வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெறுவதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம்: பாதுகாப்புச் செயலர்



மு ஸ்லிம்களுக்கு எந்த ஒரு அநீதியும் இடம் பெறுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்.முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “நானும் ஜனாதிபதியும் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவதாகவும் பொதுபல சேனாவுக்கும் எமக்கும் தொடர்புள்ளதாகவும் சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.ஆனால் ஹலால் தொடர்பான பிரச்சினைகளை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பேசி சுமூகமான தீர்வுக்கு கொண்டு வந்துள்ளோம். முஸ்லிம்களுக்கெதிராக சிலரினால் மேற் கொள்ளப்படவிருந்த பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். ஒரு போதும் முஸ்லிம்களுக்கெதிராக நாம் செயற்படவில்லை. எந்த ஒரு அநீதியும் முஸ்லிம்களுக்கெதிராகவோ அல்லது வேறு எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கெதிராகவோ இடம் பெறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கிழக்குக்கு வெளியே சில பிரதேசங்களில் சிறிய சில சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றை நாங்கள் உடனுக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளோம். பெஷன் பக் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக நான் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததுடன் அந்த சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதி சிறுவயது முதலே முஸ்லிம்களுடன் நெருக்கமாக பழகியதுடன் முஸ்லிம் நண்பர்களுடன் அதிகளவு உறவை வைத்துள்ளவர். ஜனாதிபதி பலஸ்த்தீனத்துடன் நெருக்கமான நட்புறவு வைத்துள்ளவர் ஜனாதிபதிக்கும் பலஸ்தீனத்துக்கும் ஆரம்பம் தொட்டே இன்று வரையும் ஒரு இறுக்கமான உறவும் பிணைப்பும் உள்ளது. அதே போன்று எங்களுக்கு ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் செய்த உதவியை நாங்கள் என்றும் மறக்க முடியாது. பாகிஸ்தான் நாங்கள் கேட்கும் போதெல்லாம் உதவியது. எங்களுக்கு எப்போதும் பாகிஸ்தான் உதவ தயாராக உள்ளது. முஸ்லிம்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் முழுமையாக கவனமெடுத்து செயல் பட்டுள்ளோம். சிற்சிறிய சம்பவங்களை ஒரு சில இணையத்தளங்களும், குறுஞ்செய்திகளும்(எஸ்.எம்.எஸ்.)திரிபுபடுத்தி பெரிதாக்குகின்றன. இந்த விடயங்களில் நாம் கவனமாக இருப்பதுடன் நீங்கள் பொறுப்புள்ளவர்கள் என்ற வகையில் உங்களின் பிரதேசங்களுக்கு சென்று விடயங்களை தெளிவு படுத்துங்கள். முஸ்லிம்கள் அச்சமோ பீதியோ கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதையும் சமூகத்தின் மத்தியில் கூறுங்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். இவ் உயர்மட்ட சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி ,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் சம்மேளனங்கள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயப் பொறுப்பாளர் ஜூனைட் நளீமி,இராணுவ உயரதிகாரிகள்,மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’