அ ரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவு குழுவின் ஊடாக உரிய தீர்வை காண்பதே சிறந்த வழியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதில் தாமதமின்றி பங்குபற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுக்களிற்கு நீண்ட வரலாறு உண்டு. சிக்கலான பிரச்சினைகளுக்கு உகந்த முறையில் தீர்வு காண்பதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. எனக்கும் அவ்வாறான குழுக்களில் ஈடுபட்ட நீண்ட அனுபவம் உண்டு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்..
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய சிரேஷ்ட அரசியல் விவகார அதிகாரி ஹிடோகி டெனுடனான சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை நீதி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
"பல கட்சிகளை சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் வித்தியாசமான சிந்தனை போக்குள்ளவர்களும் இருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கால தாமதம் நிலைமையை சிக்கலாக்கும். இதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான விரிசல் அதிகரித்து துருவப்படுத்தல் தீவிரமடைய கூடும். இதனால் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதுவே சிறந்த வழியாகும்.
அதனால் நாடாளுமன்ற தெரிவு குழுவில் கலந்துகொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை காலதாமதம் இன்றி ஏற்றுக்கொள்வதே உசிதமானது. அதற்கு இணங்காமல் விடுவது நிலைமையை மேலும் சிக்கலாக்க கூடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சில நிபந்தனைகளை விதிக்க முன்வந்தனர்.
ஏற்கெனவே அரசாங்கத்துடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை விட்ட இடத்திலிருந்தே தொடரவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பினர். முஸ்லிம் தரப்பையும் இந்த பேச்சுவார்த்தையில் உள்வாங்க அவர்கள் இணங்கவில்லை. அரசாங்கத்தோடு அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்துவதால் முஸ்லிம்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசிக்கொள்ளலாம் என்கின்றனர்.
இனப்பிரச்சினையை தீர்வை நோக்கிய எத்தகைய பேச்சுவார்த்தைகளிலும் மூன்றாம் தரப்பாக முஸ்லிம்களின் பரிமாணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்த நாட்டு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையை பெற்றுள்ள எனது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
பொதுவாக நாடு முழுவதிலும் பரந்தும் குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செறிந்தும் வாழும் முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிட்டு இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக் கூடியதும் நிரந்தரமானதுமான தீர்வை காண இயலாது.
அத்துடன் இனப்பிரச்சினையுடன் தொடர்பான முன் அனுபவமுடைய தென் ஆபிரிக்கா போன்ற நாடொன்றின் மத்தியஸ்தமும் பெரிதும் வரவேற்கத்தக்கதாக கருதப்படுகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தையும் வழிமுறையையும் அதற்கான கால அட்டவணையையும் ஜனாதிபதி விஷேட செயலணி இனங்கண்டுள்ளது.
அதனடிப்படையில் முக்கிய விதந்துரைகள் காலக்கிரமத்தில் படிப்படியாக செயல்படுத்தப்படவுள்ளன. இரு வகையினரான தமிழ் சிறைக் கைதிகள் உள்ளனர். வெவ்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் போதிய சாட்சியங்களும் சான்றுகளும் அற்ற நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களும் உள்ளனர்.
தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நான்கு விஷேட மேல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.தற்பொழுது கடமையாற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை நூறு பேர் வரை அதிகரிப்பது பற்றி நீதிச் சேவைகள் ஆணைக்குழு கவனம் செலுத்துகின்றது.
நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை துரிதமாக விசாரித்து அவற்றுக்கான தீர்ப்புகளை வழங்குவதற்குரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதித்துறையை பொறுத்தவரை புதிய சட்டங்கள் இயற்றப்படுவதோடு சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அரசியல் அதிகாரி ஜூங் ஹூவான் லீ, நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலநதுகொண்டனர்.
2013ஆம் அடுத்த ஆண்டு இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகார திணைக்கள உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மெனின் விஜயத்திற்கு முன்னோடியாகவே இவர்களது வருகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’