இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டொனி கிரெய்க் தனது 66ஆவது வயதில் இன்று காலமானார்.
நுரையீரல் புற்றுநோயினால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த டொனி கிரெய்க், நோயின் தாக்கம் அதிகரித்ததாலேயே மரணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து சார்பாக 58 டெஸ்ட் போட்டிகளிலும், 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றிய டொனி கிரெய்க், இங்கிலாந்தில் தோன்றிய மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
58 டெஸ்ட் போட்டிகளில் 40.43 என்ற சராசரியில் 8 சதங்கள், 20 அரைச்சதங்கள் உட்பட 3599 ஓட்டங்களைப் பெற்ற அவர், 32.20 என்ற சராசரியில் 141 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
ஓய்வின் பின்னர் நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றிய டொனி கிரெய்க், இலங்கை அணி மீதான அதிக விருப்பம் கொண்டவராக இலங்கை ரசிகர்களால் அறியப்பட்டிருந்தார்.
1996ஆம் ஆண்டு உலகக்கிண்ண இலங்கை வெற்றியின் போதும், அதன் பின்னர் இலங்கை வீரர்கள் மீது நெருக்கமான அன்பைக் கொண்டிருந்த அவர், நேர்முக வர்ணனையாளராக இலங்கையில் இடம்பெற்ற உலக டுவேன்டி டுவென்டி தொடரிலேயே இறுதியாகக் கடமையாற்றியிருந்தார்.
இலங்கையில் தனது கடமையை முடித்துவிட்டு அவுஸ்ரேலியா சென்றிருந்த போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டிருந்த போதிலும், இன்று அவரது வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வைத்தியசாலைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர் அங்கு வைத்து மரணமடைந்தார்.
இலங்கைக் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் அன்பாக நேசிக்கப்படும் டொனி கிரெய்க் இன் மரணம் இலங்கைக் கிரிக்கெட் ரசிகர்களால் இலங்கைக் கிரிக்கெட்டிற்கான மிகப்பெரிய இழப்பு என வர்ணிக்கப்பட்டுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’