நேற்று மாலை தென்மராட்சி ஏ9 வீதிக்கருகாமையில் பொதுமக்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மக்களுடன் கலந்துரையாடினார். தாம் தமது முழு விருப்பத்துடனேயே சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அம்மக்கள் பொருத்தமான சுயதொழில் வாழ்வாதார முயற்சிகளை தமக்கு ஏற்படுத்தித் தருமாறும் வேண்டிக்கொண்டனர்.
உழைத்து வாழ வேண்டும் என்ற அம்மக்களின் நோக்கத்தை பெரிதும் பாராட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்காலத்தில் எமது மக்கள் நிவாரணத்தில் தங்கியிராமல் தத்தமது உழைப்பிலேயே சொந்தக்காலில் வாழ வேண்டும் என்பதே தமது நோக்கம் என்பதை தெளிவுபடுத்தினார். கடந்த காலங்களில் நீங்கள் ரத்தம் சிந்துவதற்காக அழைக்கப்பட்டீர்கள். நானோ உங்களை வியர்வை சிந்தி உழைக்க அழைக்கின்றேன் என அம்மக்களிடம் அமைச்சர் தேவானந்தா கூறினார். மேலும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பிரதேச ரீதியாக பொருத்தமான சுயதொழில் வாழ்வாதார முயற்சிகள் கண்டறியப்பட்டு அவை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் நிவாரணம் பெறும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
சிரமதானத்தில் ஈடுபட்ட மக்களிடம் இருந்து விடைபெறும் போது அவர்கள் அனைவருக்கும் பிஸ்கட் பொதிகளை தனது கைகளினாலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’