வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 அக்டோபர், 2009

செய்தியறிக்கை


குண்டு வெடித்த இடம்
சம்பவ இடம்

காபூலின் இந்தியத் தூதரகத்துக்கு அருகே வெடிகுண்டுத் தாக்குதல்; 17 பேர் பலி

ஆப்கானிய தலைநகர் காபூலில் 17 பேர் கொல்லப்படுவதற்கும் மேலும் 63 பேர் காயமடைவதற்கும் காரணமான தற்கொலைக் குண்டுத்தாக்குதலை தாமே நடத்தியதாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.

அலுவலக நேரம் ஆரம்பமாவதற்கு முன்னதாக காபூலில் இருக்கின்ற இந்திய தூதரகத்துக்கு வெளியே சக்திமிக்க கார் குண்டு ஒன்று வெடித்தது.

இந்திய தூதரகத்தையே தாம் இலக்குவைத்ததாக தமது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தாலிபான்கள் கூறியுள்ளனர்.

தமது தூதரக பணியாளர்கள் எவரும் இதில் கொல்லப்படவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பெரிய வெளிநாட்டு கொடையாளி நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


மத்திய கிழக்கு பிரச்சினை விரைவில் தீரப்போவதில்லை: இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அவிக்தொர் லியபேர்மன்
மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் தூதுவர் இஸ்ரேலில் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், வரும் வருடங்களில் அரபு-இஸ்ரேலிய முரண்பாடுகள் தீர்க்கப்படாது என்று தான் நம்புவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அவிக்தொர் லியபேர்மன் தெரிவித்துள்ளார்.

இந்த முரண்பாடுகள் குறித்து இரு தரப்புக்கும் ஏற்புடைய ஒரு தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்றும், ஆனால், அங்கு இருக்கும் நிலைமைகளுடன் மக்கள் வாழப்பழகிக்கொண்டுவிட்டார்கள் என்றும், தான் அமெரிக்க தூதுவரான ஜோர்ஜ் மிட்சேலுக்கு கூறியதாக லியபேர்மன் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன தலைவர்களுக்கு இடையே முடிந்த வரை விரைவில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தான் முயற்சிப்பேன் என்று இஸ்ரேலை அடைந்தபோது ஜோர்ஜ் மிட்செல் அவர்கள் கூறியிருந்தார்.

இந்த விடயத்தில் ஒபாமா அவர்களின் சமாதான முன்முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை.


இந்திய விலங்குகள் சரணாலயத்தில் மிருக வேட்டை?

காஸிரங்காவில் காண்டாமிருகம்
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காஸிரங்கா விலங்குகள் சரணாலயத்தில் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் ஒன்றும், புலி ஒன்றும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

விலங்குகளை வேட்டையாடுபவர்களால் இந்த விலங்குகள் கொல்லப்பட்டனவா என்பது தெளிவாகவில்லை என்றாலும், இறந்த காண்டாமிருகத்தின் கொம்பைக் காணவில்லை.

இந்த வருடத்தில் மட்டுமே இந்த சரணாலயத்தில் இருந்து 12 புலிகளும் 6 காண்டாமிருகங்களும் கொல்லப்பட்டிருப்பது, சட்டவிரோத விலங்கு வேட்டை அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவில் சர்வதேச கழகக் கிரிக்கெட் போட்டி

சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான முதலாவது பெரிய சுற்றுப்போட்டி இந்தியாவில் இன்று ஆரம்பமாகிறது.

ஐரோப்பாவில் பிரபல்யமான சாம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டப் போட்டியின் அம்சங்களைக் கொண்ட இந்தப் போட்டியில் 7 நாடுகளைச் சேர்ந்த 12 கழகங்கள் கலந்துகொள்கின்றன.

கிரிக்கெட் விளையாடும் முக்கிய நாடுகளில் கழக மட்டத்திலான போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்கள் இந்தப் போட்டியில் விளையாடுகின்றன.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு இருபத்து ஐந்து லட்சம் டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’