வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 நவம்பர், 2012

வீட்டுக்குள் நடக்குமா மாவீரர் தினம்? கூட்டுக்குள் குமுறும் ரெமிடியஸ்!


தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது வீட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தினத்தை கொண்டாடுவார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்புப் பிரமுகரும், யாழ். மாநகர சபை எதிர்க் கட்சித் தலைவருமான மு. ரெமிடியஸ்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவரது உரை வருமாறு:- “ 1970 ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் அரசியல்வாதிகள் உணர்ச்சிபூர்வமாக பேசிப் பேசி இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்தனர். பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான போராட்டங்களை வெடிக்க வைத்தனர். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் இறக்கின்றமைக்கு வழி வகுத்தனர். ஆனால் இந்த அரசியல்வாதிகள் சொந்தப் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். பிள்ளைகளை வெளிநாடுகளில் சுக போகமாக வாழ வைத்தார்கள். வடக்கு, கிழக்கில் ஏழைகள், எளியவர்கள், கிராமத்தவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் போராட ஆயுதம் ஏந்தினர். உயிரை தியாகம் செய்தனர். அதே மாதிரியான நிலையை மீண்டும் ஏற்படுத்தத்தான் முயல்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்திலோ, வட மாகாணத்திலோ இல்லை என்பது முக்கியமான விடயம். உணர்ச்சிபூர்வமான பேச்சுக்கள் மூலம் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டி விடுகின்றார்கள். ஒரு வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்கப் பார்க்கின்றார்கள். இளைஞர்களை பலி கொடுக்க முயற்சிக்கின்றார்கள். இவர்களின் குடும்பங்களும் பிள்ளைகளும் யாழ்ப்பாணத்திலோ, வட மாகாணத்திலோ இல்லை என்பது முக்கியமான விடயம். தற்போது இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி வருகின்றது. இவ்வேளையில் இவ்வாறான செயற்பாடுகளும், உணர்ச்சி மிக்க பேச்சுக்களும் யாழ்ப்பாணத்தில் இராணுவம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்கிற விடயத்தை அரசு நியாயப்படுத்துவதற்கு ஆதாரங்களாக இருக்கப் போகின்றன. இராணுவத்தினராலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி வன்முறைகள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இவ்வாறான வன்முறைகளை தூண்டி, இத்தகைய செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவாக செயற்படுவோமாக இருந்தால் எமது சமூக நிலை சீர் குலைகின்றமைக்கும், அவசர கால சட்டத்தை அரசு உருவாக்குகின்றமைக்கும், நாங்களாகவே வழி வகுத்து கொடுத்தவர்களாகி விடுவோம். இவர்களது பத்திரிகைகளில் வருகின்ற படங்களை சர்வதேசத்துக்கு அரசு ஆதரமாக காட்டுவதன் மூலம் இராணுவம் யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டிய தேவையை நியாயப்படுத்தி விடும். இதற்கு நாம் துணை செய்தவர்கள் ஆகி விடுவோம். இந்துக்களின் விசேட தினத்துக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படலாம் என்கிற செய்தி இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளிப்படையாக தென்பட்ட ஒரு விடயம். எமது தமிழ் அரசியல்வாதிகள் ஐனாதிபதியுடனோ, பாதுகாப்பு அமைச்சுடனோ, உயர் அதிகாரிகளுடனோ தொடர்பு கொண்டிருக்க வேண்டும், எமது புனித நாளை கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்க வேண்டும். தவறியமை துரதிஷ்டமாகும். மாறாக மாவீரர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையே ஒரு சில ஏகப் பிரதிநிதிகள் முன்வைத்தார்கள். இக்கோரிக்கையால் தமிழர்கள் இப்புனித நாளை அனுஷ்டிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நான் மாவீரர் தினம் கொண்டாடக்கூடாது என்று கூறவில்லை. இங்கு அறிக்கை விட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவரது வீட்டிலோ அல்லது காரியாலயத்திலோ ஒரு ஈகைச் சுடர்கூட ஏற்றினாரா? என்பதைச் சிந்திக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் விளக்கீட்டுத் தினத்தில் மாவீரர் தினம் வராது. வேறு ஒரு தினத்தில்தான் மாவீரர் தினம் அமையப் போவது நிச்சயம். அந்நேரத்தில் அவர்களது வீட்டில் இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வை இதய சுத்தியுடன் அனுஷ்டிப்பார்களா? இதே பல்கலைக்கழக மாணவர்கள் 2009 ஆம் ஆண்டு மாநகர சபை தேர்தலின்போது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தோளில் தூக்கிச் சென்றார்கள். 2010 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய மாணவர்கள் அவர்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார்கள். இவை எல்லாம் உண்மைச் சம்பவங்கள். எனவே கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் எடுக்க வேண்டும். மக்களது இயல்பான நிம்மதியான வாழ்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளில் எந்தவொரு அரசியல்வாதியாவது கடந்த காலப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுக்கு உதவி இருக்கின்றார்களா? அல்லது இக்கைதிகளின் விடுதலைக்கு சட்டத்தரணியை நியமிக்க ஒரு ஆயிரம் ரூபாயாவது செலவு செய்து இருக்கின்றார்களா? எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் எத்தீர்மானத்தையும் நான் தனிப்பட்ட முறையில் ஆதரிக்க மாட்டேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’