ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கூடுதல் ராணுவத்தினரை பாகிஸ்தான் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.இதைத் தொடர்ந்து எல்லையில் ரோந்து அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டைக் காக்க தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த ஒருவார காலமாக பாகிஸ்தான் அட்டூழியம் செய்து வருகிறது. ஜனவரி 6-ந் தேதி இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதியன்று பூஞ்ச் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் அவர்களது தலையையும் துண்டித்து எடுத்துச் சென்றனர் பாகிஸ்தான் வீரர்கள். இதில் ஒருவரது தலையை எல்லைப் பகுதியில் போட்டுவிட்டு மற்றொரு தலையை தூக்கிக் கொண்டு சென்றனர் பாகிஸ்தான் வீரர்கள். தற்போது இந்தத் தலையை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வருகிறது. மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்தும் கடும் கண்டனத்தை மத்திய அரசு தெரிவித்தது இந்திய தூதருக்கு சம்மன் - கண்டனம் இந்நிலையில் நேற்று தொடர்ந்து இந்திய நிலைகள் மீது கடும் துப்பாக்கிச் சூட்டை மீண்டும் பாகிஸ்தான் மேற்கொண்டது. இதனால் இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதலை நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டுக்கான இந்திய தூதரான ஷரத் ஷப்ஹர்வாலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. எல்லையில் படைகள் குவிப்பு இன்று தமது ராணுவ வீரர்கள் அனைவரது விடுமுறையை ரத்து செய்துள்ளதுடன் அனைவரையும் உடனே பணியில் இணையுமாறு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் அரசு. மேலும் ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கூடுதல் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் மேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லும் 25 சரக்கு லாரிகள் கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. எல்லைக் கதவை திறக்காததால் 25 லாரிகளிலும் உள்ள உணவுப் பொருட்கள் வீணாகி வருகின்றன. இதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வரும் பேருந்து போக்குவரத்தை 3 நாட்களுக்கு நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தக்க பதிலடி கொடுப்போம்- அந்தோணி ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை குறித்து கருத்து தெரிவித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது. இது கவலைக்குரியது. இதனால் எல்லை கட்டுப்பாடுட் கோட்டுப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். அங்கு ராணுவ வீரர்கள் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டை பாதுகாக்க அவர்கள் தக்க பதிலடி கொடுப்பர். நாட்டின் மற்ற பகுதியில் இருந்து காஷ்மீருக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. காஷ்மீர் மாநிலத்திலேயே போதுமான ராணுவ வீரர்கள் உள்ளனர். நாட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’