கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான விஸ்வரூபம் திரைபடம் திரையிடுவதை கண்டித்து மருதானை சினிசிட்டி திரையரங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்றுகையிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அந்த திரைப்படத்தை இலங்கை திரையரங்குகளில் திரையிடுவதற்கு அனுமதிக்கவேண்டாம் என்றும் அந்த அமைப்பு ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபருக்கும் ஊடக அமைச்சுக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் விசேட கூட்டம் இன்று புதன்கிழமை காலை கொழும்பிலுள்ள தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்திலேயே விஸ்வரூபம் திரைபடத்தை திரையிடும் மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமான சினிமாக்கள் ஊடாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்ட முன்வந்துள்ளார்.
இதன் ஊடாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் சித்தரித்துள்ளதுடன் முஸ்லிம்கள் புனிதமாக கருதும் திருமறையான அல் - குர்ஆனையும் கொச்சைப்படுத்தி இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இந்த திரைப்படம் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரைக்கும் எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு இஸ்லாத்தையும் முஸ்லிம்களும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என தமிழகத்தின் பலம்மிக்க இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் எந்தவொரு திரையரங்குகளிலும் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கையிலும் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டாம் என திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கோரிக்கைவிடுத்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கும் இந்த திரைப்படத்தை தடை செய்யும்படி கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது".
உலகம் முழுவதும் எதிர்வரும் 25ஆம் திகதி விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’