வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஜனவரி, 2010

தற்போதைய செய்தி


இலங்கையில் தேர்தல் வாக்குப் பதிவு முடிவுற்றது
இலங்கையில் தேர்தல் வாக்குப் பதிவு முடிவுற்றது

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்தது

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது.

இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்வியை அடுத்து முடிவுக்கு வந்ததன் பின்னர் அங்கு நடக்கும் முதல் அதிபர் தேர்தலில் பல லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்றாலும் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினரை வெற்றிக்கு இட்டுச்சென்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுமே முக்கியப் போட்டியாளர்களாக அமைந்துள்ளனர்.

இலங்கையின் வடக்கே வாக்குப் பதிவு சற்று மந்தமாக நடந்ததாகவும், யாழ்பாணத்தில் வாக்குப் பதிவு துவங்கும் முன் குண்டுச் சந்தங்கள் கேட்டதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆங்சாங் சூச்சி இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படலாம்

ஆங்சாங் சூச்சி
ஆங்சாங் சூச்சி
மியன்மாரில் ஜனாநாயக ஆதரவு அணிகளின் தலைவியான ஆங்சாங் சூச்சியை இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் தீர்மானித்திருக்கலாமென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களுக்கு முன்னர் அவர் விடுவிக்கப்படுவாரா என்பது தொடர்பில் தெளிவில்லை.

மியன்மார் அதிகாரிகளுடன் கூட்டமொன்றில் கலந்துகொண்ட அந்நாட்டு உள்துறை அமைச்சர், ஆங்சாங் சூச்சியையும் மற்றுமொரு எதிரணித் தலைவரான டின் ஓவ் என்பவரையும் விடுதலை செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆங்சாங் சூச்சியின் தற்போதைய வீட்டுக்காவல் உத்தரவு எதிர்வரும் நவம்பருடன் முடிவடைகின்றது.

இந்த தகவல்கள் பற்றி தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக கூறும் சூச்சியின் சட்டத்தரணி அதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனக் கூறினார்.


லெபனானில் விமான விபத்து- 20 பேரின் உடல்கள் மீட்பு

எதியோப்பிய விமானம்
எதியோப்பிய விமானம்
எதியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று லெபனான் தலைநகர் பேய்ரூட்டிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் சூறைக்காற்றில் சிக்கி விபத்துக்குள்ளானதையடுத்து கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வான் மற்றும் ஆகாய மார்க்கமான தேடுதல் பணிகள் தொடர்கின்றன.

பற்றியெரிந்த நிலையில் விமானம் கடலுக்குள் விழுவதை பார்த்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ள நிலையில் விபத்தின் பின்னணியில் சதி வேலைகள் எதுவும் உள்ளதாக சந்தேகிக்க வில்லையென அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

90 பயணிகள், பெரும்பாலும் லெபனான் மற்றும் எதியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த விமானத்தில் அடிஸ் அபாபாவுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

இருபதுக்கும் அதிகமானோரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. எவரையாவது உயிருடன் காப்பாற்றமுடியுமா என்ற முயற்சியில் தேடுதல்கள் தொடர்கின்றன.


இந்திய விளம்பரத்தில் பாகிஸ்தான் விமானப்படை முன்னாள் தளபதியின் படம் தவறுதலாகவே இடம்பெற்றது- அதிகாரிகள் வருத்தம்

இந்திய பத்திரிகைகளில் வெளியான விளம்பரம்
இந்திய பத்திரிகைகளில் வெளியான விளம்பரம்

இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை விளம்பரம் ஒன்றில் பாகிஸ்தான் விமானப் படையின் முன்னாள் தலைவரின் படம் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டமை குறித்து இந்திய அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பெண் கருக் கலைப்பு, பெண் சிசுக் கொலை போன்றவற்றில் இந்தியப் பெற்றோர்கள் ஈடுபடுவதை நிறுத்தக் கோரும் வகையிலான பத்திரிகை விளம்பரத்தில் பிற இந்திய பிரபலங்களின் படங்களோடு விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் தன்வீர் மஹ்மூத் அகமதுவினுடைய படமும் இடம்பெற்றிருந்தது.

பாகிஸ்தான் இராணுவத்தின் முக்கிய பிரமுகரரான தன்வீரின் படம் எவ்வாறு இந்த விளம்பரத்துக்குள் இடம்பெற நேர்ந்தது என்பது குறித்து டெல்லியிலுள்ள இந்திய பிரதமர் அலுவலகம் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

செய்தியரங்கம்
பெயர்களைத் தேடு்ம் வாக்காளர்கள்
பெயர்களைத் தேடு்ம் வாக்காளர்கள்

இலங்கையின் வட மாகாணத்தில் மூன்று லட்சம் பேருக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்குரிய சுமார் 3 லட்சம் வாக்காளர் அட்டைகள் வடமாகாணத்தில் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒப்புக்கொண்டுள்ள வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்குப் பொறுப்பான வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வி.குமரகுரு அவர்கள், வடமாகாணத்திற்கு தேர்தல் திணைக்களத்தினால் 6 ஆம் திகதி வழங்கப்பட்டிருக்க வேண்டிய வாக்காளர் அட்டைகள் 12 ஆம் திகதியே வழங்கப்பட்டதாகவும், மக்கள் இடப்பெயர்வு காரணமாக வேறு வேறு இடங்களில் இருப்பதனாலும் உரிய முறையில் இந்த அட்டைகளை விநியோகிக்க முடியாமல் போயிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

எனினும் அஞ்சல் அலுவலகங்களில் சென்று தமக்குரிய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்வதில் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றார்கள்.

இது பற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்யும் இந்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை

இந்திய உச்ச நீதிமன்றம்
இந்திய உச்ச நீதிமன்றம்
இந்திய மத்திய அரசால் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டது.

மேலும் அந்த 44 பல்கலைக் கழகங்களுக்கும் அவற்றின் பிரதான பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் மூலம் அந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 124 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 44 கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி உயர்நிலைக் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.

அவற்றில் 17 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ளன.

அரசின் முடிவை எதிர்த்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கு திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்தியாவில் மரபணு மாற்ற கத்தரிக்காய் உற்பத்தியை அனுமதிப்பது தொடர்பில் சர்ச்சை

இந்தியாவில் காய்கறிச் சந்தை
இந்தியாவில் காய்கறிச் சந்தை
மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கத்தரிக்காயை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்திய வேளாண் துறை அமைச்சர் அந்தக் கத்தரிக்காய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இதுவரை அதற்கு உடன்பாடு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அந்தக் கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புக்களை உள்ளடக்கிய, பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை சென்னையில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அந்தக் கூட்டமைப்பின் அமைப்பாளரும், பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவருமான சிவராமன், முதல்வரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’