வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

புனேயில் குண்டுவெடிப்பு;9 பேர் பலி


மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பிரபல ஜேர்மன் நாட்டு பேக்கரியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோரேகான் பார்க் பகுதியில் உள்ள இந்த பேக்கரி நேற்று இரவு ஒரு பார்சல் கிடந்தது. அதை கடை ஊழியர் ஒருவர் எடுத்துப் பார்த்தபோது அதில் இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.இதில் 9 பேர் உயிரிழந்தனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டுவெடித்த பேக்கரிக்கு அருகில்தான் யூத மையமான ஓஷோ ஆசிரமம் உள்ளது. இங்கு வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து போவது வழக்கம். எனவே இதைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெடிகுண்டுச் சம்பவம் குறித்து புனே பொலிஸ் கமிஷனர் சத்யபால் சிங் கூறுகையில், ஐந்து பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு புனே கண்டோன்மென்ட் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து சோதனைகளை மேற்கொண்டனர். அதேபோல தேசிய புலனாய்வு ஏஜென்சி, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார், சிபிஐ, என்எஸ்ஜி படையினரும் விசாரணைக்கு விரைந்துள்ளனர்.

மேலும் மும்பையிலிருந்து போர்ஸ் ஒன் கமாண்டோப் படையினரும் புனே வந்துள்ளனர்.

மும்பைத் தாக்குதலுக்குப் பின் முதல் தாக்குதல்..

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பயங்கர தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதற்குப் பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

குறிப்பாக உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தார். மேலும், உளவுத்துறையும் கூடுதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் தீவிரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று புனேவில் தீவிரவாதிகள் கைவரிசையைக் காட்டியுள்ளது மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 மாதங்களில் நடந்துள்ள முதல் தீவிரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பில் பலியான 9 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படுவதாகவும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 ஆயிரம் வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.

மும்பை -மகாராஷ்டிராவில் பாதுகாப்பு அதிகரிப்பு...

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் போலீஸாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அசோக் சவான் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

"விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு டேவிட் ஹெட்லி வந்து போன பகுதிளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புனேவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து தொடர்ந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பும் நிலவி வந்தது.இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று இப்போதைக்குத் தெரியவில்லை "என்றார்.

புனே சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், விமான நிலையம், மும்பை துறைமுகம், பாம்பே அணு மின் நிலையம், பங்குச் சந்தை கட்டடம், முக்கிய ரயில் நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், முக்கிய அரசு அலுவலக வளாகங்கள், தெற்கு மும்பையில் உள்ள விவிஐபிகள் அதிகம் வசிக்கும் பகுதிகள், கடற்கரைகள் உள்ளிட்டவை பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேபோல ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில், பந்தர்பூர் கோவில் உள்ளிட்ட முக்கிய தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’