வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 9 பிப்ரவரி, 2013

அரசாங்கம் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்: மனோ


லங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகம் இன்று கட்சி பேதம் இல்லாமல் எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதான எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், நெடுமாறன், திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இலங்கை ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக கடும் எதிர்ப்புகளை முன்னெடுக்கின்றனர்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
'இந்த கடும் எதிர்ப்புகளை கண்டு கோபப்பட்டு தமிழக தலைவர்களை திட்டி தீர்ப்பதில் எந்த வித பிரயோசனமும் இல்லை என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும், மனித உரிமை பிரச்சினைகளுக்கும் எந்தவித தீர்வுகளையும் தராமையே இந்த பாரதூரமான நிலைமைக்கு காரணம் என்பதை அரசாங்கத்தில் இருக்கின்ற அனைத்தும் அறிந்த பண்டிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கமம் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நான் தமிழகத்து அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தால் இதையேதான் செய்வேன். ஆதைத்தான் இன்று தமிழக தலைவர்கள் செய்கிறார்கள். இது ஆரம்பம் மட்டுமே. பெப்ரவரியில் தொடங்கி மார்ச்சில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு கூட்டம் முடியும் வரை தமிழகத்தில் கொந்தளிப்பு குறையாது. தமிழகத்தில் மாத்திரம் இல்லாமல், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் டில்லியிலும், திருப்பதியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதார தடையை கோரியுள்ளார். அது மட்டும் அல்ல. கடந்த முறையை போல் அல்லாமல், இந்த முறை அமெரிக்காவின் தீர்மான வாசகங்களில் உள்ள கடுமையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எடுக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச மாநாடு ஒன்றை கூட்டப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மத்திய அரசு அமைச்சர்களும் தாம் தமிழகத்தின் உணர்வுகளை புரிந்துகொள்வதாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசு இன்று இந்நாட்டில் தமிழ் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை. முஸ்லிம் மக்களையும் ஏமாற்றுகிறது. இஸ்லாமிய பள்ளிகளை தாக்கும் தீவிரவாதிகளை தட்டிகொடுத்து வளர்த்துவிட்டு, இன்று எதுவும் நடக்கவில்லை என்று கூச்சமில்லாமல் பொய் சொல்கிறது. இனிமேல் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை, இலங்கை அரசுக்கு பெற்று தருவதற்கு எந்வொரு தன்மானமுள்ள முஸ்லிம் இன, மத தலைவரும் முன் வர முடியுமா என்ற நிலைமை இன்று ஏற்பட்டுவிட்டது. யுத்தம் முடிந்து விட்டது. தமிழர்கள் இப்போது தனிநாட்டை கோரவில்லை. இன்று ஆயுத போராட்டம் இல்லை. நமது கோரிக்கை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிர்ந்துவழங்கப்படவேண்டும் என்பதுதான். இதைதான் உலகமும் சொல்கிறது. உலகம் சொல்வதை கேட்காமல், இந்நாட்டு தமிழ் தலைவர்கள் சொல்வதை கேட்காமல் இனவாத நோக்கில் இந்த அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்படுகிறது. இதுதான் இன்று தமிழகத்தில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கு காரணம். எனவே தமிழக தலைவர்களை திட்டாதீர்கள். உங்களை திருத்திகொள்ளுங்கள் என இந்த அரசாங்கத்துக்கு நாம் சொல்கிறோம். அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் இடதுசாரி தலைவர்கள் திருந்தவேண்டும். உலகம் உங்களை பார்த்து ஏற்கனவே சிரிக்கிறது. கைகொட்டி சிரிக்கும் நிலைமை வருமுன் தயவு செய்து திருந்துங்கள். நீங்கள் திருந்தி பின்னர் நீங்கள் உங்கள் அரசாங்கத்தை புத்தி சொல்லி திருத்த முயல வேண்டும். இல்லாவிட்டால் இந்த இனவாத கூட்டணி அரசிலிருந்து வெளியேற வேண்டும். ஒட்டுமொத்தமாக தமிழ், முஸ்லிம், இடதுசாரிகள் அரசிலிருந்து வெளியேறினால் அது அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளும்' என்று அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’