வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 பிப்ரவரி, 2010

தோழர் இளங்கோவின் இறுதிநிகழ்வுகள் நாளையதினம் கொழும்பில் இடம்பெறவுள்ளன.


நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணியிலிருந்து கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்படும் தோழர் இளங்கோவின் பூதவுடல் இறுதிக்கிரியைகளின் பின்னர் பகல் பன்னிரண்டு மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகும்.





கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோ
சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ (கணபதிப்பிள்ளை ரவீந்திரன்) தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர். அவர் யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர். மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை வடிவங்களின் ஊடான பிரச்சாரங்களை தனது சக தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர். வீதி நாடகங்களை நடாத்தியவர். தனது நெஞ்சுக்கு நீதியாக அவர் வாழ்ந்தவர். எமது சமூகத்தின் சராசரி மனிதர்கள் போல் உலகத்தின் ஏதோவொரு மூலைக்குச் சென்று அவர் மிக சௌகரியமாக வாழ்ந்திருக்க முடியும்.

பல்வேறு உடல் உபாதைகள் மத்தியில் துன்ப துயரங்களின் மத்தியில் அவர் தாய்நாட்டில் சக தோழர்களுடன் தோழராக வாழ்ந்தவர். 1986 புலிகள் இயக்கம் ஈபிஆர்எல்எவ் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்த போது தோழர் இளங்கோவும் புலிகளால் கடத்தப்பட்டார். அவர் அனுபவித்த சித்திரவதைகளும் அவர் காண நேர்ந்த கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. அந்த அனுபவங்களை பல தடவைகள் தனது சக தோழர்களுடன் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாகச் சொல்வதானால் மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவர் அவர்.
தோழர்கள் நண்பர்கள் மத்தியில் தோழர் இளங்கோ மிகவும் இனிமையான பண்புள்ள மனிதராகவே காணப்பட்டார். தோழர் இளங்கோ இருக்குமிடம் எப்போதும் கலகலப்பானதாக இருக்கும். அவருடைய சமூகப் பார்வையில் ஆழமான பொருள் பொதிந்த இயல்பு காணப்படும். ஒரு வசீகரமான மனிதர் அவர். எப்போதும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். ஜனநாயக இடைவெளியை உருவாக்குவது பற்றியும் மக்களின் சுதந்திரமான வாழ்வு பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்.

அவருடைய மனைவியார் சிவசக்தி அவர்களும் அவருடைய சமூக அரசியல் வாழ்வில் இணைந்திருந்தார். தனது சமூக அரசியல் அக்கறைகளுக்கு மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளிலும் அவர் அக்கறை செலுத்தினார். அவர். ஒருபோதும் சோம்பிக் கிடந்தவரல்ல. உழைப்பின் மகத்துவத்தை அவர் உணர்ந்தவர். சங்கீதம் பாடல்கள் இசை பற்றிய ஞானம் அவருக்கு இருந்தது. இவற்றை நேர்த்தியாக தொகுப்பதிலும் அவர் ஆற்றல் பெற்றிருந்தார். அவரது தந்தையார் கணபதிப்பிள்ளை ஒரு கவிஞர். கலைஞர் அவருடைய இரு சகோதரர்கள் சமூக விடுதலை இயக்கத்தில் பங்குபற்றியவர்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபையில் அவர் அங்கத்தவராக இருந்தவர். ஈபிஆர்எல்எவ்பின் அரசியல் பிரச்சார பணிகளில் முக்கிய பங்காற்றியவர். இடர்மிகுந்த காலங்களில் எல்லாம் அவர் சகதோழர்களோடு நின்றிருந்தார். தான் சார்ந்த கட்சியின் திசைவழி அன்றாட அரசியல் நிகழ்வுகள் நீண்டகால இலக்குகள் தொடர்பான கூர்மையான அவதானமும் கரிசனையும் அவருக்கிருந்தது. உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் வாழும் தோழர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். தோழமைக்கும் நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்.

51 வயது என்பது ஒரு குறுகியகால பகுதியே. அடிக்கடி நோய்வாய்படுதல் மற்றும் பல்வேறு உடல் அசௌகரியங்களுக்கு மத்தியில் வன்னி முகாம்களில் வாழ்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படும் இடங்களுக்கு சக தோழர்களுடன் சென்று அவர்களை பார்வையிட்டவர். தோழர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றினார். குடந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கூட தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒருபோதும் அவர் சோர்வடைந்ததில்லை. யாழ் மட்டுநகர் வன்னி திருமலை தமிழகம் என பல இடங்களிலும் மனிதர்களுடன் உறவாடிய அனுபவம் அவருக்கு இருந்தது. அவர் ஒருபோதும் தனக்கென பாதுகாப்பான வாழ்க்கையொன்றை தேடிக்கொண்டவரல்ல. நெருக்கடிகள் மத்தியில் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் அவர் பெரும்பாலான காலம் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாழும் போது எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். எமது சமூகத்தில் நிலவிய அராஜகம் அவரை பெரும் கொந்தளிப்பும் புயலுமாக இருந்த சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்தித்தது. அவர் மெலிதானதும் மனிதாபிமான ஈரமும் ஜனநாயக உணர்வும் கொண்ட மனிதராகத்தான் வாழ்ந்தார். பெப்ரவரி 06ம் திகதி அதிகாலை பொழுதில் அவர் நிரந்தரமாக உறங்கிவிட்ட செய்தி எம்மை வந்தடைந்தது.
இன்றையதினம் முழுநாளும் அவரது உடல் கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் தோழர்களினதும் பொதுமக்களினதும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நாளையதினம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாளை காலை எட்டு மணியிலிருந்து கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்படும் அவரது பூதவுடல் இறுதிக்கிரியைகளின் பின்னர் பகல் பன்னிரண்டு மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகும்.

தோழர் இளங்கோ அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - ஈபிடிபி தனது வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’