
இன்று விபூதிப் புதன். இன்றிலிருந்து கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பமாகின்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாம் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இன்று முதல் அவரது திருப்பாடுகளைத் தியானித்து பக்தி முயற்சிகளில் ஈடுபட நாம் அழைக்கப்படுகின்றோம்.
இன்றையத் திருப்பலியின் போது, அருட்தந்தை, "மண்ணிலிருந்து உண்டான மனிதனே, மீண்டும் நீ மண்ணுக்கே திரும்புவாய்" என்ற வாசகத்தோடு எமதுநெற்றியில் விபூதியிட்டுத் தவக்காலத்தை ஆரம்பித்து வைக்கின்றார்.
தவக்காலமானது கருணையின், இரக்கத்தின், மன்னிப்பின், திரும்பும், இறைவனுடன் ஒப்புரவாகும் காலமாகத் திகழ வேண்டுமென்று திருச்சபை நம்மை அழைக்கின்றது.
அன்றாடம் காலையில் எழுந்து, உண்டு, உழைத்து, களைப்பேறி, உறங்கும் வரை நாம் மனிதர்களாக வாழ்கின்றோமா அல்லது மாக்களாக வாழ்கின்றோமா என்பதை உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று அளவிடும் காலம் தான் இன்று நாம் ஆரம்பிக்க இருக்கும் தவக்காலம்.
திமிர், தீராப் பகை, தீய குணம், சுயநலம், பேராசை போன்ற, மனித நேயத்திற்கு மாறான - நம்மை மிருகமாக்குகின்ற ஈனச் செயல்கள் அனைத்தையும் களைந்து நம்மைப் பரிசுத்தமாக்குகிறது இந்த அரிய தவக்காலம்.
இறைவனோடு ஒப்புரவாகும் காலம்
நம் பாவங்களுக்காக மனம் திருந்தி, வருந்தி மறுபடியும் இறைவனோடு ஒப்புரவாகும் காலம் இது. இதனையே புனித சின்னப்பரும் "கடவுளோடு ஒப்புரவாகுங்கள். அதற்குத் தகுந்த காலம் இது. இன்றே நமது மீட்பு நாள்" என்றார்.
கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பை, பக்தியை நமது தூய்மையான அக மாற்றங்களால் வெளிப்படுத்த வேண்டும். வெளி வேட ஆசாரங்களை இறைவன் என்றுமே விரும்புவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
உள்ளங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் பரம தந்தை உண்மையான மனமாற்றத்தையே நம்மில் காண விரும்புகின்றார்.
எனவே தான், "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். நீங்கள் தர்மம் செய்யும் போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளி வேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாது இருக்கட்டும்" என்று மொழிகின்றார் கிறிஸ்து இயேசு.
தூய ஆவி இல்லாத உள்ளத்தில் அசுத்த ஆவிதான் குடிகொள்ளும். எனவே ஆண்டவரது ஆவிக்கு மட்டுமே சொந்தமான நமது உள்ளத்தையும் உடலையும் தீயவனின் உறைவிடமாக்க ஒருபோதும் நாம் இடமளித்து விடக்கூடாது.
தவக்காலத்திலாவது போலி வேடங்களைக் களைந்துவிட்டு, தூய மனதோராக வாழ திடசங்கற்பம் பூணுவோம். உண்மை விசுவாசத்துடன் நமது தூய உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.
மனம் மாறுவோம்
தவத்தின் அடையாளமாக, ஆடம்பரங்களைக் குறைத்து உணவிலும் பிறவற்றிலும் எளிமை, ஒறுத்தல் முயற்சிகள், திருச்சிலுவைப் பாதை போன்ற பக்தி முயற்சிகள் மூலம் உள் மனத் தவ முயற்சியாகிய மனமாற்றத்தை அடைவோம்.
இயேசுவின் திருப்பாடுகளிலும் மீட்புத் தரும் அவரது மரணத்திலும் பங்கு பெறுவோம். அவரோடு இறந்தோமானால், அவரோடு உயிர்ப்போம் என்ற நம்பிக்கையில் இன்றைய தவக்காலத்தை ஆரம்பித்து, அவரது அருள் ஆசியோடு வெற்றி இலக்கை அடைவோம்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’