வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 ஜனவரி, 2010

ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தேர்தல் தினத்தன்று கடமையாற்ற சிலருக்கே அனுமதி இடம்பெயர்ந்தோரின் வாக்குகளை கொள்ளையிடவும் திட்டம் என்கிறது ஐ. தே. க.


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் முன்பாக திடீரென வீதித் தடுப்புக்கள் போடப்பட்டு இராணுவ காவல் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு தேர்தல் தினத்தன்று இந்த நிறுவனங்களில் சேவையாற்ற குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இச்சம்பவம் ஏன்? எதற்கு? என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஐ. தே. க. வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக அரசாங்கம் 1,40,000 போலி அடையாள அட்டைகளை தயாரித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, ""இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் வட பகுதியின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிங்கள பௌத்த வேட்பாளரை ஆதரிக்கின்றனர். அது மட்டுமல்லாது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு மற்றும் நாட்டின் பிரதான கட்சிகளான ஐ. தே. கட்சி, ஜே. வி. பி. உட்பட 16 அமைப்புக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளன.

இன்று எமது நாட்டின் ஜனாதிபதியாக ஜெனரல் சரத் பொன்சேகா பதவியேற்பது நிச்சயமாகி விட்டது. பொது மக்களும் இதனை உறுதி செய்து விட்டனர். நாடு முழுவதும் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. எனவே அரசாங்கம் அச்சம் கொண்டு ஜெனரலின் வெற்றியை தடுப்பதற்கு சேறு பூசுவதோடு வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதுவரையில் தேர்தல் வன்முறைகளால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். எமது ஆதரவாளர்கள் தாக்கப்படுகிறார்கள், காரியாலயங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இதுவரையில் 800 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பில் பொது வேட்பாளருக்கு எதிரான சேறு பூசும் சுவரெட்டிகள், மது போத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முதன் முறையாக இராணுவத்தில் கடமையிலுள்ள இரண்டு அதிகாரிகளின் புகைப்படங்களை பிரசுரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. கடற்படை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சேறு பூசும் சுவரொட்டிகள், மது போத்தல்களை பொலிஸார் கண்டுபிடித்தனர். ஆனால் மேலிடத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய அவ்வாகனம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜெனரலுக்காக குரல் கொடுத்த தம்பர அமில தேரர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இன்று மீண்டும் ஊவதென்ன சுமண தேரர் உட்பட எமது அமைப்பாளர் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்க ஊடகங்களில் எதிரணி வேட்பாளருக்கு எதிராக கீழ்த்தரமான செய்திகள் வெளியிடப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாக பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான பல தடைகள், அடக்குமுறைகளுக்கு மத்தியில் எமது பிரசாரத்தை முன்னெடுக்கின்றோம்.

நாட்டு மக்கள் அனைவரும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவதற்கு தீர்மானித்து விட்டனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு இன்னமும் 48 மணித்தியாலங்களே உள்ளன. எனவே பொது மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை பறிப்பு பொது மக்களிடமிருந்து தேசிய அடையாள அட்டைகளை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு யாராவது அடையாள அட்டையை பறி கொடுத்தால் அதனை பொலிஸில் முறைப்பாடு செய்து அதன் பிரதியை வாக்குச் சாவடியில் காண்பித்தால் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அத்தோடு வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் வாக்குச் சாவடிக்குச் சென்று தமது அடையாளத்தை நிரூபித்தால் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். போலி அடையாள அட்டைகள் வடக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களினது வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக அரசாங்கம் 1,40, 000 போலியான தேசிய அடையாள அட்டைகளை தயாரித்து வருகின்றது. அரச தரப்பு உயரதிகாரியொருவர் இதற்கு உடந்தையாகவுள்ளார். அத்தோடு வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்களிலும் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது.

முப்படையினர் அதிகாரிகள்,

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு முப்படையினரும் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் உத்தரவுகளை பின்பற்றலாகாது. அதேபோன்று அதிகாரிகளும் நேர்மையாக கடமைகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் தொடர்பில் எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

திடீர் வீதித் தடைகள்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக திடீர் வீதித் தடைகள் போடப்பட்டு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தன்று இக்கூட்டுத்தõபனங்களில் சேவையாற்றுவதற்கு குறிப்பிட்ட சிலரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் அரசாங்கம் ஏதோவொரு தில்லுமுல்லுக்கு தயாராவதை வெளிப்படுத்தி நிற்கின்றது. எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஜெனரல் பொன்சேகாவின் வெற்றி நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு 55 வீத வாக்குகளைப் பெற்று பொன்சேகா வெற்றி பெறுவது நிச்சயமென்பது கருத்துக் கணிப்பொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

எனவே வெற்றியின் பின்னர் எமது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும். எதிர் தரப்பினர் எவருக்கும் ஊறு விளைவிக்கக் கூடாது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான திகாம்பரம், மேல் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பிரபா கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’