வி ஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கமல்ஹஸன் தரப்பும் இஸ்லாமிய அமைப்புக்களும் பேசி உடன்பாட்டுக்கு வர முன்வருவார்களேயானால் அவர்களுக்கு உதவ தமிழக அரசு தயார் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
மேற்படி திரைப்படம் குறித்து இன்று அவர் அளித்த பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
'ஒரு முதலமைச்சராக நான் இப்போது சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். கமல்ஹாசனை நேற்று சந்தித்த இஸ்லாமிய பிரதிநிதிகளிடம், படத்தில் சில காட்சிகளை தான் வெட்ட தயாராக இருப்பதாக தங்களிடம் கமல் கூறியதாகவும், அது தங்களுக்கு ஏற்புடையதே என்றும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே கமல்ஹாசனும், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் உட்கார்ந்து பேசி, சுமூகத்தீர்வு காண முன்வந்தால் அதை அரசு வரவேற்று, சுமூகத் தீர்வு ஏற்பட உதவத் தயாராக உள்ளது.
விஸ்வரூபம் படப் பிரச்சினையைப் பொறுத்தவரை அரசியல் பிரச்சினை அல்ல. இது முற்றிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதான். இதை மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இங்கு யாருடைய கருத்துச் சுதந்திரமும் முடக்கப்படவில்லை.
கமல் தரப்பு நன்றி தெரிவிப்பு
விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாத்துறையினர்.
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த சூழலில், இன்று கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, அவரது அலுவலகத்தில் கூடினர் சினிமா பிரபலங்கள் பலரும்.
அவர்கள் இந்தத் தடை, கமலுக்கு தங்களின் ஆதரவை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தபோதே, முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி வெளியாகிவிட்டது. இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று முதல்வர் கூறியிருந்தார்.
இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் வெளியில் கொண்டாட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து வந்திருந்த அத்தனை பிரபலங்களும் முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில், 'தமிழக முதல்வரின் அறிவிப்பின் மூலம் விஸ்வரூபம் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு எங்கள் திரையுலகமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
மும்பையில் இருக்கும் கமல்ஹாசனிடம் இந்தத் தகவலை தெரிவித்துவிட்டோம். இஸ்லாமிய அமைப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும். இதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்குகிறோம்' என்றார்.
நடிகர் சிவகுமார் பேசுகையில், 'முதல்வருக்கு கமல் சார்பில் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் கமல்ஹாஸன் வந்துவிடுவார். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை முடித்துவிடுவோம். விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து கமல் நன்றி கூறுவார்' என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’