ஒ லுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை நோக்கி கடல் நகர்ந்து வருவதாக அப் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய நிலப்பரப்பில் சுமார் 100 மீற்றர் பகுதி ஏற்கனவே, கடலுக்குள் மூழ்கியுள்ளது.
இந் நிலையில், கடற்கரையினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்த தார்வீதியும் தற்போது கடலரிப்பில் சேதமடைந்துள்ளது. இதனால், குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி கடல் நகர்ந்து வருகிறது.
ஒலுவில் துறைமுக நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இப் பகுதியில் கடலரிப்பின் தாக்கம் தீவிரமடைந்து காணப்படுகிறது.
இதனால், கடற்கரையை அண்டியிருந்த பல கட்டிடங்கள், கிணறுகள், வாடிகள் கடலரிப்பின் காரணமாக கடலுக்குள் மூழ்கி விட்டன. இதனையடுத்து இப் பகுதியிலுள்ள பொதுமக்கள் இந்த விவகாரம் குறித்து பல்வேறு உயர் மட்டங்களுக்கும் அறிவித்ததோடு, கடலரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டியிருந்தனர்.
இதனையடுத்து, ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் ஈடுபட்டோர், துறைமுகத்தினை அண்டிய சில கடற் பகுதிகளில் பாரிய பாராங்கற்களை கொட்டி வந்தனர். இருந்த போதும் கடலரிப்பின் தீவிரம் இதுவரை குறையவேயில்லை என்று இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கிருந்த தென்னை மரங்கள் பல்வேறு தடைகளையும் வீழ்த்தி, உடைத்துக் கொண்டு கடலரிப்பு தற்போது குடியிருப்பு பகுதியினை நோக்கி நகர்ந்து வருகிறது.
இறுதியாக கடலுக்கும் நிலப் பகுதிக்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த தார் வீதியும் தற்போது கடலரிப்பினால் சேதமைந்துள்ளது. இதனால், குடியிருப்பு பகுதி நோக்கி தற்போது கடல் நகர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, இந்தப் பகுதி மீனவர்களும் கடலரிப்பினால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களின் தொழில் உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்குரிய வாடிகள் பல தடவை கடலரிப்பினால் சேதமடைந்துள்ளன. மீனவர்கள் புதிது புதிதாக வாடிகளை நிர்மாணிக்கின்ற போதும், கடலரிப்பு அவற்றினை சேதப்படுத்தி வருகின்றது.
எனவே, ஒலுவில் பிரதேசத்தில் மிக மோசமான அபாய கட்டத்திலுள்ள கடலரிப்பினைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இனியாவது, உரிய தரப்பினர் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும் என்று இந்தப் பிரதேசத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’