வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


கொலையாளிகள்
கொலையாளிகள்

போலி ஐரோப்பிய கடவுச் சீட்டுக்கள் தொடர்பில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரிக்கிறது

பாலஸ்தீன ஆயுததாரி ஒருவரை கடந்த மாதம் துபாயில் வைத்துக் கொன்றவர்களாக சந்தேகிக்கப்படுபவர்கள் போலியான ஐரோப்பிய கடவுச் சீட்டுகளை பயன்படுத்திருந்தமைக்கு இஸ்ரேல் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துவருகிறது.

இது சம்பந்தமாக பிரிட்டிஷ் அதிகாரிகள் இஸ்ரேலியத் தூதரை சந்தித்து தமது கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் விசாரணைகளுக்கு இஸ்ரேல் முழுமையயாக ஒத்துழைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.

பிரான்ஸும் அயர்லாந்தும் கூட இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

மஹ்மூத் அல் மப்ஹூ என்ற பாலஸ்தீன ஆயுததாரி இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸ்ஸாட்டால்தான் கொல்லப்பட்டுள்ளார் என்று தான் 99 சதவீதம் உறுதியாக நம்புவதாக துபாய் பொலிஸ்துறைத் தலைவர் கூறியிருந்தார்.

மப்ஹுவின் கொலையில் இஸ்ரேல் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமில்லை என இஸ்ரேல் கூறுகிறது.


தலாய் லாமா- ஒபாமா சந்திப்பு

தலாய் லாமா
தலாய் லாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வாஷிங்டனில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

தலாய் லாமாவை ஒரு ஆபத்தான பிரிவினைவாதி என்று வர்ணித்துள்ள சீனா, இந்த சந்திப்பு அமெரிக்க-சீன இரு தரப்பு உறவுகளை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது. ஆனால் தலாய் லாமா திபெத்தியர்களின் உரிமைகளை ஆதரிக்கும் ஒரு முக்கிய உலகத் தலைவர் என்று அமெரிக்க நிர்வாகம் கூறியுள்ளது.

இணைய தளத்தை தணிக்கை செய்வது, தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.


பாகிஸ்தான் பனிச்சரிவில் பலர் பலி

பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தில் ஏற்பட்ட பனிச் சரிவின் காரணமாக பல டஜன் வீடுகள் புதையுண்டு போயுள்ளன.

இதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. பனிச்சரிவில் சிக்கிய மேலும் பலர் இறந்துபோகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பனிச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப உடனடியாக ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு அவசர வேண்டுகோள் மாகாண அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிராந்திய போலீஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிலச் சரிவின் காரணமாக சாலைகளி்ல் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் சில இடங்களில் பல அடி உயரத்துக்கு பனி பெய்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


டெல்லியில் கோதபாய ராஜபக்ஷ

கோதபாய ராஜபக்ஷ
கோதபாய ராஜபக்ஷ
இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ஷ அவர்கள் புதுடெல்லியில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்தும், அதன்பிறகு அங்கு ஏற்பட்டுள்ள நிலவரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்தப் பயணம் முழுமையான அதிகாரபூர்வப் பயணம் இல்லை என்றும், இந்தச் சந்திப்புக்கள் மரியாதை நிமித்தமான சந்திப்புத்தான் என்றும் இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்த அவர், அங்கு நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியை இரண்டு நாள் பார்வையிட்டார்.

செய்தியரங்கம்
சரத் ஃபொன்சேகா
சரத் ஃபொன்சேகா

'பௌத்த பீடாதிபதிகளின் மாநாடு ஒத்திப்போடப்பட்டதற்கு அரசாங்க அழுத்தமே காரணம்'

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்காக தாம் அழைப்பு விடுத்திருந்த விசேட கூட்டத்தை அரசாங்கம் தந்த அழுத்தம் காரணமாகவே தாங்கள் ஒத்திப்போட்டுள்ளதாக இலங்கை பௌத்த பீடாதிபதிகள் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

''அரசாங்கத்திற்கு ஆதரவாகவுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆதரவாகவுள்ள புத்த பிக்குகளும் மல்வத்தை தலைமை பீடாதிபதி திரிபத்துவவே சிறி சுமங்கல அவர்களைச் சந்தித்து அழுத்தம் தந்திருந்தனர். அரசாங்கத்துக்கு ஆதரவு தருகிற புத்த பிக்குகள் பீடாதிபதியிடம் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேச்சு நடத்தியுள்ளனர். அந்தப் பிக்குகள் தலைமை பீடாதிபதி அவர்களை மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருந்தனர்'', என்று பௌத்த பீடாதிபதிகளின் சார்பில் பேசிய அதங்கன்னே ரத்னபால தேரோ கூறினார்.

