வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஜெனரல் பொன்சேகாவை விடுவிக்குமாறு ராஜபக்ச­ குடும்பத்திடம் கெஞ்சமாட்டோம்: அனோமா சிங்கப்பூர் பத்திரிகைக்கு பேட்டி


இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ராஜபக்ச குடும்பத்தினரிடம் கெஞ்சப்போவதில்லை என சிங்கப்பூரின் "ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு' அளித்துள்ள பேட்டியில் பொன்சேகாவின் மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகிப்பதை ராஜபக்ச குடும்பத்தினர் விரும்பாததே அவர்களுக்கும் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையிலான மனக்கசப்பிற்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா அப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

கேள்வி: ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவில் எப்படிப் பிரச்சினை ஏற்பட்டது?

பதில்: என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் புரிந்துணர்வின்மை ஏற்பட்டது. யுத்தத்திற்குப்
பின்னர் கௌரவக் குறைவாக எம்மை நடத்தினர்.

சரத் இராணுவத் தளபதியாகப் பதவி வகிக்கவே விரும்பினார். அவர் முப்படைகளின் தலைமையதிகாரியாக விரும்பவில்லை. அவர் யுத்த வீரர்களின் நலன்புரி விடயங்களில் கவனம் செலுத்த விரும்பினார். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இராணுவத் தளபதியாகத் தொடர்ந்து பதவி வகிக்க முடியுமா என அவர் கோத்தபாயவிடம் கேட்டார். அவர்கள் அதற்கும் அனுமதிக்கவில்லை. அதுவே அனைத்து நெருக்கடிகளுக்கும் முக்கியமானதாக அமைந்தது.

ஏனைய விடயங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இதுவே முக்கியமானது. படையினர் மரங்களின் கீழ் வாழ்வதை அவர் விரும்பவில்லை. அவர்களுக்கு வீடொன்று அவசியம் எனக் கருதினார்.

கேள்வி: இராணுவத்தில் பணிபுரியும் வேளையே அவர் தனது அரசியல் வாழ்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபட்டார் என்பது உண்மையா?

பதில்: அவர் தனது சீருடைகளைத் துறந்த பின்னரே அரசியலில் நுழைந்தார். அவர் மிகவும் நாகரிகமான முறையில் அரசியலில் நுழைந்தார். கடந்த நவம்பரில் ஓய்வுபெற்ற பின்னர் அவர் சாதாரண பொதுமகன் ஆகிவிட்டார். எனினும் அவர்கள் அவரை இராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்கப் போகிறார்கள் என மிரட்டுகின்றனர்.

கேள்வி: சதிப்புரட்சியொன்றை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார் என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

பதில்: அவர் அதனைச் செய்ய நினைத்திருந்தால் எப்போதோ செய்திருக்கலாம். பிரபாகரன் கொல்லப்பட்ட உடனேயே அவர் இதனைச் செய்திருக்கலாம். அப்போது அனைவருக்கும் அவர் மாவீரனாகத் தென்பட்டார்.

சதிப்புரட்சி என்பது கட்டுக்கதை. அவர் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் முழு மரியாதை கொடுத்தார். நம்பி னார். கட்டுப்பட்டார். எனினும் பின்னர் அவர் ஏமாற்றமடைந்தார். ஜனாதிபதியையும் பாதுகாப்புச் செயலாளரையும் சுற்றியிருந்தவர்கள் சரத்தைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்தினர்.

கேள்வி: சரத் பொன்சேகா தன்னை எதிர்த்த பத்திரிகையாளர்களைக் கொலை செய்தார், காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக் குறித்து என்ன தெரிவிக்கிறீர்கள்?

பதில்: இது எப்போதுமே இடம்பெறவில்லை. லஸந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட வேளை சரத் பொன்சேகா நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு வேறு விடயங்களுக்கு நேரமிருக்கவில்லை. இது குறித்து என்னால் உத்தரவாதமளிக்க உறுதிகூற முடியும்.

