
எனது பாதுகாப்பு தொடர்பிலான வழக்கு முடியும் வரை எனக்கு எட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் வாகனமும் வழங்கப்பட வேண்டுமென மேன்முறையீட்டு நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வழக்கு இன்னமும் முடிவுறாமல் நிலுவையில் இருக்கின்ற வேளையில் திடீரென எனது பாதுகாப்பு அதிகாரிகளும், வாகனமும் வாபஸ் பெறப்பட்டிருப்பது அப்பட்டமான சட்டவிரோதமான செயல் என்பதுடன், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழமையான பாதுகாப்பு தொடர்வது இந்நாட்டின் சம்பிரதாயமாகும்.
ஆனால் இம்முறை இத்தகைய சம்பிரதாயம் அரசியல் நோக்கங்களுக்காக மீறப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரையில் சம்பிரதாயத்துடன், சட்டமும் மீறப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் எனது பாதுகாப்பு தொடர்பில் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி எனது பாதுகாப்பு தொடர்பான வழக்கு முடிவுறும் வரை பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்ட பாதுகாப்பை எனக்கு வழங்கவேண்டும்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்னமும் முடிவுறாத நிலையில் பொலிஸ் மாஅதிபர் ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து எனது பாதுகாப்பையும் பறித்துள்ளார்.
அதேவேளையில் அரசாங்கத்தரப்பின் அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படுகின்றது. அமைச்சர்கள் அல்லாதவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதிருந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. சில மத குருமார்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இவர்கள் அனைவரது பெயர் பட்டியல் என்னிடம் இருக்கின்றது. இந்நிலையில் எனக்கும், ஏனைய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது திட்டவட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.
இதிலும் விசேடமாக எனது பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றமும், ஐநா சபை செயலாளரும் அரசாங்கத்திற்கு ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்கள்.
தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய கொடுங்கோலர்கள் இன்னமும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்படவில்லை.
கடத்தல்களுக்கும், காணாமல் போதல்களுக்கும் காரணமான சட்டவிரோத சக்திகளை சர்வதேசத்தின் முன்னால் அம்பலப்படுத்தியிருந்த காரணத்தினாலேயே எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் சட்ட நடவடிக்கை எனது சட்டத்தரணிகள் எடுக்கின்றார்கள். இந்நிலையில் எனது உயிருக்கு ஏற்படக்கூடிய அனைத்து ஆபத்துகளுக்கும் இன்றைய அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’