வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 மார்ச், 2013

அமெரிக்கப் பிரேரணையின் அழுத்தங்கள் அரசியல் தீர்வுக்கு உதவப் போவதில்லை!


லங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும், மாறாக தமிழ் முஸ்லிம் சிங்கள மற்றும் ஆளும் அரசாங்க கட்சிகள் யாவும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளே உள்நாட்டு பிரச்சினையை தீர்க்கவும், அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணவும் அவசியமானது எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டகளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பது போல் எமது பிரச்சினைகளை நாம் மட்டுமே பேசி தீர்க்க முடியும். அரசியல் தீர்வு என்ற குழந்தையை நாம் பிரசவிப்பதற்கு வெளியுலக விருப்பங்களும், உதவிகளும் ஒரு மருத்துவிச்சியின் சேவையினையே எமக்கு வழங்க முடியும். வெளியுலக தீர்மானங்கள் எவையும் தத்தமது நாடுகளின் நலன் சார்ந்த இலங்கை அரசுடனான விருப்பு வெறுப்புகளை கொண்டிருக்க முடியாது. மாறாக அவை தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு குறித்த நலன்களை பிரதான நோக்காக கொண்டிருப்பதையே நாம் விரும்புகின்றோம். எமக்குத் தேவை,... தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான ஓர் அரசியல் தீர்வு. அதற்கான நடைமுறை சாத்தியமான வழிமுறை. கடந்த கால அழிவுகளில் இருந்து எமது மக்கள் மீண்டெழுவதற்கான வாழ்வியல் எழுச்சி. தொடர்ந்தும் இங்கு நீடித்து நிலவ வேண்டிய மனித உரிமைகள், மற்றும் அடிப்படை ஐனநாயக உரிமைகள். வறுமையற்ற வாழ்வு,... வரலாற்று வாழ்விடங்களில் அபிவிருத்தி... இவைகளுக்காகவே நாம் ஏனையவர்கள் போல் அன்றி வெளிப்படையாகவே அரசுடன் இணக்கமாக பேசி செயற்பட்டு வருகின்றோம். அரசியல் தீர்விற்கான நல்லெண்ண சமிக்ஞையினையும் காட்டி வருகின்றோம். ஆனாலும், தமிழ் பேசும் மக்களை தவறாக வழிநடத்தி, தேர்தல் காலங்களில் அவர்களது நரம்புகளை முறுக்கேற்றி பெரும்பான்மை பலத்தோடு நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களை கடந்த காலங்களை போல் ஏமாற்றி வருகின்றனர். தைப்பொங்கலுக்கு தமிழீழம் என்றும், அடுத்த மேதினம் சுதந்திர தமிழீழத்தில் நடக்கும் என்றும் எமது மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள்... இப்படி சொல்லடி வித்தை காட்டி எமது மக்களின் வாக்குகளை அபகரித்து தமது நாடாளுமன்ற நாற்காலி கனவுகளை நிறைவேற்றியது மட்டுமே இங்கு நடந்த மிச்சம். இலங்கை - இந்திய ஒப்பந்தம், பிரேமதாசா புலிகள் பேச்சுவார்த்தை, சந்திரிகா புலிகள் பேச்சுவார்த்தை, ரணில் புலிகள் பேச்சுவார்த்தை, இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச புலிகள் பேச்சுவார்த்தை என அனைத்து சந்தர்ப்பங்களும் தமிழ் பேசும் தலைமைகளாலேயே திட்டமிட்டு கைவிடப்பட்டன. கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்களிடம் வாக்கு கேட்டு ஆணை பெற்றவர்கள் எமது மக்களை ஏமாற்றியது போல்,... நடந்து முடிந்த தேர்தலிலும் அரசியல் தீர்வு பெற்று தருவதாக எமது மக்களிடம் வாக்கு கேட்டு 14 ஆசனங்களோடு ஆணை பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தத்தமது சொந்த சலுகைகளுக்காக மட்டும் அரசுடன் பின்கதவு தட்டி கை குலுக்கி இணக்கமாக பேசி அதில் வெற்றியும் பெறுகின்றார்கள். ஆனாலும் தமக்கு ஆணை வழங்கிய தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப்பிரச்சினை விடயத்தில் மட்டும் தமது வெறும் சுயலாப எதிர்ப்பு அரசியலையே நடத்தி வருகின்றார்கள். அறுபது ஆண்டு காலமாக தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக தமது தவறுகளை மூடி மறைத்து ஒப்பாரி வைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. ஆனாலும், ஆறு மாதங்கள் மட்டும் கால அவகாசம் கொடுத்து அதற்குள் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணலாம் வாருங்கள் என்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்கின்றது அரசாங்கம். இது ஒரு இறுதி முயற்சியாக இருக்கட்டும் என்று எண்ணித்துணிந்து ஆறு மாத கால அவகாசத்தை கூட அரசியல் தீர்வுக்கு முயன்று பார்க்க விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் அரசியல் தீர்வுக்கு விருப்பமற்றவர்கள் என்பதையே வெளிப்படுத்தி வருகின்றது. எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக நீடித்து சென்று, அரசியல் சித்து விளையாடி, அடுத்து தேர்தலிலும் நாடாளுமன்ற நாற்காலிகளில் உட்கார்ந்து, நாடாளுமன்ற சுகங்களையும், சொந்த சலுகைகளையும் பெற்று, வாழ் நாள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக இருந்து விட்டுப் போவதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பமாகும். வெளியுலக தீர்மானங்கள் எவையும் எமது மக்களுக்கு விடிவு பெற்று தரப்போவதில்லை. எமது மக்களின் அரசியலுரிமைகளை எவரும் தாம்பாளத்தட்டில் வைத்து படைத்து ஏந்தி வந்து தரப்போவதும் இல்லை. எமது மக்களின் பிரச்சினைகளை நாமே பேசி தீர்ப்பதற்கான வழிமுறையை நாமே தேட வேண்டும். அதற்காக எவரும் அரசாங்கத்தின் காலில் விழுந்து சரணகதி அடையவேண்டும் வேண்டும் என்று நாம் கூறவில்லை. அதை யாரும் விரும்பவும் இல்லை. அரசாங்கம் அறிவித்திருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு இறுதி முயற்சியாக அரசியல் தீர்வுக்கு முயன்று பார்க்க வருமாறு நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். வெற்று வீர அறிக்கைகளும், வெறும் வாய்ப்பேச்சுக்களும் எமது மக்களுக்கு எந்த விமோசனங்களையும் பெற்றுத்தரப்போவதில்லை. மதிநுட்ப சிந்தனைகளும், அரசியல் சாணக்கிய தந்திரங்களும் எமது மக்களை வழி நடத்தி செல்லட்டும். இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் சர்வதேச சமூகம் அரசியல் தீர்வுக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்த மறுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதும் அழுத்தங்களை கொடுக்கட்டும். நாம் சொல்லி வந்தவைகளே இதுவரை இங்கு நடந்து முடிந்திருக்கிறது. இனி இங்கு நடக்கப்போவதும் எமது தீர்க்க தரிசனங்களே. வரலாறு யாருக்காவும் காத்திருக்காது. வந்து சேருங்கள் நடைமுறை சாத்திய வழிமுறை நோக்கி என்று நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம். இவ்வாறு அந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக நடைமுறைச்சாத்திய வழி நின்று வெற்றி பெறும் காலம் விரைவில் நிகழும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’