வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

மட்டு. பாடசாலை மாணவி மீது வல்லுறவு: 48 படையினர் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் ஆஜர்


பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு கமாண்டோ படையணி முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மூவரை அடையாளம் காண்பதற்காக அந்த முகாமிலுள்ள 48 படையினரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி படை வீரர்களை அடையாள அணிவகுப்புக்காக மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயதான மாணவியொருவரே கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவராவார்.

சம்பவத்தை அடுத்து சுகவீனமடைந்த மாணவி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ தினம் மாணவி அணிந்திருந்த சீருடை இரத்தம் தோய்ந்த நிலையில் நேற்று முன்தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

மட்டக்களப்பு திகிலிவெட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவியர் மூவர் கடந்த 12ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினம் மேற்படி மாணவியர் பயணித்துக்கொண்டிருந்த வழியில் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருந்துள்ள இராணுவ வீரர்கள் மூவர் அந்த மாணவியரைத் துரத்திச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒரு மாணவி மாத்திரமே இராணுவத்தினரின் பிடியில் சிக்குண்டுள்ளார். பின்னர் அந்த மாணவிக்கு இனிப்புப் பதார்த்தமொன்றைக் கொடுத்துள்ள அவர்கள் அவரை மயக்கமடையச் செய்ததன் பின்னரே வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து தள்ளாடிய நிலையில் வீட்டுக்குச் சென்றுள்ள மாணவியின் உடலிருந்து இரத்தம் வந்திருந்ததாகவும் அதன் பின்னர் அவர் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ தினம் மாலை குறித்த மாணவியின் வீட்டுக்கு தம்மை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சென்றுள்ள இருவர் மாணவியின் உள்ளாடைகளை பரிசோதனைகளுக்காகவென எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சம்பவ தினத்துக்கு அடுத்த நாள் குறித்த மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அவர் அங்கேயே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோரால் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.

இதேவேளை மாணவியை பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ள சட்ட வைத்திய அதிகாரி, மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையிலேயே சம்பவ தினம் மாணவி அணிந்திருந்ததாகக் கருதப்படும் இரத்தம் தோய்ந்த சீருடை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவித்த இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, மேற்படி பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ளதாகவும், இதன் போது சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பொன்றும் நடத்தப்படவுள்ள நிலையில் குறித்த இராணுவ முகாமைச் சேர்ந்த 48 வீரர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’