வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 நவம்பர், 2009

இந்திய திரையுலக வருவாயில் 75% ஈட்டுவது தென்னிந்தியப் படங்களே!


சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.

படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும் அவர்கள் காலம் காலமாக பார்த்து வருகின்றனர். ஒதுக்கியே வைத்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குப் போய் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாவா என்று கேட்கும் அளவுக்கு பாலிவுட்டினர் வெளிநாடுகளில் இந்திப் போர்வையை போர்த்தி இந்திய சினிமாவை மறைத்து வைத்துள்ளனர்.

ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. இந்தியத் திரையுலகினர் ஈட்டும் வருவாயில் கிட்டத்தட்ட 75 சதவீத வருவாய், தென்னிந்திய சினிமா மூலமாகவே கிடைக்கிறதாம். சொச்ச வருவாயை மட்டுமே பாலிவுட் தருகிறது.

அந்தக் கதையைக் கேளுங்கள்...

அடக்கமாக இருந்து அட்டகாசமான ஹிட்களை மட்டுமே கொடுப்பது இந்தியாவிலேயே தென்னிந்திய சினிமா மட்டும்தான். உண்மையில் பாலிவுட்டை இந்த விஷயத்தில் ரொம்ப தூரத்திற்குத் தூக்கிப் போட்டு மூலையில் முடக்கியுள்ளது தென்னிந்திய சினிமா.

தரத்திலும் சரி, படங்களின் வருவாயிலும் சரி, அதிக அளவில் படம் எடுப்பதிலும் சரி தென்னிந்திய சினிமாதான் டாப்பில் உள்ளது.

தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய சினிமா திரையுலகமும் சேர்ந்து இந்திய திரையுலக வருவாயில் நான்கில் மூன்று மடங்கை ஈட்டுகின்றன. 2008-09ம் ஆண்டில், இந்த நான்கு திரையுலகமும் சேர்ந்து ஈட்டிய வருவாய் என்ன தெரியுமா, ரூ. 1700 கோடிக்கும் மேல்.

இந்தியில் தயாரிக்கப்படும் படங்களை விட தெலுங்கில்தான் அதிக எண்ணிக்கையி்ல் படங்கள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தெலுங்கில் 230 படங்கள் ரிலீஸாகின.

இந்த புள்ளி விவரங்களை இந்திய தொழில் வர்த்தக சபையும், எர்னஸ்ட் அன்ட் யங் நிறுவனமும் தெரிவித்துள்ளன.

சுருக்கமாக சொன்னால் ஸ்கிரிப்ட் முதல் ஸ்கீரின் வரை இந்திய திரையுலகின் ஆதிக்கம் தெற்கில்தான் இருக்கிறது- அனைவரும் கருதுவது போல பாலிவுட்டில் அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னகத் திரையுலகம் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை மறுபேச்சு பேசாமல் தன் வசப்படுத்திக் கொள்வதில் தெற்கத்திக்காரர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.

ஸ்பெஷல் எபக்ட்ஸ் முதல் அனிமேஷன் வரை அத்தனை நவீன தொழில்நுட்பும் தெற்கில் உள்ளது. குறிப்பாக தமிழும், தெலுங்கும் இந்த்த தொழில்நுட்பங்களை மிகப் பெரிய அளவில் பயன்படுத்துகின்றன.

இந்தியாவுக்கு சமீபத்தில் கிடைத்த ஆஸ்கர் விருதுகளில் 3 விருதுகளை தட்டிச் சென்றவர்கள் தென்னகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றம் ரசூல் பூக்குட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி என ஏராளமான சூப்பர் ஸ்டார்களைக் கொண்டுள்ள தென்னகத் திரையுலகம், வித்தியாசமான கதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தயக்கமே காட்டுவதில்லை. விதவிதமான பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் இங்கு பஞ்சமே இல்லை.

ஒரு படத்தை எப்படி வெற்றிப் படமாக்குவது என்ற பார்முலா இங்குள்ளவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவின் இந்த பிரமாண்ட வருவாய் ஈட்டல் குறித்து எர்னஸ்ட் நிறுவன பங்குதாரர் பரூக் பல்சாரா கூறுகையில், இங்கு திரைப்பட வர்த்தகம் மிகச் சிறப்பாக உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு திறம்பட செயல்படுகிறார்கள்.

படம் வெளியாகி குறைந்தது ஒரு வருடம் வரை அந்தப் படம் டிவியில் ஒளிபரப்பப்படுவதில்லை. இதனால் தியேட்டர்களுக்கு பலன் கிடைக்கிறது. தென்னிந்தியத் திரையுலகம் ஈட்டியுள்ள ரூ. 1700 கோடியில், ரூ. 1300 கோடி, தியேட்டர் வசூல் மூலம் கிடைத்தவையாகும். இந்தியாவில் உள்ள மொத்தத் திரைகளில் பாதி அளவு தென்னிந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 7 கோடிக்கு மேற்பட்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் அளவு 45 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவின் பிற பகுதிகளில் தென்னிந்திய மொழிப் படங்கள் பெரிய அளவில் முத்திரை பதிக்காவிட்டாலும் கூட இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் இவற்றின் வருவாய் மிகப் பெரிய அளவை எட்டியுள்ளது முக்கியமானது.

தமிழ் திரைப்படங்களின் வசூலில் நான்கில் ஒரு மடங்கு வெளி மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாநிலங்களில் மட்டுமே உலவி வரும் இந்த தென்னிந்திய மொழிப் படங்கள் சர்வதேச அரங்கில் மிகப் பெரிய பங்காற்றும் வாய்ப்பு நிறையவே உள்ளது. ஹோம் வீடியோ போன்றவை மூலம் அதை சாதிக்க முடியும்.

திறமையாளர்கள், தொழில்நுட்ப விரும்பிகள், மாற்றங்களை நேசிப்பவர்கள் இங்கு நிறையப் பேர் உள்ளதால் இது எளிதில் சாத்தியமாகக் கூடிய ஒன்று.

பாலிவுட்டில் உள்ளதைப் போல, தெற்கிலும், நடிகர்கள், 30 சதவீத அளவுக்கு ஊதியத்தை உயர்த்தியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அவர்கள் ஊதியத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளது.

தென்னிந்திய மொழிப் படங்களின் வருவாயில் தலா 45 சதவீதத்தை தமிழும், தெலுங்கும் ஈட்டுகின்றன. அதாவது 90 சதவீதம் இந்த இரு மொழிப் படங்கள் மூலம் தான் ஈட்டப்படுகிறது. மலையாளத் திரையுலகின் மூலமான வருவாய் 8 சதவீதமாக உள்ளது. கன்னடத் திரையுலகின் பங்கு வெறும 2 சதவீதம் தான் என்றார் பல்சாரா.

இந்த வருவாய் குறித்த அறிக்கை இன்று சென்னையில் நடைபெறும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டின்போது வெளியிடப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’