வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


தாக்குதல் இடம்பெற்ற பகுதி- வரைபடம்
தாக்குதல் இடம்பெற்ற பகுதி- வரைபடம்

காபூலில் இந்தியர்கள் தங்கியிருந்த விடுதி மீது தாலிபன் தாக்குதல்

ஆப்கான் தலைநகர் காபூலில் விடுதிகள் மீது ஆயுததாரிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட இந்திய பிரஜைகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய ஆயுததாரி்கள் ஆப்கன் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் இந்தியப் பிரஜைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல்களை தாமே நடத்தியதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களை இந்தியர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் என்று ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய் கண்டித்துள்ளார்.


தக்ஸின் சினவத்ராவின் சொத்துக்கள் பறிமுதல்

தக்ஸின் ஆதரவாளர்கள்
தக்ஸின் ஆதரவாளர்கள்
தாய்லாந்திலிருந்து நாடு கடந்த நிலையில் வாழும் முன்னாள் பிரதமர் தக்ஸின் சின வத்ராவின் சொத்திலிருந்து சுமார் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை தாய் அரசாங்கம் பறிமுதல் செய்ய முடியும் என்று தாய்லாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

சின வத்ராவுக்கு சொந்தமான மொத்த சொத்தில் இது அரைவாசிப்பங்காகும். சினவத்ரா பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில், அவர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து தனது குடும்பத்துக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு செல்வம் குவித்தார் என்றும் அவர் ஈட்டிய லாபத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பறிமுதல் தொகைக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் இராணுவப் புரட்சி ஒன்றினால் பதவி கவிழ்க்கப்பட்ட தக்ஸின் சினவத்ரா, தான் எந்தக்குற்றமும் இழைக்கவில்லையென்று கூறியிருக்கிறார்.


ஆங்சாங் சூச்சியின் வீட்டுக்காவலுக்கு எதிரான மேன்முறையீடு நிராகரிப்பு

ஆங் சாங் சூச்சி
ஆங் சாங் சூச்சி
பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சாங் சூச்சி தனது வீட்டுக்காவல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை பர்மிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நிராகரிப்புக்கான காரணத்தை நீதிமன்றம் வெளியிடவில்லையென்றும் பர்மாவின் தலைமை நீதிபதிக்கு தாம் விசேட மேன்முறையீட்டை சமர்ப்பிக்க இருப்பதாகவும் ஆங்சாங் சூச்சியின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

1990ம் ஆண்டில் பர்மாவில் கடைசியாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ஆங்சாங் சூச்சியின் கட்சி அமோக வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் பெரும்பகுதிக்காலத்தை ஆங்சாங் சூச்சி, இராணுவ ஆட்சியின் தடுப்புக்காவலில் கழித்து வருகின்றார்.

அப்போது தேர்தல் முடிவுளை அலட்சியம் செய்த இராணுவ ஆட்சியாளர்கள், இவ்வாண்டின் பிற்பகுதியில் புதிய தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தத் தேர்தலில் ஆங்சாங் சூச்சி போட்டியிடக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


“இந்திய – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஊக்கமளிக்கிறது”- எஸ்.எம். கிருஷ்ணா

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
பாகிஸ்தானுடன் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஊக்கமளிப்பதாகவும் ஆனாலும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றால் பிராந்திய நலனை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரும் ஆற்றலை அவை கொண்டிருக்கும் என்று நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முக்கிய அக்கறையாகத் திகழும் பயங்காரவாத தடுப்பு பற்றி பாகிஸ்தான் என்ன பதில் அளிக்கும் என்பதில் தான் பேச்சுவார்த்தைகள் இனிமேலும் தொடர்வது தங்கியுள்ளது என்றும் கூறினார் இந்திய வெளியுறவு அமைச்சர்.

2008ம் ஆண்டில் இடம்பெற்ற மும்பைத் தாக்குதல்களின் பின்னர் இந்தியா பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியதையடுத்து, இருதரப்பு மூத்த இராஜதந்திரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக எஸ்.எம். கிருஷ்ணா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியரங்கம்
 ஆளுங்கட்சியில் போட்டியிடும் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள்
ஆளுங்கட்சியில் போட்டியிடும் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள்

இலங்கையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால எல்லை வௌ்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்துள்ளது. வடக்கு கிழக்கு, தலைநகர் மற்றும் மலையகம் உட்பட அனைத்துப் பாகங்களிலிருந்தும் பெருமளவான தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வடக்கே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இந்தக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுள்ள சிவாஜிலிங்கத்தின் புதிய கட்சி, ஈபிடிபி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) உட்பட வேறு தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் சார்பில் 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

இவர்களில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்துள்ள சிவநாதன் கிஷோர் மற்றும் சதாசிவம் கனகரட்ணம் ஆகியோர் அரசுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் தலைநகரிலும் தமிழ்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இவை பற்றிய முழுமையானத் தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்

உலகத் தமிழர் பேரவையின் சின்னம்
உலகத் தமிழர் பேரவையின் சின்னம்

இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னரான காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து, ஐ சி ஜி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் சில யோசனைகளை பரிந்துரை செய்திருந்தது.

அதில் முக்கியமாக, வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்கள் இனிமேலாவது
விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று ஐ சி ஜி அமைப்பு கூறியிருக்கிறது.

இந்த அறிக்கை குறித்தும், அதன் பரிந்துரைகள் குறித்தும் உலக தமிழர் பேரவையின் கருத்து என்ன என்று அதன் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, தமிழோசைக்கு அளித்த செவ்வியில் இமானுவல் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்திய வரவுசெலவுத்திட்டம் 2010-2011

இந்தியாவில் தொழிலாளர்கள்
இந்தியாவில் தொழிலாளர்கள்

2010-2011-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

உலக அளவிலான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டங்களில் கணிசமான அளவுக்குத் திரும்பப் பெறுவதற்கான யோசனைகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சிமென்ட், பெரிய ரக கார்கள் உள்ளிட்டவற்றுக்கான சுங்க வரிக் குறைப்பை திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் அந்த நடைமுறைகளை பிரணாப் முகர்ஜி துவக்கியுள்ளார்

வருமான வரி செலுத்துவோருக்கு ஊக்கம் தரும் வகையில், வருமான வரி வjம்புகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கீடு, ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான சுங்க வரிகளும் அதிகரிக்கப்படுகின்றன.

வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களுக்கு ஊக்கமளிப்பதற்கான சில திட்டங்களும் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் துறைக்கான ஒதுக்கீடு, ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 46 சதத்தைப் பெற்றுள்ளது. சாலைப் போ்ககுவரத்துக்கான ஒதுக்கீடு 13 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூகத் திட்டங்களுக்கான செலவினத்தைப் பொருத்தவரை மொத்த ஒதுக்கீட்டில் 37 சதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், ஊரக மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’