வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 பிப்ரவரி, 2013

தெல்லிப்பளை, உடுவில் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அமைச்சர் இன்று விஜயம்!


தெ ல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலர் பிரிவுகளில் இயங்கி வரும் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களது பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
குறித்த பிரதேச செயலர் பிரிவுகளின் கீழான நலன்புரி நிலையங்களுக்கு இன்றைய தினம் (27) அமைச்சர் அவர்கள் விஜயம் மேற்கொண்டார்.

தெல்லிப்பளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழான மல்லாகத்திலுள்ள நீதவான், கோணாப்புலம், தும்புத்தொழிற்சாலை, அளவெட்டி கும்பலை, அளவெட்டி கணேஸ்வர ஆகிய நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவின் கீழான சுன்னாகம் மேற்கு கந்தரோடை பிள்ளையார் முகாம், சுன்னாகம் தெற்கு பிரதேச சபையின் கீழான சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் விஜயம் மேற்கொண்டு மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்பிரகாரம், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களது அடிப்படைத் தேவைகளான நீர், மலசலகூடம், கல்வி, சுகாதாரம், சுயதொழில், நிவாரணம், இருப்பிட வசதி, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, மலசலகூடங்களை தேவைக்கேற்ப அதிகரித்தல், மற்றும் புனரமைத்தல் போன்றவற்றுடன் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நலன்புரி நிலையங்களிலுள்ள குழாய்கிணறுகளையும் ஏனைய கிணறுகளையும்,  பராமரிப்புக்கேற்ற வகையில் சீரமைப்பது, அத்துடன், இதுவரை மின்சாரம் கிடைக்காத நலன்புரி நிலையங்களுக்கு அதனை வழங்குதல் மற்றும் போக்குவரத்து தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்தியதுடன், தேவைகளின் அடிப்படையில் பிரதேச செயலர் ஊடாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக நிலையங்களிலுள்ள பழுதடைந்த கொட்டகைகளை அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கிடையில் புனரமைப்பதற்கும் மல்லாகம் நீதவான்; மற்றும் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையங்களில் கடிநாய்களின் தொல்லைகளால் தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பில் மக்கள் எடுத்து கூறிய போது குறித்த விடயத்திலும் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், நாய்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்தும் வகையில், நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறு குறித்த பிரதேச சபைகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இவ்விஜயத்தின்போது மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், இவ்வாறான நலன்புரி நிலையங்கள் இருப்பது தொடர்பில் அரசுக்குத் தெரியாது இருந்த நிலையில் நான் இவ்விடயம் குறித்தும் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் தெரியப்படுத்தி அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஊடாக நான் கேட்டதற்கு இணங்க ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக தேவைகளை பிரதேச செயலகங்கள் ஊடாக நிவர்த்தி செய்து வருகின்றோம்.

அத்துடன், கிணறுகளில் நீர் தேங்கி அதனால் ஏற்படும் தொற்று நோய் ஆபத்துக்களிலிருந்து மக்களை காப்பாற்றும் வகையில் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை, அயற்பகுதி மக்களுக்கு இடையூறுகளையோ, அல்லது பிரச்சினைகளையோ ஏற்படுத்தாத வண்ணம் நலன்புரி நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, தனியாருக்குச் சொந்தமான காணிகளில் நலன்புரி நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் இங்கு வாழும் மக்கள், சொந்த இடங்களுக்கு மீளக் குடியமரும் வரையிலோ அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்யும் வரையிலோ தமக்கு அறிவிக்காமல் அப்பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டதுடன், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்.

அரசுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் ஏற்கனவே பல பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பல பகுதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இதற்கு மக்களது ஒன்றிணைந்த ஒத்துழைப்பும், ஒத்தாசையும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990 ம் ஆண்டு கட்டுவன், வறுத்தலைவிளான், வயாவிளான், தையிட்டி, ஊரணி, காங்கேசன்துறை, மயிலிட்டி, வீமன்காமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தற்போது குறித்த பகுதிகளில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகனன், உடுவில் பிரதேச செயலர் நந்தகோபாலன், ஈ.பி.டி.பியின் வலிவடக்கு பிரதேச இணைப்பாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு), ஈ.பி.டி.பியின் சுன்னாகம் உதவி இணைப்பாளர் மகேந்திரம் (வள்ளுவன்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

                                                  நீதவான் நலன்புரி நிலையம் 






                                   கோணாப்புலம் நலன்புரி நிலையம்






                           தும்புத்தொழிற்சாலை நலன்புரி நிலையம்






                             கும்பலை நலன்புரி நிலையம்






                                கணேஸ்வர நலன்புரி நிலையம்






               கந்தரோடை பிள்ளையார்  நலன்புரி நிலையம்




                            சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம்




-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’