சிலியில் பெரும் நிலநடுக்கம் |
சிலியில் மாபெரும் நிலநடுக்கம்
சிலியில் கடந்த ஐம்பதாண்டுகளில் மிகப்பெரியதான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் குறைந்தப்பட்சம் 78 பேர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பலம் பொருந்திய தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சிலியின் மத்திய பகுதியை பேரழிவு வலயம் என்று அறிவித்துள்ள சிலி அதிபர், மக்களை அமைதி காக்குமாறும் கோரியுள்ளார்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையானது பசிபிக் பிராந்தியம் முழுவதிற்கும் விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில்ல் இருந்து ஜப்பான் வரையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தீவுப்பகுதியில் ஒரு சில இடங்களில் மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஹவாய் தீவுப்பகுதியில் இருக்கின்ற அனைத்து கரையோரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா கோரிக்கை
காபூல் தாக்குதல் |
ஆப்கானிஸ்தானின் காபூலில் வெள்ளிகிழமையன்று தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தப்பட்சம் ஒன்பது இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வரும் அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஆப்கானிஸ்தானிடம் இந்தியா கேட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இதனை தெரிவித்து, இந்த தாக்குதலால் தாங்கள் சினமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காபூலில் இந்தியர்களை குறிவைத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். ஆப்கானிஸ்தான் மீட்கட்டமைப்பில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. அத்தோடு கர்சாய் அரசாங்கத்துக்கு மிக அதிகளவில் கொடை வழங்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஹெரோயின் உற்பத்தியை கட்டுப்படுத்த நேட்டோ தவறிவிட்டது - ரஷ்யா
ஹெராயின் |
ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படையினர், அங்கு ஹெரோயின் போதைப்பொருள் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
போதைப்பொருள் உற்பத்தியில் குறைந்தளவு பங்குக்கே தாலிபன் பொறுப்பாக முடியும். ஆனால் நேட்டோ இந்த குறைந்தளவு உற்பத்தியாளர்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுகின்றது என ரஷ்யாவின் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
வருடாந்தம் ரஷ்யாவுக்குள் வரும் 35 டன்கள் அளவான போதைப்பொருளில் 90 வீதமானவை ஆப்கன் ஹெரோயினால் ஆனவை என அந்த அமைப்பு கூறியுள்ளது.
இரான் சர்வாதிகார கூட்டமொன்றால் ஆளப்படுகிறது - எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்கட்சி தலைவர் மிர் ஹொசைன் முசாவி |
இரானை சர்வாதிகார கூட்டம் ஒன்று ஆண்டு வருவதாகவும், இந்த கூட்டம் தங்களுடைய செயல்களை நியாயப்படுத்த மதம் மற்றும் தேசியவாதத்தை பயன்படுத்துவதாகவும் இரானின் எதிர்கட்சி தலைவர் மிர் ஹொசைன் முசாவி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள அவர், இரானில் கட்டுப்பாடில்லாத போரை விரும்பும் வெளியுறவுக் கொள்கை, சீர்குலைக்கும் பொருளாதார திட்டங்கள் நடைபெறுவதாகவும், இதில் இருந்து ஒரு மாற்றம் தேவை என்றும் கூறியிருக்கின்றார்.
எதிர்கட்சியினர் கட்டுப்பாடின்றி ஆர்ப்பாட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல் நிலையம் |
இந்திய பெட்ரோல் டீசல் விலை உயர்வை கூட்டணி கட்சிகள் எதிர்த்துள்ளன
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதற்கு, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதானக் கட்சிகளான கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மத்திய ரயில்வே அமைச்சருமான மமதா பானர்ஜியும் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், டீசல் விலை உயர்வு உணவுப் பொருள்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீப காலமாக உணவுப் பொருள்கள் தொடர்பான பணவீக்க வீதம் கடுமையாக அதிகரித்து வருவதையும் அதைக் கட்டுப்படு்த்த மத்திய மாநில அரசுகள் போராடி வருவதையும் கருணாநிதி அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் மீதான சுங்க வரியை மீண்டும் குறைப்பதன் மூலம், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களைக் காப்பாற்ற முடியும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது, ''சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்படும் என்பது புரிகிறது. ஆனால், சாமானிய மக்களுக்கு அது தெரியாது. அவர்களால் அந்த பாரத்தை சமாளிக்க முடியாது. அவர்களுக்காக நாம்தான் போராட வேண்டும். எங்களது நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுதீப் பந்தாபோத்யாய மூலம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகனிடம் விளக்குவோம். விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்துவோம்’’ என்றார்.
ஆனால், இந்த விலை உயர்வை காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்தியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தபோது, அரசுக்குத் தேவையான பலத்தைவிட நான்கு உறுப்பினர்கள் மட்டுமே கூடுதலாக இருந்தார்கள். அதாவது, பெரும்பான்மை 272 ஆக உள்ள நிலையில், 276 உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் இந்த எதிர்ப்பு நிலை முக்கியம் வாய்ந்ததாக அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது
கிழக்கு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வாபஸ் |
இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கு இது வரை காலமும் வழங்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வித முன்னறிவித்தலுமின்றி பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் காரணமாக தங்களது பாதுகாப்பு கடமைகளிலிருந்த பொலிசார் தற்போது பொலிஸ் நிலையங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மாகாண சபை எடுத்த தீர்மானத்தின் பேரில் வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மாகாண சபையின் அனுமதியின்றி நீக்கப்பட்டமை தொடர்பாக அப் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தான் வினவிய போது "மேலிடத்து உத்தரவு என தங்களுக்கு பதிலளிக்கபட்டதாக மாகாண சபை உறுப்பினர் அப்துல் மஜீத் கூறுகின்றார்
எதிர் வரும் 9 ம் திகதி சபை அமர்வின் போது இந்த விடயத்தை தான விவாதத்திற்கு கொண்டு வரப் போவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பர்மாவில் உள்நாட்டு போர் வருமா?
ஆங் சாங் சூச்சி |
பர்மாவில் இந்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்கட்சி தலைவி ஆங் சாங் சூசி அவர்கள் வெற்றிபெற்றிருந்தார்.
ஆனால் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவித்த பர்மிய ராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சாங் சூசி அம்மையாரை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார்கள்.
இந்த பின்னணியில் இந்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தல் நேர்மையானதாகவோ, வெளிப்படையானதாகவோ இருக்குமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் நிலவுகிறது.
ஆனால் அதைவிட மேலதிகமாக, பர்மாவுக்குள்ளும் பர்மாவின் அண்டை நாடுகளுக்கும் கவலையளிக்கும் விடயமாக வேறொரு பிரச்சினை இருக்கிறது. அதாவது, அங்கே உள்நாட்டு யுத்தம் ஒன்று ஏற்பட்டுவிடுமோ என்பது தான் அந்த அச்சம்.
பர்மாவின் எல்லைப்பகுதிகள் பலவற்றை ஆயுதகுழுக்கள் கட்டுப்படுத்தி ஆட்சி செய்து வருகின்றன. அவர்களை ஒருங்கிணைத்து எல்லைப்பாதுகாப்பு படையாக மாற்றுவதற்கும், அவர்களின் ஆயுதங்களை களைவதற்கும் அரசாங்கம் எடுத்த முயற்சிகள் இதுவரை பலன் தரவில்லை. இதனால்
அவர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தங்கள் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன.
பர்மாவின் வடக்குப்பகுதியில் செயற்படும் கச்சின் ஆயுதக்குழுவின் ஆட்சி நடக்கும் பகுதிக்கு சென்ற பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ஏ எல் அவர்களின் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’