறு சந்தர்ப்பத்தி லென்றாலென்ன இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கட்சிக் கொள்கையை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தீர்வுக் கொள்கை என்னவென்பது இன்று வரை எவருக்கும் தெரியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கின்றது. புலிகளின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஏற்றுத் தனிநாட்டுப் போராட்டத்துக்குக் கைகொடுத்தார்கள். இப்போது புலிகள் இல்லை. தனிநாட்டுக் கோரிக்கையும் இல்லை.

கூட்டமைப்பினர் தாங்கள் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாகச் சொல்லவும் முடியவி ல்லை.

அதனால், தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றார்கள். எவ்வளவு காலத்துக்கு இந்தத் திட்டம் தயாரிப்பு நிலையில் இருப்பது? இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை என்பதே உண்மையான நிலை.

கொள்கை இல்லாத இரண்டு கட்சிகள் சேர்ந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகச் சொல்கின்றார்கள். ஆண்டிகள் மடம் கட்டின கதை நினைவுக்கு வருகின்றது-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்குக் கட்டுப்படாமல் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் பாராளுமன்றத் தேர்தலிலும் தனி வழி போகின்றார் என்று செய்திகள் வெளிவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் இவர் சேர்ந்திருந்த விக்கிரமபாகு கருணாரட்னவுடன் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டுச் சேரப் போகின்றாராம். ‘புதிய இடதுசாரி விடுதலை முன்னணி’ என்ற பெயரில் ஒரு அமைப்பைப் பாராளுமன்றத் தேர்தலுக்காக இருவரும் சேர்ந்து உருவாக்கப் போகின்றார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது-

ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் சிவாஜிலிங்கமும் விக்கிரமபாகுவும் தமிழ் மக்களின் துன்பங்கள் பற்றியும் இனப் பிரச்சினையின் தீர்வு பற்றியும் அதிகம் பேசினார்கள். ஆனால் தாங்கள் முன்வைக்கும் அரசியல் தீர்வு என்ன என்பதை இவர்களில் ஒருவராவது தெளிவுபடுத்தவில்லை.

தனிநாடு நடைமுறைச் சாத்தியமில்லை என்பது புலிகளின் தோல்விக்குப் பின் நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், இனப்பிரச்சினை பற்றிப் பேசும் தலைவர்கள் தாங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறுவதற்குக் கடமைப்பட்டுள்ளனர். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு என்று விக்கிரமபாகு கருணாரட்ன நீண்ட காலமாகக் கூறிவருகின்றார். சுயநிர்ணய உரிமையைப் பிரிந்துசெல்வதற்காகப் பிரயோகிக்க வேண்டுமா அல்லது ஐக்கிய இலங்கைக்குள் பிரயோகிக்க வேண்டுமா என்பது பற்றி மக்களுக்குக் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு அவரிடம் தெளிவான பதில் இல்லை.


அதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிச் சமாளிக்கிறார். தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும் எல்லா அரசியல் கட்சிகளும் அதை எவ்வாறு பிரயோகிப்பது என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறக் கடமைப்ப ட்டுள்ளன.

அதாவது சுயநிர்ணய உரிமையின் பிரயோகம் பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கட மைப்பட்டுள்ளன. அதை வெளிப்படுத்தாவிட்டால் கட்சியிடம் திட்டவட்டமான கொள்கை இல்லை என்று அர்த்தம்.

இனப் பிரச்சினையைப் பிரதான பேசுபொருளாகக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களிடம் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் இல்லாதிருப்பது தமிழ் மக்களின் துரதிஷ்டம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’