வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 நவம்பர், 2009

ஒசூர் தென்னந்தோப்பில் விழுந்த ஆளில்லா உளவு விமானம்


ஒசூர்: பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஆளில்லா உளவு விமானம் (Unmanned Aerial Vehicle-UAV) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் அருகே தென்னந்தோப்பில் விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவம் தி்ங்கள்கிழமை நடந்தது.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவான டி.ஆர்.டி.ஓ. அமைப்புக்காக தனேஜா ஏவியசன் நிறுவனம் உருவாக்கிய விமானம் இது. சோதனைரீதியில் பறக்கவிடப்பட்டபோது கீழே விழுந்து நொறுங்கியது.

ஆளில்லா உளவு விமானங்களில் இரு வகை உண்டு. ஒன்று பாராசூட் மூலம் தரையிறங்கும். இதில் சக்கரங்கள் இருக்காது. மற்றொன்று பிற விமானங்களைப் போல சக்கரங்கள் மூலம் தரையிறங்கும்.

ஒசூரில் விழுந்து நொறுங்கியது சக்கரங்கள் கொண்ட விமானமாகும்.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்ட இந்த விமானம் பெங்களூர் அருகே உள்ள பெலகொண்டபள்ளி கிராமத்தில் இருந்து செலுத்தப்பட்டது. 3 மீட்டர் நீளம் 1.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த விமானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உண்டு.

வானில் பறந்தபடியே தரைப்பகுதியை படம் பிடித்து 'லைவ்' ஆக ஒளிபரப்பும் விமானம் இது. தேவைப்பட்டால் இதில் ஏவுகணைகளையும் பொறுத்தி இலக்குகளைத் தாக்கவும் முடியும்.

பெலகொண்டபள்ளி கிராமத்தில் தனேஜா நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய விமான தளத்தில் இருந்து 'டேக் ஆப்' ஆன இந்த விமானம் தரையிறக்குவதற்காக திருப்பப்பட்டபோது விபத்துக்குள்ளானது.

ஒரு தென்னந்தோப்பில் இந்த விமானம் விழுந்தது. அந்தத் தோப்பை பராமரித்து வரும் மாரியப்பன் என்ற விவசாயி சம்பவம் நடந்தபோது தோப்புக்கு வெளியே சென்றதால் தப்பினார்.

இது பாதுகாப்பு-உளவுப் பிரிவு தொடர்பான விவகாரம் என்பதால் போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. தோப்புக்கும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் விவகாரம் அத்துடன் முடிக்கப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில் விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என்ற விசாரணையில் பாதுகாப்புத்துறை இறங்கியுள்ளது. ஒசூர், கோலார் ஆகிய இடங்களில் டி.ஆர்.டி.ஓ இந்த ரக விமானங்களை சோதனையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரஸ்டம்-1 (R-1) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஆய்வு விமானத்தில் உயரத்தை கண்காணிக்கும் கருவியில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் விபதது நடந்ததாகக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும் அமெரி்க்கப் படைகள் நூற்றுக்க்கணக்கான ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் இந்த விமானங்கள் மூலமே குண்டு வீச்சையும் இந்தப் படைகள் நடத்தி வருகின்றன.

செயற்கைக்கோள்கள் உதவியுடன் இந்த விமானங்களை அமெரிக்காவில் இருந்தபடியே அந் நாட்டினர் ஆப்கானிஸ்தான் மீது இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத் தயாரிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இருப்பது இஸ்ரேல் ஆகும். தனது எல்லைப் பகுதிகளையும் பாலஸ்தீனப் பகுதிகளையும் கண்காணிக்க அந் நாடு இந்த விமானங்களை பெருமளவில் பயன்படுத்தி வருகிறது.

இந்தியா சமீபகாலமாக இந்த ரக விமானத் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா தயாரிக்கும் இந்த ரக விமானங்களுக்கு நிஷாந்த் என பெயரிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’