வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 ஜனவரி, 2013

வெள்ளம் என்ற இயற்கை அனர்த்தத்திற்கு அரசியல் நலன்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்


வெள்ள அனர்த்தம் பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை.
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, வெள்ள அனர்த்தம் பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை மீதான இன்றைய விவாதத்திலே எனக்கும் உரையாற்றச் சந்தர்ப்பம் தந்தமைக்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். குறிப்பாக, வெள்ள அனர்த்தம் என்பது நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற ஒன்று அல்ல. அது இயற்கையின் தாக்கம். இந்த இயற்கையின் தாக்கத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் பொதுவானது. எனவே, இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கக் கட்சி, எதிர்க்கட்சி என்பதற்கு அப்பால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து சேவை செய்ய வேண்டிய பொறுப்பிருக்கின்றது என்பதை முதலில் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். இந்த வெள்ள அனர்த்தம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக வட மாகாணத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பாக நான் இந்தச் சபையின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன். அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் மாவட்ட செயலகங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கணிசமான அளவு உதவியிருக்கின்றன. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பல்வேறு அவசர உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு நான் இந்த அவையிலே நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். தொலைபேசியின் ஊடாக எந்த நேரத்தில் தொடர்புகொண்டாலும் அவர் எங்களது பிரச்சினைகளைப் பொறுமையாகக் கேட்டு, உடனடியாகத் தீர்த்து வைப்பார். அந்த வகையில் அவரும் அவரது அமைச்சின் அதிகாரிகளும் உடனடியாகச் செயற்பட்டு மிகவும் மகத்தான பணியைச் செய்து வருகின்றார்கள். நான் மீண்டும் வட மாகாணத்தின் பாதிப்புக்கள் தொடர்பாகத் தங்களின் கவனத்தை ஈர்க்கின்றேன். வட மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின்பொழுது மேதகு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்திருக்கின்றார். குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களில் இன்றும்கூட அதிகபட்ச மழை பெய்துவருகின்றது. இன்று அங்குள்ள குளங்களில் வெள்ள நீர் நிரம்பிப் பாய்கின்ற நிலைமையால் மக்கள் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தோன்றியிருக்கின்றது. வவுனியாவிலே கடந்த சில வாரங்களாகப் பெய்து வருகின்ற மழையினால் 190 குளங்கள் அழிவைச் சந்தித்தித்துள்ளன. நான்கு அணைக்கட்டுக்கள் உடைப்பெடுத்திருக்கின்றன் 24 வீதிகள் அழிவடைந்திருக்கின்றன. இன்று காலை வரை மொத்தமாக 14,551 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இவற்றில் 4,551 குடும்பங்கள் விவசாயக் குடும்பங்கள் ஆகும். வவுனியா மாவட்டத்திலே 292 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. கிட்டத்தட்ட 11,523 ஏக்கர் நெல்வயல்கள் அழிவடைந்துள்ளன. மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகூடப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. 3,675 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட மரக்கறிச் செய்கை, பழப் பயிர்ச் செய்கை மற்றும் தானியப் பயிர்ச் செய்கைகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இந்த வெள்ள அனர்த்தம் கிளிநொச்சி மாவட்டத்தில்தான் அதிக பாதிப்புக்களை உருவாக்கியிருக்கின்றது. இதனால் கிட்டத்தட்ட 18,155 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2,639 வீடுகள் அழிந்துள்ளன. இவை எல்லாம் மீள்குடியேறிய மக்களின் தற்காலிக வீடுகள். இதனால் இந்த மக்கள் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்திலே 7,219 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அழிவுக்குள்ளாகியிருக்கின்றது. 313 ஏக்கர் மேட்டுநிலப் பயிர்ச் செய்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேநேரத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து, இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலே தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தாராளமாகச் சமைத்த உணவை வழங்கி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல்வேறு தொண்டர் ஸ்தாபனங்களும் கூட்டுறவுத் துறையும் வட மாகாண ஆளுநரின் உதவியுடன் பால்மா பக்கட்டுக்கள் உட்பட பல்வேறு பெறுமதிமிக்க உணவுப் பொருட்களைத் தாராளமாகவும் திருப்திகரமாகவும் வழங்கி வருகின்றன. அங்கு இன்னமும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இரணைமடுக் குளத்தின் எல்லா வான் கதவுகளும் திறந்துவிடப்பட்ட