அரசாங்கத்தின் இந்த அழுத்தம் காரணமாக பௌத்த பீடாதிபதிகளின் மாநாடு வெறுமனே ஒத்திப்போடச் செய்யப்பட்டுள்ளதே ஒழிய மாநாடு ரத்து செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் முக்கிய புத்த மதப் பிரிவுகளின் தலைவர்களுக்கிடையில் இன்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கை அரசியலின் போக்கு பற்றி விவாதிப்பதற்காக பௌத்த பீடாதிபதிகளின் மாநாட்டுக்கு முதலில் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விதத்தைக் கண்டித்தும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியும் இப்பீடாதிபதிகள் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தனர்.

ஆனால் அரசியலில் புத்த பீடாதிபதிகள் தலையிடக்கூடாது என்று அரச ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியாகியிருந்ததன் பின்னர், புத்த பீடாதிபதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டுள்ளது.


தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹிஸ்புல்லா இராஜினாமா

அமைச்சர் ஹிஸ்புல்லா
அமைச்சர் ஹிஸ்புல்லா
இலங்கையின் கிழக்கு மாகாணசபையின் அமைச்சரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நடக்கவுள்ள தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக கூறும் ஹிஸ்புல்லா அவர்கள், அந்தக் கட்சியின் சார்பில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் வேறு சில உறுப்பினர்களும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


உ.ரா. வரதராஜனை காணவில்லை என்று புகார்

உ.ரா.வரதராஜன்
உ.ரா.வரதராஜன்
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உ.ரா வரதராஜனை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என அவரது மனைவி சரஸ்வதி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் செய்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 11 ஆம் நாள் வீட்டைவிட்டுச் சென்றவர் திரும்பவில்லை. அவரது செல்போன் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அவர் இவ்வாறு மறைந்திருப்பது பல்வேறு ஊகங்களை எழுப்பியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒழுங்கு நடவடிக்கையாக அவர் அனைத்து முக்கிய பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக சி.பி.எம் அறிவித்தது. ஏன் ஒழுங்கு நடவடிக்கை என்பது பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில் கட்சியின் தமிழ்மாநில அமைப்பின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஜி.ராமகிருஷ்ணன் மாலையில் வெளியிட்ட அறிக்கையொன்றில், இரண்டு கடிதங்களை வரதராஜன் விட்டுச் சென்றிருப்பதாகவும், அவர் இவ்வாறு தலைமறைவாயிருப்பது கட்சிக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும், அவரைக் கண்டுபிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வற்புறுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

விட்டுச் சென்றுள்ள கடிதங்களில் வரதராஜன் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், தனது புத்தகங்கள், லேப்டாப் ஆகியவற்றை கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

சிபிஎம்மின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்து சமீபத்தில் அதிலிருந்து நீக்கப்பட்ட வரதராஜன் படிப்பாளியாகவும் அறிவுஜீவியாகவும் அறியப்பட்டவர். தொழிற்சங்கப் பணிகளில் திறமை வாய்ந்தவராகக் கருதப் படும் அவர் ஊடகங்களுடன் நல்லுறவு வைத்திருந்தார். மத்தியக்குழு உள்ளிட்ட வேறு சில பொறுப்புக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டதன் காரணமாக சில நாட்களாகவே கடும் மன உளைச்சலுக்குள்ளாயிருந்தார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


பிகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்

பிகார் மாநிலத்தில் கசாரி கிராமத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில், பழங்குடி மக்கள் 12 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்குச் சொந்தமான பல குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள், நேற்றிரவு அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

வீடுகளுக்குத் தீயிட்ட அவர்கள், பின்னர், அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், எரியும் குடிசைக்குள் சிக்கி கருகிய நிலையில், மீதமுள்ளவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.

மாவோயிஸ்ட் இயக்கக்தைச் சேர்ந்த 8 பேரை, சமீபத்தில் அந்தக் கிராமத்தினர் பிடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பழி தீர்க்கும் வகையிலேயே மாவோயிஸ்டுகள் அந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக, அவர்கள் தாக்குதல் நடத்திய இடத்தில் விட்டுச் சென்ற துண்டுப் பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் பாதுகாப்புப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 24 ஜவான்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பிகாரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’