-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 3 பிப்ரவரி, 2010
தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடுகளை வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது.
கடந்த 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 10 பேர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்பதுடன் அவர்கள் விடுதலைப் புலிகளால் சிபார்சு செய்யப்பட்டவர்கள். அவர்களில் ஒரு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் சிபார்சு செய்யப்பட்டவர்களாவர்.
கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதன் கொள்கைகளை முற்றாக கைவிட்டு தமிழ் தேசியம் பேசியபடி உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் இறைமையையும் ஏற்றுக் கொண்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரிக்க முற்பட்ட பொழுது அதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தனர் என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் திடீரென சனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் தேசிய எண்ணக்கருவை சிதைக்கும் நோக்கில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தபொழுது அந்த முடிவை கடுமையாக எதிர்த்து கூட்டமைப்பு தலைமைப்பீடத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாக இருந்தனர் என்பது யாவரும் அறிந்தது.
இவர்களில் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தனித்து செய்ற்பட்ட காரணத்தினால் எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அனுமதிப்பதில்லை என்று சம்பந்தன் தீர்மானத்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதேவேளை தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை, வடக்கு கிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம், தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க கூடிய உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காது என்று நம்பகமாக அறிய முடிகின்றது.
அவ்வாறான ஒரு முடிவை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுக்கும் போது அதனால் பொது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமைப் பீடத்தின் மேல் ஏற்படக் கூடிய அதிருப்தியை சமாளிப்பதற்காக ஒரு தமிழ் ஊடகம் ஒன்றின் உதவியுடன் முன்கூட்டியே சில உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படக் காரணம் இனிவரும் நாட்களில் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாகவும் 76 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மாறாகவும், 77 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய மக்கள் ஆணைக்கு எதிராகவும் தான்தோன்றித் தனமாக தயாரித்து வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க தடையாக இருக்க கூடியவர்கள் என்று கருதப்படும் அரசியல் கட்சிகள் எதனையும் சாராத கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களை இல்லாமல் தடுப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து தமது திட்டத்திற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’