வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 டிசம்பர், 2009

செய்தியறிக்கை


ஒபாமாவுக்கு நோபல் பரிசு
ஒபாமாவுக்கு நோபல் பரிசு

அதிபர் ஒபாமா நோபல் பரிசைப் பெற்றார்

நோர்வேயில் நடந்த ஒரு வைபவத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் பரிசை பெற்றுக்கொண்டுள்ளார்.

பரிசை ஏற்று உரையாற்றிய அதிபர் ஒபாமா, இந்தப் பரிசைப் பெறுவது தனக்குள் நன்றியுணர்வும் தன்னடக்கமும் பெருகச் செய்துள்ளது என்று கூறினார்.

தன்னைவிட இந்தப் பரிசைப் பெறுவதற்கு அதிகம் தகுதியுடையவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா தற்சமயம் தொடுத்துவரும் இரண்டு யுத்தங்கள் பற்றிப் பேசுகையில், ஆயுத மோதல்களுக்கு எப்பேர்ப்பட்ட விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை தான் அதிகம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் யுத்தத்தில் கூடுதலாக முப்பதாயிரம் அமெரிக்கப் படையினரை ஈடுபடுத்தப்போவதாக சமீபத்தில்தான் ஒபாமா அறிவித்திருந்தார்.

சர்வதேச ராஜீய உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்ட அசாதாரணமான முயற்சிகளை மேற்கொண்டார் என்று கூறி அம்முயற்சிகளுக்காக அவருக்கு நோபல் பரிசை வழங்குவதாக தேர்வுக்குழு கூறியிருந்தது.


கினிக்கு இடைக்கால இராணுவத் தலைவர்

டடிஸ் கமரா
டடிஸ் கமரா
கடந்த வாரம் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர்தப்பிய கினியின் இராணுவத் தலைவர் மொரோக்காவில் உள்ள மருத்துவ மனையில் இருந்து கொஞ்சக்காலத்துக்கு திரும்பமாட்டார் என்று கூறும் சமிக்ஞைகள் அதிகரித்துள்ளன.

காப்டன் மௌசா டடிஸ் கமராவின் உடல்நிலை கடின நிலையில் இருப்பதாகவும், அவர் இப்போதைக்கு வீடு திரும்பமாட்டார் என்றும் கூட்டுறவுக்கான பிரான்ஸின் இராஜ்ஜிய செயலர் அலய்ன் ஜொயெந்தத் கூறியுள்ளார்.

அவர் வீடு திரும்ப வருடங்கள் ஆனாலும் கூட, அதுவரை நாட்டின் இடைக்கால தலைவராக இரண்டாவது தளபதியான ஜெனரல் செகுபா கொனேட் செயற்படுவார் என்று இராணுவ அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.


நைஜீரிய அதிபர் எப்போது திரும்புவார் என்பது தெரியாது என்கிறது அரசு

சவுதியரேபியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் நைஜீரிய அதிபர் உமரு யார் ஆதுவா எப்போது நாடு திரும்புவார் என்று அரசாங்கத்துக்குத் தெரியாது என நைஜீரிய தகவல் துறை அமைச்சர் கூறுகிறார்.

அதிபர் யார் ஆதுவா எப்போது திரும்ப முடியும் என்பதை அவரது மருத்துவர்களே தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அதிபரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நைஜீரிய ஆளும் கட்சியின் பிரமுகர்கள் இன்று பின்னேரம் கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.


குண்டுத்தாக்குதல் குறித்து இராக்கிய நாடாளுமன்றத்தில் விவாதம்

குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது மனைவியின் பிரேதப் பெட்டியுடன் ஒருவர்
குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது மனைவியின் பிரேதப் பெட்டியுடன் ஒருவர்
பாக்தாதில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்புகளில் 127 பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இராக்கிய பிரதமர் நூரி அல் மலிக்கி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்கிறார்.

புதிய தேசிய உளவுத்துறைத் தலைவர் ஒருவரை நியமிப்பதை தடுப்பதன் மூலம் போட்டி அரசியல் குழுக்கள் இராக்கின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக நூரி அல்மலிக்கி அவர்கள் கூறினார்.

பரவலான பாதுகாப்புக் குறைபாடுகளை காரணம் காட்டி பாக்தாதுக்கான பாதுகாப்பு தலைமை அதிகாரியை கடந்த புதனன்று அல்மலிக்கி பணிநீக்கம் செய்தார்.

அல்கைதாவுடன் தொடர்புடைய குழுவான இராக்கின் இஸ்லாமிய நாடு என்னும் அமைப்பு செவ்வாயன்று நடந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

செய்தியரங்கம்

புதிய தெலுங்கானா மாநிலம் உருவாகிறது

புதிய மாநிலம் கேட்டு போராடியவர்கள்
புதிய மாநிலம் கேட்டு போராடியவர்கள்
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து, தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள்.

இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து, தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள்.

அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை துறப்பதாக அறிவித்துள்ளனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்

இலங்கை சிறைச்சாலைச்சாலைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி; வவுனியாவில் இன்று அமைதிப்பேரணி நடைபெற்றுள்ளது.

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்தப்பேரணி நடந்தது.

அரசியல் கைதிகளின் உறவினர்கள் பாதுகாவலர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் பேரணி வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணையக அலுவலகத்தின் எதிரில் இருந்து ஆரம்பமாகி வவுனியா அரச செயலகத்தில் சென்று முடிவடைந்தது.

மனித உரிமைகள் அமைச்சருக்கு எழுதப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்களினால் மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள், வவுனியா அரச செயலக அதிகாரிகள் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்டவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.


இந்தியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கக் கோரிக்கை

கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி
கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி
இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பாலியல் தொழிலாளிகளுக்கு புனர்வாழ்வு கிடைக்க உதவும் என்றும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் சிறுமி ஒருத்தி பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு சாரா உதவி அமைப்பு ஒன்று தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமென்றாலும், இந்தியாவெங்கும் பாலியல் தொழில் வெகுவாக நடந்துவரவே செய்கிறது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’