
பொதுமக்கள் ஓரணியில் ஒன்றுதிரண்டு நிற்பதன் மூலமே எமது உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொக்குவில் தலையாழி மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார். கொக்குவில் தலையாழி அருள்மிகு ஞானவைரவர் தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பிரதேச மக்களின் அழைப்பினை ஏற்று இன்று மாலை அப்பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் செய்தார். தலையாழி பகுதியை வந்தடைந்த அமைச்சர் தேவானந்தா அவர்களை பிரதேச மக்கள் திரண்டு நின்று அன்புடன் வரவேற்றனர். அருள்மிகு ஞானவைரவர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்குகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தேவஸ்தான பிரதம குருவான தியாகராஜா குருக்கள் ஆசி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஆலய முன்னறலில் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. வழிபடுநர் சபைத் தலைவர் செல்வரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கடந்தகாலங்களில் மேற்படி தேவஸ்தானத்திற்கும் பிரதேசத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செய்த உதவிகள் நன்றியுடன் நினைவுகூரப்பட்டன. குறிப்பாக சபாபதி வீதி புனரமைத்து வழங்கியதற்காகவும் கொக்குவில் சந்தையினை மீளமைத்து கொடுத்ததற்காகவும் தலையாழி ஆரம்ப பாடசாலையின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவியதற்காகவும் ஞானவைரவர் தேவஸ்தானத்திற்கு கடந்த காலங்களில் வழங்கிய நிதியுதவிகளிற்காகவும் பொதுமக்களின் சார்பில் தலைவர் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இதேவேளை பிரதேச முக்கியஸ்தரான ராமநாதன் அவர்கள் உரையாற்றுகையில் கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சீரான நிர்வாக அமைப்பில் செயற்படும் ஞானவைரவர் தேவஸ்தானத்தில் தற்போது உரிமையாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரால் மேற்கொள்ளப்படும் இடையூறுகள் குறித்து எடுத்துக் கூறினார். இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் அச்சமயம் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்கள் ஓரணியில் ஒன்றுதிரண்டு நிற்பதன் மூலமே எமது உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும். இதுவே அனுபவம் எமக்கு கற்றுத்தந்த பாடமாகும். தெரிவிக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருடனும் கலந்துரையாடி ஓர் சுமுகமான முடிவினை பெற்றுக்கொள்ள முடியும் எனத்தெரிவித்தார். மேலும் விரைவில் மீண்டுமொரு சந்திப்பொன்றினை தான் அப்பகுதி மக்களுடன் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் அறிவித்ததுடன் எதிர்வரும் சந்தர்ப்பங்களை சாதகமான முறையில் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஈபிடிபியின் சர்வதேச பொறுப்பாளர் தோழர் மித்திரன் அவர்களும் உரையாற்றியதுடன் ஈபிடிபியின் நல்லூர் பொறுப்பாளர் ரவீந்திரதாசன் மற்றும் நல்லூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க உபதலைவர் அம்பிகைபாகன் உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’