அவர் இராணுவ நடவடிக்கைகளில் மும்முரமாக இருந்தார். எந்நேரமும் வரைபடங்களுடனேயே இருந்தார். அவரது மனதில் வரைபடமொன்று இருந்தது. பொதுமக்களைக் கொல்வதற்குச் சதித் திட்டமொன்றைத் தீட்டுவதையும், யுத்தத்தையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியாது.

இளம் அதிகாரியொருவரை எனது கணவருக்கு எதிராகச் சாட்சியமளிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். குறிப்பிட்ட அதிகாரி எனது கணவரின் கீழ் சிறப்பாகப் பணியாற்றியவர்.
கொலைக் குற்றச்சாட்டுப் பொய்யானது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

கேள்வி: இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியமை குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? தமிழ் மக்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்துவதை எதிர்த்த அவர் அரசியலில் நுழைந்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரே?

பதில்: வடபகுதி முழுவதும் நிலக்கண்ணி வெடிகளால் நிரம்பியிருந்தது. அவர் நிலக்கண்ணி வெடிகள் நூறு வீதம் அகற்றப்பட வேண்டும் என விரும்பினார். அதற்குச் சில காலம் எடுத்திருக்கும். இதன் காரணமாகத் தமிழர்களை இடம் பெயர்ந்த முகாம்களில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

தற்போது கூட அவர்களை மிக வேகமாகக் குடியமர்த்துகிறார்கள் என்றே அவர் தெரிவிக்கிறார். அது அவருக்கு கவலையளிக்கிறது. தேர்தலுக்காகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். மக்களை மீளக் குடியமர்த்தும் முறை இதுவல்ல.

கேள்வி: அவரது மனோநிலை எவ்வாறு உள்ளது?

பதில்: அவர் மிகுந்த துணிச்சல் உள்ளவர். மனோரீதியாகவும் அவர் நூறு வீதம் நல்ல நிலையில் உள்ளார். அவர் மிகவும் உறுதியானவர். தன்னம்பிக்கை உள்ளவர். எவராலும் அதனைக் குறைக்க முடியாது.

கேள்வி:அவரது சிறை நிலைமை எவ்வாறு உள்ளது?

பதில்: திருமணமான கனிஷ்ட தர அதிகாரிகளுக்கான விடுதியிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசு தெரிவிப்பது போன்ற ஆடம்பரமான இடத்தில் அவர் இல்லை. இராணுவத்தில் இருந்தவர் என்ற வகையில் எனக்கு இது தெரியும்.

கேள்வி: ராஜபக்ச குடும்பத்தினரும் நீங்களும் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா?

பதில்: அவர் தான் நியாயமான முறையில் விடுதலையாவதையே விரும்புகிறார். சட்டம் சரியான பதிலைப் புகட்டும். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஏன் நான் அவர்களிடம் கெஞ்சவேண்டும்? நான் கூட அதற்கு இணங்கமாட்டேன். உண்மை ஒருநாள் வெளிவரும்.

கேள்வி: பொன்சேகாவின் கைதுக்குப் பின்னர் ஜனாதிபதியின் மனைவியுடன் நீங்கள் உரையாடினீர்கள் எனத் தெரிவிக்கப்படுவது உண்மையா?

பதில்: ஆம். நாங்கள் நல்ல நண்பர்கள். நான் அவரைத் தொடர்பு கொண்டபோது ஷிராந்தி மொஸ்கோவிலிருந்தார். இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் என்னைத் தொடர்புகொண்டார்.
சரத் கைது செய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தேன். மிருகத்தைக் கொண்டு செல்வது போலக் கொண்டு சென்றார்கள் என்றேன்.

அவரது உயிரைக் காப்பாற்றுமாறு கோரினேன். ஷிராந்தி தான் ஏதாவது செய்வார் எனக் கூறினார். அவர் செய்தார் என நினைக்கிறேன்.
பெண்களுக்கு இடையில் இன்னமும் தொடர்புகள் உள்ளன. நாங்கள் தாய்மார்கள், மனைவியர். நான் ஷிராந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன்.என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’