வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


 ஹிலாரி கிளிண்டன்
ஹிலாரி கிளிண்டன்

இரான் மீது அழுத்தம் கொடுக்க ஹிலாரி முயற்சி

இரானின் அணுத் திட்டத்துக்கு எதிராக அழுத்தங்களை முடுக்கிவிடும் முயற்சியில் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டன் இறங்கியுள்ளார்.

இரானுக்கு எதிரான தடைகளைக் கடுமையாக்க அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்ட அவர் வளைகுடா சென்றுள்ளார்.

கத்தாரில் நடக்கும் வருடாந்த அமெரிக்க மற்றும் இஸ்லாமிய உலக மன்ற மாநாட்டில் அவர் தன் வாதங்களை முன்வைத்துப் பேசுவார்.

இரானுக்கு எதிரான தடைகளைக் கடுமையாக்குவது சீனாவுக்குக் கிடைக்கும் எண்ணெயின் அளவைப் பாதிக்கும் என்று கருதி சீனா அந்த நடவடிக்கைக்குப் சவுதி அரேபியாவை சீனாவுடன் பேசி, துண்டு விழும் எண்ணெயை சவுதி வழங்கும் என்று உறுதி கொடுத்து, சீனாவுக்கு தைரியம் வழங்க சவுதி அரேபியா கேட்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கச் செயலரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.


தெற்கு ஆப்கானிஸ்தானில் தொடரும் படை நடவடிக்கை

அன்னிய துருப்புகள்
அன்னிய துருப்புகள்

தெற்கு ஆப்கானிஸ்தானில் படை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புகள் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை அகற்றி வருகின்றனர்.

ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பலமாக இருக்கும் மர்ஜா நகரத்திற்குள் அமெரிக்க மரைன்களும், ஆப்கான் இராணுவத்தினரும் மெல்ல முன்னேறி வருகிறார்கள்.

இந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கான ஆப்கான் பொலிஸார் கொண்டு வரப்பட்டுள்ளதாக மூத்த நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மர்ஜா நகரத்தில் தன்னுடைய முதல் உதவி மையத்தை ஆரம்பித்துள்ளது. இங்கு காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மர்ஜா நகரத்தில் ராக்கெட் தாக்குதலில் பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், இது குறித்து விசாரணை நடத்த ஆப்கான் அதிபர் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலஸ்தீன அதிபரின் சகா பதவியிலிருந்து நீக்கம்

மஹ்மூத் அப்பாஸ்
மஹ்மூத் அப்பாஸ்

பாலஸ்தீனிய அதிபர் மஹ்முத் அபாஸ், அவரது மூத்த சகாவான ரபீக் ஹுசைனியை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

இஸ்ரேலிய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ரபீக் ஹுசைனி பாலியல் உறவு குறித்து வெளிப்படுத்திய கருத்துப் பற்றி வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக இஸ்ரேல் செயற்படுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி விசாரிப்பதற்கு பாலஸ்தீன அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளனர்.

இஸ்ரேலிய தொலைக்காட்சியில் வெளியான வீடியோ பதிவில் ரபீக் ஹுசைனி ஆடைகளைக் களைவது போலவும் பெண்ணொருவரை அழைப்பது போலவும் காட்சி வெளியாகியிருந்தது.


பாகிஸ்தான் அதிபரின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தியுள்ளது

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி

நீதிபதிகள் இருவரை நியமிக்க பாகிஸ்தான் அதிபர் மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடுத்துள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசியல் நிலைமை மேலும் குழப்பமடைந்துள்ளது.

சனிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்துக்கு ஒரு நீதிபதியும், உயர்நீதிமன்றத்துக்கும் ஒரு நீதிபதியையும் நியமித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆணை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஆணை வெளியிட்ட ஒரு சில மணி நேரத்தில் ஆணையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்ற நியமனங்களை உச்சநீதிமன்றத்துடன் கலந்து நியமிக்க வேண்டும் என்ற அரசியலமைப்பின் கோட்பாட்டை மீறுவது போல இது அமைந்துள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செய்தியரங்கம்
குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடம்
குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடம்

இந்திய குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் கண்டனம்

பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராசா கிலானி அவர்கள் நேற்று சனிக்கிழமை இந்தியாவின் மேற்கு பகுதியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு பலரை காயப்படுத்திய குண்டுத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கிலானி அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

புனே நகரில் வெளிநாட்டவர் அதிகம் புழங்கும் சிற்றுண்டி கடையில் குண்டு வெடித்தது. இதில் கொல்லப்பட்ட 9 பேரில் இருவர் வெளிநாட்டவர்கள். இந்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பமாகும் அதிகாரப்பூர்வ பேச்சுக்கள் வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் கிலானி தெரிவித்தார்.

புனேவில் நடந்த குண்டுத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டிய இந்திய இந்துத்துவ தேசியவாதிகள் பாகிஸ்தான் கூட பேச்சுக்கள் நடைபெறக் கூடாது என கூறியிருந்தார்கள்.


சரத் பொன்சேகா வழக்கறிஞருக்கு அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டார். இதே கூட்டத்தில் பங்கேற்ற
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐனாதிபதி தேர்தல் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்கு தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.


இலங்கை பெளத்த பீடாதிபதிகளின் நேரடி அரசியல் தலையீடு குறித்த ஆய்வுக் கண்ணோட்டம்

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா

இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட வருமான சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கையின் நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.

முன்னதாக நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த நான்கு பீடாதிபதிகளும் பிப்ரவரி 18 ஆம் தேதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதற்கடுத்தபடியாக சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கையின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு இலங்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக இந்த பீடாதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

இலங்கை அரசியலில் நாட்டின் அதிஉயர் பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து நேரடியாக தலையிட்டிருக்கும் இந்த போக்கு, அங்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், அரசியல் ஆய்வாளருமான கந்தையா சர்வேஸ்வரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’