வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 டிசம்பர், 2009

வர்த்தக கைத்தொழில் வேளாண் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்!


நேற்றைய தினம் (29) மாலை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக கைத்தொழில் வேளாண் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது மேற்படி அமைப்பினரால் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

போரினால் இடம்பெயர்ந்துள்ள வர்த்தகர்கள் கைத்தொழிலாளர்கள் வேளாண் செய்கையாளர்கள் அனைவரும் தமது தொழில்களை மீள ஆரம்பிப்பதற்கு உள்ள தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

வணிகர்கள் கைத்தொழிலாளர்கள் கடற்தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் ஏனைய துறைகளைச் சார்ந்தவர்கள் குறிப்பாக கல்வி சமூகத்தினர் வைத்தியர்கள் ஆகியோரின் சொத்திழப்புகளுக்கு ஏற்பட்ட நட்டஈடுகளை வழங்க வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தகர்கள் தாம் முன்னர் செய்து வந்த முகவர் அனுமதிகள் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

குறைந்த வட்டி வீதத்தில் வங்கிகளிடமிருந்து கடன்களை வழங்க வேண்டும்.

போர் காரணமாக கணவரை இழந்தவர்கள் மற்றும் அநாதரவாக விடப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பில் உறுதியளிக்க வேண்டும்.

போர் காரணமாக ஆரம்பத்திலிருந்து இதுவரையில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள உறவினர்கள் மீளத் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

டோக்கியோ உதவி மாநாட்டில் இணைத் தலைமை நாடுகள் இலங்கையின் சமாதானத்தில் வடக்கு கிழக்கில் உதவுவதாக உறுதியளித்த 4.5 மில்லியன் ரூபா உதவித் தொகையை மக்கள் நிவாரணமாக பெற உதவ வேண்டும்.

அரச வேலை வாய்ப்புகளின் போது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் உட்பட தொண்டராசிரியர்கள் திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

1990ம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் தமது பூர்வீக இடங்களில் மீளக் குடியேறி தமது தொழில் முயற்சியை மீளவும் ஆரம்பிக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் சமாதானத்தில் பூரணமாக நிலை பெறுவதற்கும் வளமான எதிர்காலத்தை பெறுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைள் மேற்படி அமைப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இக்கோரிக்கையினை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை படிப்படியாக எடுப்பதாக உறுதியளித்ததுடன் எதிர்காலத்தில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பாடமாகக் கொண்டு தமிழ் சமூகம் தோற்றுப்போனதொரு சமூகம் அல்ல என்ற உணர்வுடன் தொடர்ந்தும் முன்னேறுவதற்கு நாம் அனைவரும் பாடுபட்டு உழைப்பதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையை கொண்டு வருவதற்காக தான் அயராது உழைத்து வருவதை சுட்டிக்காட்டியதுடன் இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்கள் தேவை எனக் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்தாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’