.jpg)
அம்பாறையிலிருந்து திருக்கோயில் நோக்கி 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று, அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அக்கரைப்பற்று அரசடிப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இரகசியமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அடங்கிய வெள்ளை வேன் ஒன்றை கைப்பற்றிய பொலிஸார் அதிலிருந்து 8 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அக்கறைப்பற்றுப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே, சந்திரதாஸ கலப்பதி, மற்றும் வசந்த பியதிஸ்ஸ எம்.பி. ஆகியோர் தலைமையில் அக்கறைப்பற்று தம்பிலுவில், திருக்கோயில், பொத்துவில் ஊடாக இந்த வாகனப் பேரணி செல்ல முற்பட்ட போதே இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
ஐ.தே.க. ஆதரவாளர்கள் மீதான தாக்குதலை அடுத்து அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தாக்குதலை அடுத்து ஐ.தே.க. ஆதரவாளர்கள் திருக்கோயில் செல்லுவதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் தயா கமகே தலைமையிலான குழுவினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
பொலிஸாரின் தடையினை அடுத்து அக்கறைப்பற்று நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் இவர்கள் கூட்டமொன்றினை நடாத்தினர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீதும் கல் வீச்சு நடத்தப்பட்டது. இந்தக் கல்வீச்சில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஐ.தே..க ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கூட்டம் என்பவற்றினால் அக்கறைப்பற்று நகரம் சில மணிநேரம் பதற்றத்திற்குள்ளாகி இருந்தது. இங்கு கடைகளும் மூடப்பட்டதுடன் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’