இ லங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்களைத் திருப்பி அனுப்பாமல், அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்குமாறு மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவுஸ்திரேலியா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில், 03-12-2012 திகதியிடப்பட்ட ஆங்கில மொழியிலான கடிதமொன்றை அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகத்தினூடாக அவர் அனுப்பியுள்ளதாக மன்னார் ஆயர் இல்லத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்படும் தமிழ் மக்களுடைய பரிதாபகரமான நிலை தொடர்பாக நான் அவசரமாக உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
வெளிநாட்டில் அரசியல் அடைக்கலம் கோரிய பின்னர் திருப்பி அனுப்பப்படுபவர்கள் அரசாங்கத்தினாலும் அதனுடைய ஆயுதப் படையினராலும் துரோகிகளாகக் கணிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டியவர்களாக இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இவர்களில் சிலர் படையினருக்கு தகவல் கொடுப்பவர்களாக இருப்பதற்குக் கட்டாயப்படுத்தப்படுவதால் சமூகத்திடையே பதற்றநிலை உருவாகின்றது.
இவர்கள் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாடுகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், விசாரணைகள், கண்காணிப்பு மற்றும் ஏனைய வகையிலான துன்புறுத்தல்களுக்கும் பாகுபாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறானவர்களுக்கு ஒரே ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் இருக்கக்கூடிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
பல சந்தர்ப்பங்களில் வேண்டப்படாதவர்கள் என அரசாங்கத்தினாலேயே அவ்வமைப்புக்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில், எமது பிராந்தியத்தில் தற்போது காணப்படும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும் போது அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியிருக்கும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்பதே எனது கருத்தாகும்.
இலங்கையிலிருந்து அடைக்கலம் கோரி வந்தவர்களை அரவணைத்துக் கொள்ளும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை பாராட்டி நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், இவ்வாறு அடைக்கலம் கோருபவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’