நிலையில் அவற்றினூடாக நீர் பாயும் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் தொடர்ச்சியாக மிகுந்த பாதிப்புக்களைச் சந்தித்துவருகின்றார்கள். இரணைமடுக் குளத்தில் கிட்டத்தட்ட 33 அடி நீர் நிரம்பியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 30 அடி வரை நீர் நிரம்பியதும் மிகுதி வெளியேற்றப்பட வேண்டும். அந்தவகையில் தொடர்ச்சியாக நீர் உள்ளே வந்துகொண்டிப்பதால் எல்லா வான்கதவுகளும் திறந்த நிலையில் காணப்படுகின்றன. இங்கு குறிப்பாக நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், ஏராளமான போக்குவரத்து வீதிகள் இந்த வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத்தான். மக்களின் போக்குவரத்து பல இடங்களில் தடைப்பட்டிருக்கின்றது. இவைகளையும் சீர்செய்யவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. அதேபோல, மன்னார் மாவட்டத்திலும்கூட 6,758 குடும்பங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, இவற்றில் 5,838 குடும்பங்கள் விவசாயக் குடும்பங்களாகும். அங்கு 10,735 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளது. அதேவேளை, 262 ஏக்கர் மேட்டுப் பயிர்ச்செய்கையும் அந்த மாவட்டத்திலே அழிவுக்குள்ளாகியிருக்கிறது. அத்துடன் அங்குள்ள 92 குளங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. 7 வீதிகள் முற்றுமுழுதாக அழிவுக்குள்ளாகியிருக்கின்றன. இதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,821 வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் அநேகமாக தற்காலிக வீடுகளாகும். மேலும் 3,563 குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. கேப்பாப்பிலவு போன்ற இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் இதைவிட அதிகமாகுமென்பதை நான் இந்த அவையிலே குறிப்பிட விரும்புகின்றேன். முல்லைத்தீவு மாவட்டத்திலே 1,512 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது. மேலும் 1,690 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேட்டுப் பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பழச்செய்கை, மரக்கறி விவசாயிகளுக்கு இது பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாகப் புனரமைக்கப்பட்ட யு-35 வீதியிலுள்ள பெரிய பாலமொன்று தகர்ந்திருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 137 உள்ளூர் வீதிகளும் 11 பிரதான வீதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இந்த அனர்த்தம் ஒட்டுமொத்த வட மாகாண மக்களின் சகஜ நிலைமைகளைப் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. யாழ். மாவட்டத்தில் நேற்றும் இன்றும் அதிகளவில் மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 1,668 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 1,522 வீடுகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக காரைநகர், ஊர்காவற்றுறை போன்ற பிரதேசங்களில் இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. யாழ். மாவட்டத்தில் மொத்தம் 2,612 குடும்பங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்ற நெற்பயிர் மற்றும் மேட்டுப் பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு நிச்சயமாக ஏதாவது நட்டஈடு வழங்கியே ஆக வேண்டும். நாட்டில் ஏற்பட்ட வரட்சி காரணமாகக் கடந்த சிறுபோகப் பயிர்ச்செய்கையிலும்கூட மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருந்த நெற்பயிர்ச்செய்கை விவசாயிகள் மிகவும் நம்பிக்கையுடன் பெரும்போகப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டார்கள். இருந்தபோதிலும், இந்த அனர்த்தம் மீண்டும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத பாதிப்புக்களை அவர்கள் எதிர்கொண்டிருப்பதால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் மேதகு ஜனாதிபதி அவர்களும் இவர்களின் விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென்று நான் இந்த அவையினூடாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அதேநேரத்தில் சிறு மழை பெய்தால்கூட வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய காரணிகளை கண்டறிந்து அவற்றைத் தீர்க்க வேண்டும். குறிப்பாக எமது பகுதிகளிலே 30 ஆண்டுகால யுத்தம் எல்லாக் கட்டமைப்புக்களையும் சீர்குலைத்துவிட்டது. ஆகவே, சீராக நீர் வடிந்தோடும் தன்மையை உருவாக்குவதற்கான பொறுப்பை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏற்று உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென்பதையும் நான் இந்த அவையிலே தெரிவிக்க விரும்புகின்றேன். மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதுபோல அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இந்த விடயத்தில் கூடுதலான அக்கறை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, விடைபெறுகின்றேன். நன்றி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’