முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை நிறைவுபெற்றுவிட்டதால் பள்ளிகளில் குனூத் ஓதுவதை நிறுத்துமாறு ஜம் இய்யத்துல் உலமாவும் அதன் பொதுச் செயலாளரும் அறிக்கைவிட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளிலும் குனூத்தை ஓத வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுபல சேனாவுக்கும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் பொதுபல சேனா தமது நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்திக் கொள்வதாக அறிவித்து பள்ளிகளில் குனூத் ஓதுவதை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டுள்ளது. அதையடுத்தே ஜம் இய்யத்துல் உலமாவினால் இவ்வாறு அறிக்கை சகல பள்ளிவாசல்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்னும் தீரவில்லை. நாம் இனியும் ஜம் இய்யத்துல் உலமாவை பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. அவர்கள் தான் முதலில் இந்த நாட்டில் ஹலால் என்பது இல்லை என தெரிவித்தனர். அவர்கள் தான் இன்று குனூத்தையும் ஓத வேண்டாமென தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முஸ்லிம்கள் தமது பிரச்சினை முடியும் வரை இலங்கையிலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் குனூத் ஓத வேண்டும். இனிமேல் முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஜம் இய்யத்துல் உலமாவும் அதன் செயலாளரும் தான் பதில் செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’